.

சுரேஷ் கண்ணன் : ரே, இவ்வாறான ஏலியன் திரைப்படத்தைப் பற்றி அப்போதே யோசித்திருந்தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. அதைத்தான் ஹாலிவுட்டில் காப்பியடித்து விட்டார்கள் என்று ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டிருக்கிறது.

[முந்தைய பதிவுக்கு எழுதப்பட்ட பின்னூட்டம்]

.

சுரேஷ் கண்ணன்,

அதில் உண்மையும் இருக்கிறது. சத்யஜித் ரே பன்முகத் தன்மைகொண்ட படைப்பாளி. ஒரு எழுத்தாளர், ஒரு ஓவியர். குழந்தைகளுக்கான ஏராளமான கதைகளை அவர் வங்காளத்தில் எழுதியிருக்கிறார். அவை இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பாக எல்லாப் பெரிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது. பொதுவாக அவை சிறுவர்களுக்கான சாகஸக் கதைகள். அதில் ஒரு கதை ‘பங்கு பாபுவின் நண்பன்’ 1962-யில் எழுதப்பட்டது, ஒரு வங்காள கிராமத்தின் குளத்தில் தரையிறங்கும் வேற்றுக்கிரக விண்வெளிக் கலத்தை கிராமவாசிகள் சுயம்புவாகத் தோன்றிய கோயில் என்று நினைத்து வணங்குகிறார்கள். அந்த கலத்தில் பூமிக்கு வந்த குறும்பான ‘வேற்றுக்கிரகவாசி’ ஒன்று, மறைவாக இருந்தபடி, தனது அதீத சக்திகளை வைத்து கிராமத்தினரிடம் வம்புகள் செய்து விளையாடுகிறது. அது அந்த கிராமத்தின் மக்குப் பையன் ஒருவனின் கனவுகள் மூலமும், எண்ணங்கள் மூலமும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அவனோடு சேர்ந்து சாகஸத்தில் ஈடுபடுகிறது.

ரே அந்தக் கதையை, ஒரு ஆங்கிலப் படமாக எடுக்க விரும்பி அதற்கேற்ப திரைக்கதை ஒன்றை எழுதினார். அதைத் தயாரிக்க அமெரிக்காவின் கொலம்பியா பிக்சர்ஸ் முன்வந்தது. அப்போது ரே உலக அளவில் மிகப் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்திருக்கிறார், இப்போது பலருக்கும் அதை நம்பக் கஷ்டமாக இருக்கிறது. 1967-யில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆங்கிலப் படத்துக்கு “தி ஏலியன்” என்று பெயரிடப்பட்டது. அந்தத் திரைக்கதையின்படி இந்திய கிராமத்தில் கதை நடந்தாலும் அமெரிக்க எஞ்சினியர், பத்திரிகையாளர் போன்ற வெள்ளைக்கார கதாபாத்திரங்களும் இடம்பெற்றன. அந்தப் பாத்திரங்களில் நடிக்க அப்போது அமெரிக்காவின் முன்னணி நடிகர்களான பீட்டர் செல்லர்ஸ், மர்லன் பிராண்டோ போன்ற நடிகர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். பிறகு பல குளறுபடிகள் நடந்து, ரே-யின் அமெரிக்க ஏஜண்டே அவரை ஏமாற்றி, ரே கோபப்பட்டு இந்தியா திரும்பும்படி ஆகிவிட்டது.

பின்னர் அதே நிறுவனம் 1982-யில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை வைத்து E.T. என்ற படத்தை எடுத்தபோது, அதன் கதை ரே-யின் ‘தி ஏலியன்’-ஐ பல வழிகளிலும் ஒத்திருப்பதாக அப்போதே விமர்சிக்கப்பட்டது. ரே-யும் தன் திரைக்கதையைப் படிக்காமல் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அப்போது பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஸ்பீல்பெர்க்கின் அதற்கு முந்தைய படமான ‘குளோஸ் என்கவுண்டர்ஸ் ஆஃப் தி தேர்ட் கைண்ட்’ படத்திலும் ஏலியன்கள் நல்லவர்களாகவும், அவர்கள் மனிதர்களோடு கனவுகள், நினைவுகள் வழியாகத் தொடர்புகொள்வதாகவும் காட்டப்பட்டிருக்கிறது. அதிலும் ரே-யின் கதையின் தாக்கம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், ரே, ‘தி ஏலியன்’ படத்துக்காக, வேற்றுக்கிரகவாசியின் மாதிரித் தோற்றம் ஒன்றை தன் கைப்பட வரைந்து கொடுத்திருந்தார். அந்த ஓவியத்தில் இருப்பது போலவேதான் ஸ்பீல்பெர்க் தன் ‘குளோஸ் என்கவுண்டர்..’’படத்தின் ஏலியனை வடிவமைத்திருக்கிறார். கீழே இருக்கும் இரு படங்களையும் ஒப்பிடுவதோடு, அதற்கு முன் ஹாலிவுட் ஏலியன்கள் எப்படி இருந்தார்கள் என்பதையும் யோசித்தால் ரே-யின் பங்களிப்பைப் புரிந்துகொள்ள முடியும்.

ரே வரைந்தது
Close Encounters of the Third Kind
Close Encounters of the Third Kind
Close Encounters of the Third Kind

ஒரு இந்திய இயக்குனரின் கற்பனையைப் பயன்படுத்தி இரண்டு படங்களை எடுத்து, அவருக்கு எந்த கிரடிட்டும் கொடுக்காமல், அவற்றின் மூலம் பல மில்லியன்கள் சம்பாதித்ததோடு, இப்போதும் 30 வருடங்களாக அந்தப் படங்களின் மூலம் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

சார்லஸ்

.

சுரேஷ் கண்ணன் :  

அன்புள்ள சார்லஸ், தனிப்பதிவிற்கு நன்றி. இது பற்றிய தகவல்களை நானும் வாசித்திருக்கிறேன். ஆனால் அனைத்துமே பரஸ்பர குற்றச்சாட்டுக்களாகவும் யூகங்களாகவும்தான் இருக்கிறதே ஒழிய, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாக இல்லை. ரேவின் வாழ்க்கைசரிதத்திலும் இது பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. ரே -வின் படம் ஒருவேளை சாத்தியமாகியிருந்தால் இதெல்லாம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும்.

பூமிப்பிரதேசத்தில் அந்நியர் நுழைவு என்பது மரபு சார்ந்த கற்பனை. இந்த கற்பனை அங்கேயும் தோன்றியிருக்கலாம் என்கிற benefit of dobut-ஐ தர விரும்புகிறேன். மேற்கத்திய சிந்தனை உயர்ந்தது என்கிற தாழ்வுணர்ச்சியாலும் முதலில் தோன்றிய குரங்கு தமிழ்க்குரங்கு என்கிற உயர்வுணர்ச்சியாலும் இதை அணுகவில்லை. :)

.

சார்லஸ் :

சுரேஷ் கண்ணன்,

‘வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவது’ என்கிற ஐடியாவைக் கண்டுபிடித்ததே ரே தான் என்று நான் சொல்லவேயில்லையே. அப்படி யாராவது சொன்னால் அதைப்போல ஒரு முட்டாள்தனம் இல்லை. திரைக் கலை என்பதே அறிவியல் யுகத்தின் பக்க விளைவாக உருவாகி வந்ததுதான். சினிமாவைப் பயன்படுத்தி ஒழுங்காக ஒரு கதை சொல்லிப் பழகுவதற்கு முன்பே 1905-யிலேயே முதல் அறிவியல் புனைவு திரைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது. மிக ஆரம்பத்திலிருந்தே விண்வெளிப் பயணம், வேற்றுக்கிரகத்துக்கு நாம் செல்வது, வேற்றுக் கிரகத்தவர்கள் இங்கு வருவது என்கிற சென்ற நூற்றாண்டின் பிரபஞ்சத் தேடல்கள் ஆர்வங்கள் எல்லாமே திரையிலும் கதைகளாக பரிமளித்தன.

எல்லாவித சினிமாவும் நாம் மேற்கிலிருந்து கற்றுக்கொண்டதுதான். ரே யதார்த்தப் படங்களை எப்படி இத்தாலிய நியோரியலிசத்திலிருந்தும், பிரஞ்சு புதிய அலை சினிமாவிலிருந்தும் எடுத்துக்கொண்டாரோ, அதே போல சிறுவர்களுக்கான சாகஸக் கதைக்காக மேற்கத்திய ‘புதையல் வேட்டை, மர்மத் தீவு, காடு-கடல் சாகஸப் பயணம், ஏலியன்’ போன்றவற்றிலிருந்து எடுத்துக்கொண்டார்.
நான் சொல்ல வந்தது, 70களின் இறுதியிலும் 80களின் ஆரம்பத்திலும் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ஏலியன் கதைகளின் மூலம் மிகப் பெரிய வெற்றிப்படங்களைக் கொடுத்தார். அந்த கதைகளுக்கான இன்ஸ்பிரேஷன் 67-68 வாக்கில் ரே எழுதிய ‘தி ஏலியன்’ திரைக்கதையாக இருக்கும் என்று பரவலான ஒரு கருத்து நிலவுகிறது என்பதே. அறிவியல் புனைகதைகளின் ஆகப் பெரிய எழுத்தாளராகக் கருதப்படும் ஆர்தர் சி.கிளார்க் (2001 எ ஸ்பேஸ் ஒடிஸி) கூட இதே கருத்தை வழிமொழிந்திருக்கிறார்.

ரே அப்படி என்ன புதுமையாக செய்தார் என்றால், அமெரிக்கக் கதைகளுக்கு மாற்றாக, ஏலியனை அவர் நேர்மறையாக சித்தரித்தார் என்பதே. மனிதர்களிடம் அவை நட்பாகப் பழகலாம், எல்லாருக்கும் நல்லதே செய்யலாம் என்றும், மனிதர்களை விட அந்த ஏலியன்கள் உடல்பலத்தினால் அல்லாமல் மன பலத்தினால் முன்னேறியவை என்று காட்டினார். அவற்றின் மூளையின் சக்தி மனிதர்களை விட மிகப் பெரிய அளவில் பரிணாமம் அடைந்திருப்பதாகக் காட்டினார். மனிதர்களுடன் ஒரு விளையாட்டுத் தோழன் போல ஏலியன் பழகுவதாகக் காட்டினார். இதையே தான் ஸ்பீல்பெர்க்கும் செய்தார். இந்தத் தளத்தில் ஸ்பீல்பெர்க் முக்கியத்துவம் பெற்றதற்கு மேற்சொன்ன காரணங்களே காரணம். ரே-வினுடையது திரைக்கதை அளவிலேயே நின்றுவிட்டது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இதையே 10-12 வருடங்கள் கழித்து சினிமாவாக எடுத்துப் பெயரைத் தட்டிக்கொண்டார்.

ஏலியனின் உருவம், குணங்கள், சக்திகள் என்று பலவும் ஒன்றேபோல் அமைந்திருப்பதால் தான் அது தற்செயல் என்று சொல்லமுடியவில்லை.

.

ஸ்பீல்பெர்க்-குக்கு முன்னால் ஏலியன் என்றாலே ராட்சஸர்கள் என்பதாகவே சினிமாவில் காட்டப்பட்டது. விண்வெளியிலிருந்து வந்து மனிதர்களை அழித்து பூமியை ஆக்கிரமிப்பு செய்பவர்கள். இந்த மேற்கத்திய கருத்தாக்கத்துக்கு மூலக் காரணம், அந்நிய தேசத்துக்குப் போவது என்பது அதை அறிந்துகொள்வதற்காக என்றில்லாமல் ஆக்கிரமிக்கவே என்கிற ஐரோப்பிய காலணியாதிக்க மனப்பான்மைதான். வேற்றுக் கிரகத்திலிருந்து ஒரு உயிரினம் பூமிக்கு வருகிறது என்றாலே அது நம்மை அடிமையாக்கத் தான், இத்தனை தூரம் விண்வெளிப் பயணம் செய்ய முடிவதனால் அவை நம்மைவிட எல்லாவகையிலும் முன்னேறியவையாகவே இருக்கும், அவை பூமிக்கு வருவதற்கு வேறு அவசியம் என்ன இருக்க முடியும் என்றே கருதப்பட்டது. இப்போது கூட Alien Invasion என்பதே பொதுவான தீம்’ஆக இருக்கிறது, நான் போன பதிவில் சொன்ன புதுப்படங்கள் உட்பட. ஆனால் ஸ்பீல்பெர்க் ஏலியனை மிக நட்பான, மனிதர்களோடு சகஜமாகப் பழகும், நல்ல, அன்பான, இனிய உயிரினமாகக் காட்டினார். இந்தப் ‘புதிய அம்சம்’ ரே-யின் திரைக்கதையாகத்தான் முதலில் ஹாலிவுட்டுக்குப் போனது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஸ்பீல்பெர்க்-உம் மறுக்கவில்லை, தான் அந்தப் படங்களை எடுத்தபோது ரே-யின் கதையை அறிந்திருக்கவில்லை என்றே அவர் சொல்கிறார். அது உண்மையாகவும் இருக்கலாம், நீங்கள் சொல்வதைப் போல.

.

ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன்.. இன்னொருவகை ஏலியன் சித்தரிப்பும் உண்டு. ஆர்தர் சி.கிளார்க் 50களில் தன் சிறுகதைகளில் முதலில் எழுதி பின்பு ’2001 ஏ ஸ்பேஸ் ஒடிஸி’ நாவலாகவும் ஸ்டேன்லி க்யூபிரிக் படமாகவும் வந்தது. அதில் ஏலியன், நம் கண்ணால் காண முடியாத, புத்திக்கும் எட்டாத உயரத்தில், கிட்டத்தட்ட கடவுள் தன்மையோடு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் கொள்வதிலிருந்து ஆரம்பித்து அவனை வழிநடத்தி, தன்னுடைய அமர நிலையை நோக்கி அழைத்து வருவதாகக் காட்டப்படுகிறது. 1985யில் கார்ல் சாகன் எழுதிய ‘காண்டாக்ட்’ நாவலிலும் ஏலியன்கள் நம் புலன்களால் காண முடியாதவர்களாக இருக்கிறார்கள். ராபர்ட் ஸெமிகிஸ் அதை மிகச் சிறந்த படமாக எடுத்திருக்கிறார். அறிவியல் புனைவில் ஆர்வமுள்ளவர்கள் இந்த இரு படங்களையும் அவசியம் பார்க்கவேண்டும்.

Suresh : Can you please tell the name of those two films?

சார்லஸ் :

“2001: A Space Odyssey ” (directed by Stanley Kubrick)

“Contact ” (directed by Robert Zemeckis)

இந்த இரு படங்களின் பெயரையும் முந்தைய பின்னூட்டத்தில் தமிழில் எழுதியிருந்தேன். இவை எனக்குப் பிடித்த படங்கள். ஏலியனை நேர்மறையாக, கடவுள் தன்மையோடு சித்தரிக்கின்றன. சுவாரஸ்யமான கதைகள்.

இவற்றைக் கடந்து இன்னும் கொஞ்சம் சீரியஸாகப் போகவேண்டுமென்றால், ரஸ்ய இயக்குனர் தார்கோவ்ஸ்கி-யின் “சோலாரிஸ்” பார்க்கலாம். (“Solaris” – Dir: Andrey Tarkovskiy). ஆனால் அது எளிய பார்வையாளனுக்கானது அல்ல. நோலான் படங்களே கடிணமானது என்று நினைப்பவர்கள், இதனுள் நுழைவது சிரமம். இதில் ஏலியன் எதிர்மறையாக, நம்மை மாயைக்குள் விழவைக்கும் தீய சக்தியாகக் காட்டப்படுகிறது. இந்தப் படத்தைப் பின்பு அமெரிக்காவிலும் எடுத்தார்கள், இதைப் பற்றி எனதுமுந்தைய பதிவொன்றில் எழுதியிருக்கிறேன்.

Suresh : Thanks a lot Charles.

.