Pierce Brosnan in "Salvation Boulevard"

.

குரு-சிஷ்ய மரபைப் பற்றி எனக்கு எப்போதுமே உயர்ந்த எண்ணமுண்டு. மாமுனிவர்கள் ரிஷிகளைப் பற்றிய இதிகாசக் கதைகள் ஈர்க்கக்கூடியவை. அந்தக் கதைகளில் வரும் குருக்கள் மிகச் சிலரை மட்டுமே தங்கள் சிஷ்யர்களாக ஏற்றுக்கொள்வார்கள். அதுவும் பலமுறை அலையவிட்டு, நிராகரித்து, பரிகசித்து, கடிணமான வேலைகளைக் கொடுத்து, துரத்தி விடுவதற்கான எல்லாவற்றையும் செய்து, அவர்கள் தீவிரமாக இருக்கிறார்களாவென சோதனைகள் செய்த பிறகே சிஷ்யனாகச் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் தற்காலத்து நவீன ஆன்மீக குருக்கள் லட்சக்கணக்கான சிஷ்யர்களை சேர்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் மிகப் பெரும்பான்மைக்கு ஆன்மீகத் தேடலோ, தத்துவச் சிக்கலோ இருப்பதாகத் தெரியவில்லை. தங்கள் கவலைகளை ‘மறப்பதற்கான’ வழியாகவோ, தங்கள் ஆசைகளை வேண்டுதல்களை இந்தச் சாமியாவது நிறைவேற்றிவிடாதா என்கிற எதிர்பார்ப்பிலோ தான் அவர்கள் ஆஸ்ரமங்களைத் தேடிச்செல்கிறார்கள்.

.

‘பிரபலம்’ என்னும் அடைமொழி கொடுக்கப்படுவதென்பது, கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்துப் பார்வைக்கு வைக்கப்படுவதுதான், சமூகத்தின் கண்காணிப்பு எப்போதும் அவர்கள் மேல் இருக்கும்.

.

ஆன்மீகம் எப்போது ஒரு நிறுவனமாக ஆக்கப்பட்டாலும் அது சிக்கல் தான். பலகோடிப் பணம்புரளும் எந்த இடமும் ஒரு வணிக மையம்தான். மீடியாவைப் பயன்படுத்தியே இந்த சாமியார்கள் பிரபலமடைகிறார்கள். மீடியாக்காரர்கள், யாருக்கு நட்சத்திர அந்தஸ்த்து வழங்கினாலும், கூடவே இலவச இணைப்பாக ஒரு படுகுழியும் தோண்டிவைத்திருப்பார்கள். அந்த நட்சத்திரம் ஒரு சிறு சறுக்கலில் சிக்கிக்கொண்டாலும் உடனே மீடியா ஊதிப் பெரிது பண்ணி குழிக்குள் போட்டு மூடிவிடவே பார்க்கும். யாருக்கும் இதில் விதிவிலக்கில்லை, சினிமாக்காரர்களோ, அரசியல்வாதிகளோ, விளையாட்டு வீரர்களோ, சாமியார்களோ, பொதுவாழ்க்கைக்குள் வந்துவிட்ட எவரும் இதிலிருந்து தப்ப முடியாது. ‘பிரபலம்’ என்னும் அடைமொழி கொடுக்கப்படுவதென்பது, கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்துப் பார்வைக்கு வைக்கப்படுவதுதான், சமூகத்தின் கண்காணிப்பு எப்போதும் அவர்கள் மேல் இருக்கும். அதிலும் ஒரு சாமியார் “என் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட நீங்கள் யார்?” என்று கேட்கவே முடியாது. காரணம் தன்னை ஒரு குருவாகவும் வழிகாட்டியாகவும் பிரகடணப்படுத்திக்கொண்டது அவரேதான். பெருந்திரளான மக்களால் வழிகாட்டியாக, குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் எல்லாவகையிலும் களங்கமற்றவராக இருக்கவேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கும்.

அவரைப் பின்பற்றுபவர்கள் மட்டும்தான் அவரது ஒழுக்கத்தைக் கேள்விகேட்க முடியும் மற்றவர்களுக்கு அதில் உரிமையில்லை என்று சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. காரணம், ஒரு ஆசிரியர் குடித்துவிட்டு வகுப்புக்குப் போனார் என்று கேள்விப்பட்டால் எனக்கு ரத்தம் கொதிக்கும், அதற்கு என் மகன் அந்தப் பள்ளியில் படிக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதுபோல ஒரு டாக்டர் தன் நோயாளியிடம் ஒழுக்கம் மீறி நடந்துகொண்டால், அவர் உலகின் எந்த மூலையைச் சேர்ந்தவராக இருந்தாலும் எனக்குக் கோபம் வரும். காரணம் இந்தச் சமூகம் ஆசிரியர், டாக்டர், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர் போன்றவர்கள் மீது ஒரு பொதுவான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தனி வாழ்க்கையிலும் ஒழுக்கமும் நேர்மையும் கொண்டிருக்கத்தான் வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ‘சமூக அந்தஸ்த்து’ என்னும் அரியணையில் ஏற்றப்பட்ட எவரும் எல்லாவகையிலும் சுத்தமானவராக இருந்துதான் ஆகவேண்டும். ஒரு சமூகத்தில் ஆன்மீக வழிகாட்டியாக அறியப்பட்டவரிடம், பெருந்திரளான மக்களால் பின்பற்றப்படும் ஒரு குருவிடம் அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்.

.

.

ஒரு பெரிய அமைப்பை, தன் திறமையாலும் உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் உருவாக்கிவிட்ட ஒருவர், தான் செய்த சிறு பிழைக்காக அத்தனையையும் இழந்துவிடவேண்டுமென்று ஒரு நிலை வந்தால் என்னவாகும். அவர் ஒரு துறவியாகவே இருந்தாலும், தன்னைச் சுற்றி அத்தனையையும் கட்டி எழுப்பிய பின்பு அதைத் துறக்கவேண்டுமென்றால், பழியை எதன்மீதாவது தூக்கிப்போட்டுவிட்டு தன்னைத் தற்காத்துக்கொள்ளவே முயற்சிசெய்வார். இதை மையமாக வைத்து அமெரிக்காவில் ஒரு படம் இந்த மாதம் வெளியாகியிருக்கிறது, Salvation Boulevard, நான் பார்க்க விரும்பும் படங்களில் ஒன்று இது.

குறுகிய காலத்தில் மிகப் பெரும் பணம் சம்பாதிக்க “மதப் பிரசங்கம்” மிகச் சிறந்த வழி என்று உலகத்துக்கே கற்றுக்கொடுத்தது கிறிஸ்தவர்கள் தான். நவீன காலத்திற்கேற்ப தங்கள் முறைகளை மாற்றிக்கொண்டு, எல்லாவகை மீடியாக்களையும் பயன்படுத்திக்கொண்டு, மக்களின் பலவீனத்தைப் பணமாக மாற்றத்தெரிந்த முன்னோடிகளும் இந்த ‘கிறிஸ்தவ போதகர்கள்’ தான்.

அப்படி, அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த ஒரு மத அமைப்பை உருவாக்கிய ஒரு போதகர், தன்னுடைய எதிரியான ‘நாத்திக’ போதகர் (நம்மூர் தி.க.போல) ஒருவரை, எதேச்சையாகச் சுட்டுவிடுகிறார். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, பழியை இன்னொருவன் மேல் போட்டுவிட என்னென்ன முடியுமோ அவ்வளவும் செய்கிறார். அவரைவிடவும் அவரது பக்தர்கள் மூட நம்பிக்கையால் அவருக்காகப் போராடுகிறார்கள். புதிதாக அந்த அமைப்பில் சேர்ந்த ஒரு அப்பாவி, இடையில் மாட்டிக்கொண்டு, தன் மேல் விழுந்த கொலைப்பழியை அகற்றப் போராடுகிறான். இதுதான் கதையென்பது டிரைலர் மூலம் அறியமுடிகிறது.

டிரைலர்:

.

இந்த படத்தைப் பார்க்கவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ‘சன்டான்ஸ் திரைப்பட விழா’வில் திரையிடப்பட்ட இந்தப் படத்துக்கு இருமாதிரி விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. எனக்கு ஆர்வமுள்ள களமென்பதால் இதில் ரசிப்பதற்கு சில விஷயங்கள் இருக்குமென்றே நினைக்கிறேன்.