Al Pacino in 'The Godfather : Part 2'

.

அமெரிக்கத் திரைப்பட வரலாற்றில், 70களின் ஆரம்பத்தில் நிகழ்ந்த, ஏராளமான புதுமுக இயக்குனர்களின் படையெடுப்பு முக்கியமானது. 1930கள் முதல் 50கள் வரை தனது பொற்காலத்தை அனுபவித்த ஹாலிவுட், தொலைக்காட்சியின் வருகையாலும் திரைமொழியின் தேக்கநிலை காரணமாகவும், மெல்ல மெல்ல பலவீனமடைந்திருந்த நேரத்தில், இந்தப் புதிய இயக்குனர்களே அதைத் தூக்கி நிறுத்தினார்கள். அவர்களில் சிலர் ஹாலிவுட்டைக் கைப்பற்றி 40 ஆண்டுகளாக ஆட்சிசெய்தார்கள் என்று கூடச் சொல்லலாம். Francis Ford Coppola, Steven Spielberg, George Lucas, Martin Scorsese, Woody Allen, Robert Altman, Roman Polanski, William Friedkin, Brian De Palma என்று மேலும் நீண்டு செல்லக் கூடியது அந்தப் பெயர்களின் பட்டியல். இதில் பலரும் அமெரிக்கத் திரைப்படக் கல்லூரியிலிருந்து (AFI) வந்தவர்கள், தொலைக்காட்சிகளில் படமெடுத்தவர்கள், பிரபலமாவதற்கு முன்பே அவர்களுக்குள் தொடர்பும் நல்ல நட்பும் இருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்தே மேலே வந்தார்கள் என்பதை, நான் முன்பு தமிழாக்கம் செய்து பதிவிட்ட ஜார்ஜ் லூகாஸின் பேட்டியில் அறியமுடியும். இந்த இயக்குனர்களில் முன்னோடியாக, ஹாலிவுட்டையும் உலகையும் தன்னை நோக்கித் திரும்பிப்பார்க்கவைத்த முதல் இயக்குனர் கொப்பலா தான். அதோடு மற்ற நல்ல படைப்பாளிகளையும் ஊக்குவித்து வெளிக்கொணர்ந்தார் என்ற வகையிலும் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

அவரது பேட்டியின் தமிழாக்கம் தொடர்கிறது..

Francis Ford Coppola

.

ஒரு வளரும் கலைஞன், விநியோகம் மற்றும் வியாபாரத்துடனான இடைவெளியை எப்படி நிரப்பிக்கொள்ள வேண்டும்?

கொப்பலா : அந்த விஷயத்தில் நாம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும். ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அதிகபட்சமாக சில நூற்றாண்டுகளாகத்தான் கலைஞர்கள் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். கலைஞர்களுக்கு எப்போதும் பணம் கிடைத்ததில்லை. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு வள்ளல் இருப்பான், அந்த மாநிலத்தின் தலைவனோ, ஒரு பிரபுவோ, அல்லது ஒரு மத நிறுவனமோ இருக்கும். அல்லது அந்தக் கலைஞனுக்கு இன்னொரு தொழில் இருக்கும். எனக்கு அப்படி இன்னொரு தொழில் இருக்கிறது. நான் திரைப்படம் எடுக்கிறேன், ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்ல முடியாது. நான் என்னுடைய ‘வைன்’ தொழிலின் மூலமாகப் பணம் சம்பாதிக்கிறேன். நீங்களும் அதுபோல இன்னொரு வேலையையும் செய்துகொண்டே, காலையில் ஐந்து மணிக்கு எழுந்து உங்கள் திரைக்கதையை எழுதுங்கள்.

‘மெடாலிகா’ அல்லது ஏதாவதொரு ‘ராக் அண்ட் ரோல்’ பாடகர் மாபெரும் பணக்காரராக இருப்பதைப் பற்றிய எண்ணத்தை விடுங்கள், இனி எப்போதுமே அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் நாம் ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை இனி கலைகள் இலவசமாக ஆகிவிடலாம். இப்போது இளைஞர்கள் இசையையும் திரைப்படங்களையும் டவுன்லோடு செய்துகொள்வது சரியானதாகவே கூட இருக்கலாம். இதைச் சொல்வதற்காக என்னைச் சுட்டாலும் சுடுவார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், கலைக்கு கட்டாயம் ஒரு விலை இருக்கவேண்டுமென்று யார் சொன்னது? அப்படியானால் கலைஞர்கள் பணம் சம்பாதிக்கவேண்டுமென்றும் யார் சொன்னது?

பழங்காலத்தில், நீங்கள் ஒரு இசைக் கலைஞரென்றால் உங்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான ஒரே வழி உங்கள் வாத்தியக் குழுவினரைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சி நடத்துவது மட்டும்தான். அப்போது ஒலிப்பதிவு கிடையாது, அதனால் ராயல்டியும் இல்லை. ஆகவே நான் சொல்லுவேன், “சினிமாவுக்கும், பணம் சம்பாதிப்பது வசதியாக வாழ்வது என்பதற்கும் மனதளவில் இருக்கும் தொடர்பைத் துண்டிப்பதற்கு முதலில் முயற்சிசெய்யுங்கள்” ஏனென்றால் அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன.

.

ஒரு திரைக்கதாசிரியருக்கு மிகப் பெரிய சவால் எது?

கொப்பலா : ஒரு திரைக்கதை என்பது ஹைக்கூ போல இருக்கவேண்டும். மிகக் குறுகியதும், மிகத் தெளிவானதுமாக, சிறியதாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கப் போகும்போது, மற்றவர்களின் கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ள முடியும். நடிகர்கள் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள் ஏனென்றால் அவர்களிடம் சிறந்த கருத்துக்கள் இருக்கலாம். ஒளிப்பதிவாளர் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள், ஏனென்றால் அவர் மிகச் சிறந்த கருத்துக்களைச் சொல்லலாம். நீங்கள் ஒருபோதும் “இல்லை, இல்லை, எனக்கு எல்லாம் தெரியும்” என்று சொல்கிற இயக்குனராக இருக்கக் கூடாது. நான் எனது 18வது வயதில் அப்படித்தான் இருந்தேன் என்று நினைக்கிறேன். அது சரியில்லை. எது தேவையென்கிற இறுதி முடிவு உங்களுடையதுதான், ஆனால் அதற்கு முன் எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால் சினிமா என்பதே ஒரு கூட்டுமுயற்சிதான். இப்படிச் சொல்வது எனக்குப் பிடிக்கும், ‘கூட்டுமுயற்சி என்பது கலையின் கலவி’ ஏனென்றால் நீங்கள், கூட இருப்பவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எடுத்துக்கொள்கிறீர்கள்.

.

Gene Hackman in 'The Conversation'

.

ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது எந்த ஒரு விஷயத்தை முக்கியமாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்?

கொப்பலா : ஒரு படத்தை எடுக்கும்போது, முதலில் அதன் ‘மைய நோக்கம்’ (Theme) என்ன என்பதை, ஒன்று இரண்டு சொற்களுக்குள் வருமாறு கண்டுகொள்ள முடியுமாவென முயற்சிசெய்ய வேண்டும். ஒவ்வொருமுறை நான் படமெடுக்கும்போதும், அதன் ‘தீம்’ என்ன என்று நான் நினைக்கிறேனோ, அதன் மையப் புள்ளியை, ஒரு சொல்லில் அடக்கிவைத்துக்கொள்வேன். “தி காட்ஃபாதர்” படத்தில் அது ‘வாரிசுமுறை’ (Succession), “தி கான்வெர்சேஷன்” படத்தில் அது ‘அந்தரங்கம்’ (Privacy), “அபொகாலிப்ஸ் நவ்”-யில் அது ‘ஒழுக்கம்’.

அதற்கு என்ன அவசியம் என்றால், ஒரு இயக்குனர் எந்த நேரமும் செய்துகொண்டிருக்கும் செயல் ‘முடிவெடுப்பது’ தான். முழுநாளும் அவர் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவுசெய்துகொண்டே இருக்கிறார், ‘நீளமான முடியாக வேண்டுமா குட்டையாகவா?’ ‘பகட்டான ஆடையா அல்லது சாதாரண உடையா?’ ‘தாடி வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா?’.. உங்களுக்குப் பலசமயங்களில் அதற்கான பதில் தெரியாமல் போகலாம். அப்போதெல்லாம் அந்தப் படத்தின் ‘தீம்’ என்ன என்று அறிந்துவைத்திருப்பது உங்களுக்கு உதவும்.

எனக்கு நினைவிருக்கிறது, “தி கான்வெர்சேஷன்” படத்தின்போது, அவர்கள் எல்லாவகைக் கோட்-களையும் கொண்டுவந்து காட்டி, “உங்களுக்கு அவர் ஹம்பிரி போகார்ட் போன்ற டிடெக்டிவ்வாகக் காட்சியளிக்க வேண்டுமா? அல்லது இது போலவா, அது போலவா” என்று பலவாறு கேட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. நான் படத்தின் தீம் ‘அந்தரங்கம்’ என்று சொல்லிவிட்டு, உள்ளே இருப்பது வெளியே தெரியும் படியான பிளாஸ்டிக் கோட் ஒன்றைத் தேர்வு செய்தேன். ஆக, உங்களுக்கு எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாத சமயங்களில் எல்லாம், அந்தப் படத்தின் தீம் என்ன என்று தெரிந்திருந்தால் உங்களுக்கு முடிவெடுப்பது எளிது.

.

[தொடரும்]