.

ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா இயக்கிய காட்ஃபாதர் படங்கள், அதிலும் முதல் இரண்டு பகுதிகள் ஏன் அத்தனை முக்கியமானவையாக உலக அளவில் கருதப்படுகின்றன? வன்முறை, குற்றங்கள், நிழல் உலகம் பற்றி அதற்கு முன்னும் பின்னும் பல படங்கள் வந்திருக்கின்றன. காட்ஃபாதர்-யில் இருக்கும் மிகச் சிறந்த கலையம்சம் தான் அதற்குக் கிடைத்திருக்கும் எல்லா மரியாதைகளுக்கும் காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எந்த சிறந்த படத்திலும், மூலக்கதை, திரைக்கதையாக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, இயக்கம் போன்ற துறைகள் எல்லாமே சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அந்த எல்லாத் துறைகளிலும் அதனதன் உச்சங்களைத் தொடும்படியான நுணுக்கத்தோடும், அதற்குமுன் செய்யப்பட்டிருக்காத தனித்தன்மையோடும், ஒரே படத்தில் சேர்ந்து அமைந்துவிடுவது என்பது மிக அரிது. ‘காட்ஃபாதர்’ ‘காட்ஃபாதர் 2’ படங்களில் கூடிவந்திருக்கும் நேர்த்தி உலக அளவில் மிகக் குறைவான படங்களிலேயே அமைந்திருக்கிறது.

அந்தப் படங்களைத் தந்த இயக்குனரின் சமீபத்திய பேட்டியின் தமிழாக்கம் இது. சென்ற பதிவின் தொடர்ச்சி :

.

Francis Ford Coppola

.

‘ரிஸ்க் எடுப்பவர்’ என்பதே உங்கள் அடையாளம் என்று இப்போது நீங்கள் நினக்கிறீர்களா?

கொப்பலா : நான் எப்போதுமே ஒரு நல்ல சாகஸக்காரன். ரிஸ்க்குகளைப் பார்த்து ஒருபோதும் நான் பயந்தது இல்லை. எனக்கு ரிஸ்க்-ஐப் பற்றி ஒரு நல்ல தத்துவம் எப்போதுமே உண்டு, “ஓ.. நான் இதைச் செய்திருக்கலாமே” என்று நமது மரணப் படுக்கையில் புலம்பும்படியாக நாம் வாழ்க்கையை வீணாக்குவது மட்டும்தான் ஒரே ரிஸ்க். அதுதான் என் தத்துவம். நான் செய்யவிரும்பியவை எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன், இனிமேலும் அப்படியே.

.

நீங்கள் ஒரு மாணவனுக்குச் சொல்ல விரும்பும் மிகவும் பயனுள்ள குறிப்பு என்ன?

கொப்பலா : நீங்கள் பேப்பரில் ஏதாவது எழுதிவைக்கும்போது முதலில் அந்தத் தேதியை அதில் எழுதுங்கள், எந்த மாதம், என்ன கிழமை, பிறகு அது எந்த இடம் என்பதை எழுதுங்கள். ஏனென்றால் நீங்கள் எழுதிவைக்கும் எந்த ஐடியாவும் உங்களுக்கு உதவக்கூடியதே. தேதியை எழுதிவைப்பதை ஒரு பழக்கமாகக் கொள்வதன் மூலம், பிறகு நீங்கள் எப்போது அந்த குறிப்புகளைப் படித்தாலும், அந்தத் தேதியில் அந்த ஊரில் என்ன நடந்தது என்று உடனே மனம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிடும், அப்போதே அந்தக் குறிப்பு உங்களுக்குப் பயன்பட ஆரம்பித்துவிடும். எந்தத் திரைப்பட இயக்குனருக்கும் மிகமிக முக்கியமான கருவிகளில் ஒன்று அவர் எழுதிவைத்திருக்கும் குறிப்புகள் தான்.

.

ஒருவன் தனக்கான பாணியை உருவாக்கிக்கொள்வதற்கு முன்னோடிகளிடமிருந்து முற்றிலும் விலகிச் செல்வது அவசியமானதா?

கொப்பலா : ஒருமுறை பல்ஸாக் (Balzac), வேறொரு இளம் எழுத்தாளர் தன்னுடைய எழுத்தைத் திருடிப் பயன்படுத்திக் கொண்டதைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதைப் படித்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது, அவர் சொன்னார் “அந்த இளம் எழுத்தாளன் என்னிடமிருந்து ஒன்றை எடுத்துக்கொண்டதை அறிந்தபோது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியே உண்டானது” என்று. ஏனென்றால் அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறோம். முதலில் நீங்கள் எங்களிடமிருந்து திருட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஏனென்றால் உண்மையில் உங்களால் ‘திருடவே’ முடியாது. நீங்கள் எடுத்துக்கொண்டது எல்லாமே நாங்கள் உங்களுக்குத் தந்ததுதான். நீங்கள் அதை உங்களின் குரலிலேயே பதிவுசெய்வீர்கள். அப்படித்தான் உங்களின் சொந்தக் குரலை நீங்கள் கண்டடைய முடியும்.

அப்படித்தான் நீங்கள் ஆரம்பிக்க முடியும். பிறகு ஒருநாள் இன்னொருவர் உங்களிடமிருந்து திருடிக்கொள்வார். பல்ஸாக் தனது புத்தகத்தில் மேலும் குறிப்பிடுகிறார், ‘அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்ததற்குக் காரணம், அது என்னை மரணமில்லாதவனாக ஆக்குகிறது என்பதுதான். இன்னும் 200 ஆண்டுகள் கழித்து மக்களின் நடவடிக்கைகளில் ஏதோ ஒருவகையில் நானும் கலந்திருப்பேன் என்பதை இதன்மூலம் நான் அறிகிறேன்’ என்று.

ஆகவே உங்கள் கேள்விக்கு எனது பதில் இதுதான், ஒன்றைக் கடனாகப் பெறுவதோ, அல்லது எடுத்துக்கொள்வதோ, அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒருவரைப் போலவே ஒன்றைச் செய்துபார்ப்பதோ, சரியானதுதானா என்கிற கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை. ஏனென்றால் அது உங்களுடைய முதல் காலடி மட்டுமே. நீங்கள் முதல் அடியை எடுத்துவைத்துத் தானே ஆகவேண்டும்.

.

[தொடரும்]