Apocalypse Now

.

நான் காட்ஃபாதர் படங்களை முதலில் பார்த்தது, மேல்நிலைப் பள்ளி மாணவனாக. அப்போது (1990யில் என்று நினைக்கிறேன்) தூர்தர்ஷனில் அது ஒரு குறுந்தொடராக வாராவாரம் ஒளிபரப்பப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலும் சரி, பின்பு தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் பணியாற்றும்போதும் சரி, பலவிதமான திரைப்பட ரசனைகள் கொண்ட ஏராளமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இயக்குனர் ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா-வைப் பிடிக்காது என்று சொன்ன ஒருவரையும் நான் இதுவரை பார்த்ததில்லை.

அவருடைய தாக்கம் இந்திய சினிமாவிலும், குறிப்பாக தமிழ் சினிமாவிலும் கூட கொஞ்சம் புது ரத்தத்தைப் பாய்ச்சியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

.

உலக சினிமா ரசிகன்’ என்ற ப்ளாக்கை நடத்துபவர், தான் கோயம்புத்தூரில் ஒருங்கிணைத்திருக்கும் ‘காட்ஃபாதர்’ திரையிடலின் போது, எனது இந்த தமிழாக்கக் கட்டுரைகளை வருபவர்களுக்குக் கொடுக்க விரும்புவதாக ஒரு பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். அவருக்காகவே இந்த கேள்வி-பதில் தமிழாக்கத்தின் இறுதிப் பகுதியை அவசர அவசரமாகப் பதிவிடுகிறேன்.

.

‘காட்ஃபாதர்’ 3 படங்கள் மட்டுமில்லாமல், கொப்பலா-வின் “அபோகலிப்ஸ் நவ்” என்ற மிகச் சிறந்த படத்தையும், “டிராகுலா”, “தி கான்வெர்சேஷன்” போன்ற படங்களையும் கூட நண்பர்கள் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

.

Marlon Brando in "Apocalypse Now"

.

மிகப் பெரிய நடிகர்களைத் திறமையாக வேலைவாங்கும் ரகசியம் என்ன?

கொப்பலா : “த காட்ஃபாதர்” படத்துக்கு நான் எப்படி நடிகர்களைத் தயார் செய்தேன் என்கிற கதையைச் சொல்கிறேன். எங்கள் எல்லாருக்குமே மர்லன் பிராண்டோ பற்றி படபடப்பாகவே இருந்தது. 50களில் நான் நாடக மாணவனாக இருந்தபோது, அவரையே நடிப்பின் உச்சம் என்று வியப்போடு பார்த்திருக்கிறேன். காட்ஃபாதர் படத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட எல்லா நடிகர்களும் முதல் முறையாக சேர்ந்து சந்திக்கவிருந்தார்கள். அல் பாஸினோ, ஜிம்மி கேன், பாபி டுவல், ஜானி கேஸல்.. என்று எல்லாருமே மர்லனின் ரசிகர்கள், அவர்தான் அவர்களுக்கு ஆதர்ஸம் (காட்ஃபாதர்). எனக்கு அது தெரியும் என்பதால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தேன். “கையிலிருக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்து” என்று நெப்போலியன் சொன்னார். ஒரு திரைப்பட இயக்குனர் அவசியம் அதைப் பின்பற்ற வேண்டும்.

ஆக நான் என்ன செய்தேன் என்றால், அந்த முதல் சந்திப்பை ஒரு ‘இம்ப்ரொவைசேஷன்’ நிகழ்வாக ஏற்பாடு செய்தேன். நான் அவர்களிடம் “நல்ல பசியோடு நீங்கள் வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னேன். நான் ஏற்பாடு செய்திருந்த உணவகத்துக்கு அவர்கள் வந்தார்கள். உணவகத்தின் பின்பக்க அறையில் வீட்டில் இருப்பதைப்போன்று ஒரே நீளமான மேசை மட்டும் போடப்பட்டிருந்தது. மேசையின் தலைப் பகுதியில் மர்லனை நான் அமரச் செய்தேன். அவருக்கு வலது புறம் அல் பாஸினோவையும், இடது புறம் ஜிம்மி கேன்-யும் அமர்த்தினேன். தொடர்ந்து பாபி டூவல் மற்றும் ஜானி கேஸல் அமர்ந்தார்கள். ‘கான்னி’ கதாபாத்திரத்தில் நடித்த என் தங்கை தாலியா-வை உணவு பரிமாறும்படிச் சொன்னேன்.

அவர்கள் எல்லாரும் ஒரு டின்னர் இம்ப்ரொவைசேஷனை சேர்ந்து செய்தார்கள். கொஞ்ச நேரத்திலேயே, எல்லாரும் மர்லனை ஒரு தந்தையைப் போல நடத்த ஆரம்பித்தார்கள். அவரைக் கவர்வதற்காக ‘ஜிம்மி கேன்’ ஜோக்குகள் சொல்ல ஆரம்பித்தார். ‘அல் பாஸினோ’ அவர் முன்னால் தன்னை அமைதியானவனாகவும் அழுத்தமானவனாகவும் காட்டிக்கொண்டார். உணவைப் பரிமாறும் என் தங்கை மிகுந்த மிரட்சியோடு இருந்தாள். அந்த டின்னர் முடிந்தபோது அவர்கள் எல்லாருமே கதாபாத்திரங்களாகவே மாறியிருந்தார்கள். ஆக நான் தரும் உபயோகக் குறிப்பு இதுதான், இம்ப்ரொவைசேஷன் சமயத்தில் நடிகர்களை ஒன்றச் செய்வதற்கு ஒரு சிறந்த வழி, உணவு உண்பது, கைகளால் ஒன்றைச் செய்து உருவாக்குவது போல அவர்களின் புலன்களோடு நுட்பமான தொடர்புடைய ஏதாவதொரு செயலைச் செய்யவைக்க வேண்டும்.

.

.

ஒரு நாவலை திரைக்கதையாக நீங்கள் எப்படி மாற்றுவீர்கள்? 

கொப்பலா : வழக்கமாக நாவல்களையே ‘அடாப்ட்’ செய்கிறார்கள். ஆனால் அது திரைப்படத்துக்கு தகுந்த வடிவம் கொண்டது அல்ல. ஏனென்றால் ஒரு நாவல் என்பது மிகமிக அதிக நீளமானதாக, ஏராளமான கதாபாத்திரங்களும், நிறைய தனித்தனிப் பகுதிகளும் கொண்டதாக இருக்கும். சிறுகதையே ஒரு திரைப்படத்துக்கான இயல்பான வடிவமைப்பை, நேர்கோடான கதைசொல்லலைக் கொண்டிருக்கிறது. ஏராளமான சிறுகதைகள் நல்ல திரைப்படங்களாக மாறியிருக்கின்றன.

நாவலைப் பொறுத்தவரை, நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான், ஒரு நாவலை முதல் முறை படிக்கும்போதே நிறைய குறிப்புகளை அந்த புத்தகத்திலேயே எழுதிவைத்துவிடுங்கள். உங்கள் உணர்வையெல்லாம் எழுதுங்கள், நீங்கள் வலிமையானது என்று நினைக்கும் வரிகளை அடிக்கோடிடுங்கள். அந்த முதல் குறிப்புகள் எப்போதும் மதிப்புமிக்கவை. நீங்கள் படித்து முடிக்கும்போது, புத்தகத்தின் சில பக்கங்கள் அடிக்கோடுகளாலும் குறிப்புகளாலும் நிரம்பியிருப்பதையும், சில பக்கங்கள் வெறுமையாய் இருப்பதையும் காண்பீர்கள்.

நாடகங்களில் ‘பிராம்ப்ட் புத்தகம்’ என்று ஒன்றுண்டு. மேடையின் மேலாளர் அதைக் கையில் வைத்திருப்பார். வழக்கமாக அது, நாடக வசனங்களும், எல்லா ஒளியமைப்பு ‘க்யூ’-களும் கொண்ட தனித்தாள் தொகுப்பாக இருக்கும். அதைப் போன்ற ஒரு பிராம்ப்ட் புத்தகத்தை நான் நாவலிலிருந்து உருவாக்குவேன். வேறு சொற்களில் சொல்வதானால், நான் நாவலைப் பிய்த்து, பக்கங்களை ஒரு சதுர லூஸ் லீஃப்-யில் இருபுறமும் பார்க்கும் விதமாக ஒட்டி வைப்பேன்.

நான் எடுத்த குறிப்புகளடங்கிய அந்தப் பெரிய புத்தகத்தை வைத்துக்கொண்டு, மேலும் கூர்ந்து அவதானித்து, இன்னும் நிறைய குறிப்புகளையும் சேர்த்து எழுதிவைத்துக்கொள்வேன். பின்பு அவற்றையெல்லாம் படித்துப்பார்த்து, நான் பயனுள்ளது என்று நினைப்பவற்றைக் கதைச் சுருக்கம் போல எழுதத்தொடங்குவேன். இப்போது மிக இயல்பாகவே கதையின் உதிரிப் பகுதிகள் விலகி விழுந்துவிடும். அல்லது தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள் இருப்பதையும், எதையெல்லாம் கழிக்க வேண்டும், எதையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையும் நீங்களே கண்டுகொள்ள முடியும். வெளியிலிருந்து உள்நோக்கிய இந்த வழிமுறை மூலமாக, நீங்கள் நினைப்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு உருவாகும். அதன் பின்பே, அந்தக் குறிப்பேட்டை மூலாதாரமாகக் கொண்டு ஒரு திரைக்கதையை எழுதிப் பார்க்கும் தகுதியை நீங்கள் அடைகிறீர்கள்.

“காட்ஃபாதர்”-யில் நான் அதைச் செய்தேன். படத்திற்கென்று ஒரு திரைக்கதையை எழுதிவிட்ட பின்னும் கூட நான் அதைப் பயன்படுத்தவில்லை. அந்தப் பெரிய குறிப்புப் புத்தகத்தை நான் எப்போதும் கூடவே வைத்திருந்தேன். அந்தப் படத்தை நான் அந்தக் குறிப்புப் புத்தகத்தைக்கொண்டு உருவாக்கினேன் என்பதே உண்மை. “அபோகாலிப்ஸ்” படத்தைப் பொறுத்தவரை, மிகச் சிறந்த திரைக்கதாசிரியரான ‘ஜான் மிலியஸ்’ எழுதிய திரைக்கதை என்னிடம் இருந்தது. ஆனால் உண்மையைச் சொல்வதானால், ‘ஹார்ட் ஆஃப் டார்க்னஸ்’ புத்தகத்தின் சிறிய பிரதியையும் அதில் நான் எழுதிவைத்த ஏராளமான குறிப்புகளையும் கொண்டே நான் அந்தப் படத்தை எடுத்தேன். நான் எந்த ஒரு காட்சியை எடுக்கும்போதும், அந்தப் புத்தகத்தோடு ஒரு முறை சரிபார்த்துக்கொள்வேன், ‘கான்ராட்’-யின் எழுத்திலிருந்து அந்தப் படத்துக்கு எதையெல்லாம் கடத்த முடியுமென்று நான் பார்ப்பேன்.

.

'அபொகாலிப்ஸ் நவ்' படப்பிடிப்பில் கொப்பலா

.

 சொந்தமாகப் படம் தயாரிப்பதற்கும், எழுதுவதற்கும், இயக்குவதற்கும் தேவையான அனைத்து மூலதன வசதிகளும் இப்போது உங்களிடம் இருக்கின்றன. ஒரு கலைஞராக உங்களின் முன் இருக்கும் பெரிய தடை எது?

கொப்பலா : தன்னம்பிக்கை இன்மை. தனது போதாமையைப் பற்றிய எண்ணத்திடம் தான் ஒரு கலைஞன் ஓயாமல் போராடிக்கொண்டிருக்கிறான்.
 

நீங்கள் அதை எப்படிக் கடந்து வந்தீர்கள்?

கொப்பலா : நான் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். எனது இளமைக் காலத்தில் படப்பிடிப்பின்போது, அந்தக் காட்சியை நான் அப்படியே நிகழ்த்திக்காட்ட முயற்சிப்பேன், நடிகர்கள் தங்கள் வசனங்களை வாசிப்பார்கள், நான் “சரி, நீங்கள் இங்கே நில்லுங்கள், அவர் அங்கே உட்காரட்டும்..” என்று சொல்லிச் செல்வேன். உடனே அவர்கள் “அது வந்து.. நான் இங்கே உட்காரக் கூடாதென்று நினைக்கிறேன், நான் அங்கேதான் நிற்க வேண்டும், மேலும் இந்த வசனம் சரியல்ல என்று தோன்றுகிறது” என்று அனைத்தையும் எதிர்க்க ஆரம்பிப்பார்கள்.

நான் என்ன கற்றுக்கொண்டேன் என்றால், மிக எளிய விஷயம்தான், நீங்கள் காட்சிப்படுத்தும் போது, ஒரு ‘கேக்’கை ‘அவன்’ (oven)-யில் வைப்பதைப்போல, அதற்கு இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். ஒரு காட்சி உடனே உருவாகி வந்துவிடாது, அதைக் கொஞ்ச நேரம் வேகவைக்க வேண்டும். ஒரு ‘ஷாட்’டோ அல்லது ஒரு காட்சியோ உங்கள் எண்ணத்தில் தோன்றியதும், அது திரைப்படங்களில் இருக்கும் மிக அழகிய காட்சிகளாக உடனேயே உருவாகிவிடும் என்று எதிர்பார்ப்பது அநியாயம். அது முதிர்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். ஒரு நிமிஷம் கூட ‘அவன்’-யில் வைக்காமல் வெளியே எடுக்கப்படும் கேக் எத்தனைக் கொடுமையாக இருக்கும்? ஆகவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மெல்ல மெல்ல அனைவருமே உங்களுடைய எண்ணம் சரியானதே என்பதை உணர ஆரம்பிப்பார்கள், அல்லது திருத்தங்களைச் செய்வார்கள். காட்சி திடமானதாக மாறும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதன் மூலம், உங்களுடைய நம்பிக்கைக் குறைவை வெற்றிகொள்ள முடியும்.