.

உலகத் திரைப் படைப்பாளிகளில் முக்கியமான ஒரு முன்னோடி ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா. அவர் இயக்கிய மூன்று காட்ஃபாதர் படங்களும், ‘செய்நேர்த்தியும், முழுமையும், தனித்துவமும் கொண்ட படம்’ என்றால் என்ன என்பதற்கு எக்காலத்திலும் உதாரணமாக விளங்கக்கூடியவை. அவருடைய அபொகாலிப்ஸ் நவ், டிராகுலா போன்ற படங்களும் திரைப்பட ஆர்வமுள்ள எவரும் அவசியம் பார்க்கவேண்டியவை. ஏராளமான புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் விளங்குபவர் அவர். சமீபத்தில் திரைப்பட மாணவர்கள் மற்றும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் இது.

.

"காட் ஃபாதர்" படப்பிடிப்பில் மர்லன் பிராண்டோவுடன் கொப்பலா

.

ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா :

சமீபத்தில் நான் ஒரு படத்தின் (Twixt, 2011) படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சொன்னேன், “நான் இன்று நிறைய கற்றுக்கொண்டேன்” என்று. ஆக, 45 ஆண்டுகள் திரைப்படத் துறையில் இருந்துவிட்டு, ஒரு சின்ன படத்தின் வேலைகளை முடித்து நான் வீட்டுக்குத் திரும்பி ‘இன்று நான் ஏராளமாகக் கற்றேன்’ என்று சொல்லமுடியுமானால், அது சினிமாவைப் பற்றிய ஒன்றை நமக்குக் காட்டுகிறது. ஏனென்றால் சினிமா மிக இளமையானது. அதற்கு வெறும் 100 வயதே ஆகிறது.

திரைப்படத்தின் ஆரம்ப நாட்களிலும், எப்படி திரைப்படம் எடுப்பதென்று யாருக்கும் தெரியாது. அவர்களிடம் ஒரு பிம்பப் படம் இருந்தது, அது அசைந்தது, அதைப் பார்வையாளர்களும் ரசித்தார்கள். ஒரு புகைவண்டி ரயில் நிலையத்துக்குள் வரும் படத்தை, வெறுமனே அசைவின் அழகை ரசிப்பதற்காகவே அப்போது மக்கள் பார்த்தார்கள்.

திரைமொழி என்பது, அசையும் பிம்பங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் தொடர்ச்சியான சோதனைகளின் விளைவாக உருவாகி வந்ததுதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முதல் 15-20 ஆண்டுகளுக்குள்ளாகவே அது ஒரு வணிக நிறுவனமாக மாறிவிட்டது. சினிமாவின் மூலம் பணம் சம்பாதிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் திரைக்கலையின் ஆரம்ப கர்த்தாக்களைப் பார்த்து “சோதனைகளில் ஈடுபடாதீர்கள். நாங்கள் சம்பாதிக்க வேண்டும். ஆகவே வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா என்று தெரியாத எதையும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்கள்.

எந்தக் கலைக்கும் மிக அடிப்படையான ஒன்று ரிஸ்க். நீங்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை என்றால், முன்பு எப்போதும் பார்த்திராத நிஜமான அழகுள்ள ஒன்றை எப்படி நீங்கள் புதிதாக உருவாக்க முடியும்? ரிஸ்க் இல்லாமல் சினிமா எடுப்பதென்பது, உடலுறவு இல்லாமலே குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பதைப் போன்றது. நீங்கள் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும்.

இப்போது நீங்கள் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று இதற்குமுன் எடுக்கப்படாத ஒரு படத்தை உருவாக்க விரும்புவதாகச் சொன்னால், அவர் உங்களை வெளியே தள்ளிவிடுவார், ஏனென்றால் அவர்களுக்கு எது வெற்றியடைந்ததோ, எது பணத்தைக் கொட்டியதோ அதேதான் மீண்டும் மீண்டும் வேண்டும். இன்னும் 100 வருடங்களில் சினிமா பெரிய அளவில் மாறிவிடும் என்றபோதும் அந்த மாற்றம் மிக மெதுவாகவே நடக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் இவர்கள்தான் உங்களை ரிஸ்க் எடுக்க விடுவதே இல்லையே.

நான் எந்த சினிமாவில் இருக்க விரும்புகிறேன் என்றால், நூறு வருடங்களுக்கு முன் அது தோன்றிய காலத்தில், எப்படிப் படமெடுப்பது என்றெ தெரியாத, புதிய சாத்தியங்களை நாம்தான் கண்டறிய வேண்டும் என்கிற நிலையில் இருக்கிற சினிமாவில்.

[தொடரும்]