‘ஆனந்த விகடன்’ இதழோடு புதிய இணைப்பாக வெளிவரும் “என் விகடன்”-யின் முதல் பிரதி வெளியீட்டு விழாவும், விகடன் ஆரம்பிக்கப்பட்டு 85 வருடங்களாவதைக் கொண்டாடும் வகையிலும் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையில், வாரம் ஒரு பிராந்தியம் என்ற வகையில் கோவை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, சென்னை ஆகிய நகரங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளில் திரையிடுவதற்காக நூற்றுக் கணக்கான பிரமுகர்களின் பேட்டிகளும், ‘என் விகடன்’ பற்றிய ஒரு தீம் பாடலும் தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பை நண்பர் அந்தோணி திருநெல்வேலி (‘நீயா நானா’ இயக்குனர்) ஏற்றிருந்தார்.

பேட்டிகளை எடுக்கும் வேலையை அவர் “நடந்தது என்ன” நிகழ்ச்சியின் இயக்குனரான நண்பர் சாய்-யிடம் ஒப்படைத்திருந்தார். தீம் பாடல் எடுத்துக்கொடுப்பதற்காக அந்தோணி என்னை அணுகினார்.

அந்த வேலையில் ஈடுபட்டதின் மூலம் விகடன் குழுமத்தின் உரிமையாளர் திரு. சீனிவாசன், ஆசிரியர்கள் திரு. கண்ணன், திரு. அசோகன் ஆகியோரையும் சில நிருபர்களையும் சந்தித்துப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன். ஆரம்பத்தில் அவர்களுக்கும் எனக்கும் சரியான புரிதல் இல்லாததால் சில முரண்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் இறுதியில் நான் இயக்கிய வீடியோவைப் பார்த்த பின்பு என்னிடம் மிகுந்த மரியாதையாகவும் நட்பாகவும் பழகினார்கள்.

அந்த தீம் பாடலை எடுப்பதில் அடிப்படையாக இருந்த பிரச்சனை, அது அவர்கள் சொல்லியதுபோல ‘ஒரு’ பாடல் அல்ல என்பதுதான். தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கென்று தனித்தனியாக ‘என் விகடன்’ பதிப்புக்கள் வெளியாகின்றன. அவை அந்தந்த மண்டலங்களின் செய்திகளை மட்டுமே தாங்கிவரும். ‘விகடன் இப்போது மண்ணின் மணத்தோடு உங்களை நெருங்கி வருகிறது’ என்பதுதான் பாடலின் செய்தி. ஆகவே ஒவ்வொரு மண்டலத்தின் சிறப்பான அம்சங்கள் இடம்பெறும் வகையில் ஐந்து விதமான பாடல்கள் ஒரே மெட்டில் அவர்களுக்கு வேண்டும். அந்தப் பாடல்களை அந்தந்த மண்டலங்களின் உள்ளூர் தொலைக்காட்சிகளில், வானொலிகளில் இந்த ஆண்டு முழுவதும் ஒளி-ஒலிபரப்புவதுதான் அவர்களின் எண்ணம். இரண்டு சரணங்கள் கொண்டதாக பாடல் இருக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். எல்லாப் பாடலுக்கும் பல்லவி ஒன்றே என்றாலும், இரண்டு சரணங்களும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக எழுதப்பட வேண்டுமென்றார்கள்.

நானும் ஆர்வமாக, ஒவ்வொரு மண்டலத்துக்கான பாடலையும் தனித்தனியாகவே சிறப்பாகப் படம்பிடிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டி அதற்கான பட்ஜெட் ஒன்றையும் கொடுத்தேன். அதைப் பார்த்து அவர்கள் அலறிவிட்டார்கள். நீங்கள் 5 பாடல்கள் எடுக்கவேண்டியதில்லை, ஒரு பாடலுக்கு 5 வெர்ஷன்கள் எடுத்தால் போதும் என்றார்கள். அதாவது மொத்தப் பாடலிலும் அந்தந்த மண்டலத்தைக் காட்டவேண்டியதில்லை, சரணங்களின்போது மட்டும் காட்டினால் போதும். பல்லவியில் தமிழகம் முழுமைக்குமான காட்சிகள் வரட்டும் என்றார்கள். அந்தந்த மண்டலம் பற்றிய காட்சிச் செருகல்களுக்கு இரண்டாம் யூனிட் ஒன்றையும் அனுப்பி சாதாரண கேமராவில் எடுத்துச் சேர்த்துக்கொள்ளலாம் என்றார்கள். பிறகு புதிய திட்டத்திற்கான பட்ஜெட் போடப்பட்டது, முந்தையதை விட அது நாலில் ஒரு பங்கே இருந்தது.

.

சென்னை :

.

அவர்களுடைய முதல் விழா கோவையில் நடந்ததால் அந்த மண்டலத்தை (கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், சேலம், நாமக்கல், ஈரோடு) மட்டும் முதலில் படமெடுக்கலாம் என்று நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது முதல் பாடலிலேயே மொத்த தமிழகத்தின் காட்சிகள் தேவைப்பட்டன. கோவை நிகழ்ச்சி நடைபெறும் தேதி நெருங்கிக்கொண்டிருக்க படப்பிடிப்பிற்கான நாட்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் பாடலின் ஒலிப்பதிவே நடந்திருக்கவில்லை, ஒலிப்பதிவென்ன மெட்டே போடப்படவில்லை, மெட்டென்ன இசையமைப்பாளரையே இறுதி செய்யாமல் இழுபறியாக இருந்தது நிலைமை.

ஒரு வேலையை இக்கட்டான சூழ்நிலையில் பாதியிலேயே விட்டுவிட்டு கழண்டுகொள்வது சரியல்ல, ஒத்துக்கொண்ட வேலையை முடித்துக்கொடுத்துவிடுவோம் என்று நான் பொறுமை காத்தேன். அனைத்துவகை காம்ப்ரமைஸ்களுக்கும் தயாராகி டெட்லைனுக்காக வேலை செய்வதுதான் ‘பொளைக்கற பிள்ளைக்கு அடையாளம்’ என்பது தொலைக்காட்சித் துறை எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் பாலபாடம். ஆக நான் தைரியமாக ஒரு முடிவெடுத்தேன்.

அந்தோணியிடம் நான், ‘நீங்கள் யாரை வேண்டுமானாலும் இசையமைப்பாளராகப் போடுங்கள், அவர் எந்த டியூன் வேண்டுமானாலும் போடட்டும், எப்படிப்பட்ட பாடலாக வேண்டுமானாலும் அது ஒலிப்பதிவாகட்டும், நான் எடுத்துவரும் காட்சிகளை அந்தப் பாடலுக்குப் பொருந்தும்படி படத்தொகுப்பு செய்துதருவேன்’ என்று சொல்லிவிட்டு, தமிழ்நாடு முழுக்கப் பத்து நாட்கள் பயணம் செய்தபடியே படமெடுக்கும் திட்டத்தோடு நான் கிளம்பிவிட்டேன்.

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான பல்வேறு நிலக்காட்சிகளையும், சமூகக் கலாச்சார அம்சங்களையும், பலதரப்பட்ட மனிதர்களையும் அழகுணர்ச்சியோடு இந்தப் பத்து நாட்களில் படமெடுத்துத் திரும்பவேண்டும் என்பது ஒரு சவால். ஆனால் அதைவிட, எவ்வகையான டியூன் வர வாய்ப்பிருக்கிறது, அதற்கு எந்த மாதிரியான காட்சிகள் தேவைப்படலாம் என்பதை யூகித்துப் படமெடுப்பது என்பது இன்னும் பெரிய சவால். மெதுவாக நகரும் மெலடியாகவோ, துள்ளல் இசையாகவோ, முழுக்க மேற்கத்திய பாணியிலோ, அல்லது முழுக்க நாட்டுப்புற மெட்டாகவோ அந்தப் பாடல் வந்துவிட்டால் என்ன செய்வது? எந்தக் காட்சிகளைப் பிரதானமாகப் பயன்படுத்துவது, வரிகளுக்கு எந்த ஷாட்டுகள், இசைக்கு எந்த ஷாட்டுகள் என்றெல்லாம் பிரித்துப் படமெடுக்க முடியாத நிலையில், முழுக்க முழுக்க உள்ளுணர்வின் வழிகாட்டுதலின்படி காட்சிகளை எடுத்தேன் என்பதே உண்மை.

.

திருச்சி :

.

பிறகு இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கொடுத்த மெட்டுக்களில் ஒன்றை தேர்ந்தெடுத்தார்கள். ஐந்து மண்டலத்துக்கும் அந்தந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பாடலாசிரியர்கள் எழுதுவதென்று முடிவாயிற்று. சென்னைக்கான பாடலை எழுதிய நா.முத்துக்குமாரின் பல்லவியே ஐந்து பாடல்களுக்குமான பல்லவியாக முடிவுசெய்யப்பட்டது. கோவைக்கான சரணங்களை தாமரை எழுதினார், திருச்சிக்கானதை யுகபாரதி எழுதினார். மதுரை மண்டலத்துக்கானதை நெல்லை ஜெயந்தா எழுதினார், புதுச்சேரிக்கு கபிலன் எழுதினார்.

நா.முத்துக்குமார், நான் படப்பிடிப்பில் இருந்தபோதே போனில் தொடர்புகொண்டு பாடலைப் பற்றி கேட்டறிந்தார். பிறகு சில பல்லவிகளையும் சரணங்களையும் போனிலேயே படித்துக்காட்டி, இதுபோல இருக்கலாமா என்று கேட்டுக்கொண்டார். அடுத்த இரு நாட்களில் அவரின் 5 பல்லவிகளும் 6 சரணங்களும் எனக்கு இமெயிலில் அனுப்பிவைக்கப்பட்டன. தாமரையும் கபிலனும் அப்போது மிகுந்த வேலைப்பளுவோடு இருந்ததால் சிக்கனமாகவே பேசினார்கள், சிக்கனமாகவே எழுதித்தந்தார்கள். பாடல் ஒலிப்பதிவானதிற்குப் பிறகு கபிலன் மீண்டும் மீண்டும் போன்செய்து சரியாக வந்ததா என்று கேட்டுக்கொண்டிருந்தார். யுகபாரதி நேரில் ஸ்டூடியோவுக்கு வந்து நான் எடுத்திருந்த வீடியோவைப் பார்த்து, நானும் இசையமைப்பாளரும் கேட்ட திருத்தங்களை எழுதிக்கொடுத்தார். நெல்லை ஜெயந்தா இன்னும் ஒருபடி போய், படத்தொகுப்பு நடக்குமிடத்திற்கே வந்து தனது பாடலைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இந்த வேலைக் காலத்தில் என்னுடைய நெருங்கிய நண்பராகவே ஆகிவிட்டார். மிகத் திறமையான மனிதர், தேர்ந்த பயிற்சியும் அனுபவமும் வாய்த்தவர். அவருடைய ‘அழகிய தீயே’ ‘நளதமயந்தி’ படப்பாடல்களுக்கு நான் ரசிகன். என்னுடைய முந்தைய சீரியலின் தலைப்புப் பாடலையும் அவர்தான் இசையமைத்திருந்தார். பாடகர் ஸ்ரீநிவாசன் பாடியபோது நான் ஒலிப்பதிவுக்குப் போகமுடியவில்லை. மாணிக்க விநாயகம் 5 பாடல்களுக்கான சரணங்களையும் பாடியபோது நான் உடனிருந்தேன். அவருடைய ஒத்துழைப்பும் சிறப்பானதே.

.

மதுரை :

.

இதற்கிடையில் ஹார்ட் டிஸ்க் பழுதானதால் சென்னையில் படமெடுத்திருந்த காட்சிகளெல்லாம் முற்றிலுமாக அழிந்துபோயின. அதில் இடம்பெற்றிருந்த பழம்பெரும் திருவல்லிக்கேணி மசூதியின் காட்சிகள் மிகச் சிறப்பானவை. வேறு வழியில்லாமல் மீண்டும் ஒருநாள் படப்பிடிப்பு நடத்தினோம், இம்முறை திருவல்லிக்கேணி மசூதி உற்பட பலவற்றை மீண்டும் எடுக்க முடியாமல் ஆனது.

கோவைக்கான பாடலை முதலில் படத்தொகுப்பு செய்து கொடுத்தபோது, திரு. சீனிவாசன் ஆச்சர்யப்பட்டுப்போனார். நான் முழுத்திருப்தி இல்லாமல் நெருக்கடியான நிலையில் வேலைசெய்துகொண்டிந்தேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்பதால், பாடலின் வீடியோ மிகச் சுமாராகவே வரும் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். “இசை முடிவாகாமல் எடுக்கப்பட்ட பாடல் போலவே இல்லை. எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறது. சொல்ல வேண்டிய செய்தி மிகக் கச்சிதமாகக் காட்சியாகியிருக்கிறது” என்று மகிழ்ச்சியாகக் கை குலுக்கினார்.

.

கோவை :

.

பாடல் ஒலிப்பதிவான பின்பு அதற்கேற்ப காட்சியாக்கம் செய்திருந்தால், இந்தப் பாடல்களுக்கு நீதி செய்ததாக இருந்திருக்கும் என்கிற மனக்குறை எனக்கு இப்போதும் இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாகவே முழுப்பாடலையும் எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது இருப்பதைப் போல, ஒரே மாதிரி ஆரம்பித்து ஒரே மாதிரி முடிவதாகவும், கோவைக்கான பாட்டில் திருவண்ணாமலை எங்கிருந்து வந்தது என்கிற குழப்பம் நேராமலும் இருந்திருக்கும்.

இந்தப் பாடலில் என்னோடு உழைத்த உதவி இயக்குனர்கள் ராஜன், பாஸ்கர் அய்யர், கோவிந்தராஜ், ஒளிப்பதிவாளர் ஆண்டனி, படத்தொகுப்பாளர் பிரவீன், மற்றும் ஒவ்வொரு ஊரிலும் எங்கள் படப்பிடிப்பிற்கு உதவிய செய்தியாளர்களுக்கும் என் நன்றிகள். விகடன் நிறுவனத்திலிருந்து ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்ட கதிர்வேலன், கார்த்திகேயன், செந்தில்குமார் ஆகியோருக்கும் நன்றி.

.

[ புதுச்சேரி பாடலுக்கான யூடியூப் இணைப்பு கிடைக்கவில்லை, தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளலாம் ]