Attack The Block

.

திரைப்படக் கல்லூரியில் நான் சேர்ந்த புதிதில் ஒருமுறை என் பேராசிரியர் “தமிழ்ல ரஜினி கமலுக்கு அடுத்து பெரிய வசூல் குடுக்கற ஸ்டார் யாரு தெரியுமா?” என்று கேட்டார். நான் சீரியஸாக இரண்டு மூன்று பெரிய நட்சத்திர நடிகர்களின் பெயர்களைச் சொன்னேன். அவர் அதையெல்லாம் மறுத்துவிட்டு, “அம்மன்” என்றார். அது வெறும் கிண்டல் அல்ல, அன்றைய வசூல் நிலவரத்தின் படி உண்மையும் கூட என்பது எனக்குப் பின்புதான் புரிந்தது. இப்போது அம்மன் படங்கள் குறைந்திருந்தாலும், மீண்டும் தமிழில் அந்த ட்ரெண்ட் வராது என்று சொல்ல முடியாது. புதிய தொழில்நுட்பத்தோடு அப்படி ஒரு படம் வந்து பெரிய வெற்றி பெற்றால், பிறகு ஆண்டுக்கு 10 படங்கள் வந்துவிடும். ஏனென்றால் அதற்கான பார்வையாளர்கள் எப்போதும் இருக்கிறார்கள். மீண்டும் வராது என்று நான் நினைத்திருந்த ‘காமப் படங்கள்’ இப்போது தமிழ்நாட்டை முற்றுகையிட்டிருப்பதைப் பார்த்தால், இதுவும் நடக்கும் என்றே தோன்றுகிறது. ஒரு காலத்தில் மற்ற படங்களில் கூட, குறிப்பாகப் பெண் பார்வையாளர்களை நம்பி எடுக்கப்பட்ட குடும்பக் கதைகள், காதல் கதைகளில் கூட, மஞ்சள் புடவையும் வேப்பிலையுமாக, அதிரும் உடுக்கை ஒலிக்க ஒரு பாடல் வைத்திருப்பார்கள். திரையரங்குகளில் பல பெண்களுக்கு அருள்வந்து ஆடுவது என்பது 15 ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது.

.

.

ஆங்கில ‘ஏலியன்’ படங்களை ‘மேற்குலகின் அம்மன்’ படங்கள் என்றே நான் நண்பர்களிடம் கூறுவது வழக்கம். அவையும் வசூலுக்கு உத்திரவாதமானவை என்றே அங்கு அறியப்படுகின்றன. அறிவியல் புனைவு என்று சொல்லப்பட்டாலும், அதில் இரண்டு சதவீதமே அறிவியல் இருக்கும் மற்றதெல்லாம் புனைவுதான். அமெரிக்க சினிமாவின் தொடக்க காலத்திலேயே ஏலியன்கள் திரையில் தோன்ற ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகைப் படங்களை நல்ல தரத்தோடும் சில இயக்குனர்கள் செய்திருக்கிறார்கள். பழையவர்களில் இயக்குனர் ராபர்ட் வைஸ் எனக்குப் பிடிக்கும். பிறகு வந்தவர்களில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஜார்ஜ் லூகாஸ், ரிட்லி ஸ்காட், ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்கள் அந்தத் தளத்தில் மிகச் சிறந்த படங்களைத் தந்து மிகப் பெரிய வெற்றிகளிலும் திளைத்திருக்கிறார்கள்.

முந்தைய ஏலியன் படங்களிலிருந்து ஏதோவொரு விதத்தில் வித்தியாசப்பட்டு, புதியது போல் தோன்றக்கூடிய கதையை எடுத்துக்கொண்டு, அதில் புத்தம் புதிய தொழில்நுட்ப மாயாஜாலங்களைப் புகுத்திவிடுவது என்பது அவர்களின் வெற்றிக்கான ஃபார்முலாக்களில் முக்கியமான ஒன்று. சென்ற ஆண்டுகளில் ‘அவதார்’ ‘டிஸ்ட்ரிக்ட் நைன்’ போன்ற மிகச் சிறந்த ஏலியன் படங்கள் வந்தன.

வரும் வெள்ளிக்கிழமை இரண்டு ஏலியன் படங்கள் அமெரிக்காவில் வெளியாகவிருக்கின்றன.

.

.

ஒன்று மெகா பட்ஜெட் காக்டெயில் “கௌபாய்ஸ் & ஏலியன்ஸ்”. அமெரிக்காவின் இரண்டு மிகப் பெரிய வெற்றிக் கதைக் களங்களான வெஸ்டர்ன் கௌபாய் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஏலியன் என்கிற இரண்டு பழைய கள்ளையும் ஒரு கோப்பையில் ஊற்றி, பிரபல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய பொருட்செலவு என்று எல்லாம் போட்டுக் கலந்து செய்திருக்கும் இந்த காக்டெயிலை தொடுவதற்கே தயக்கமாக இருக்கிறது, அதேசமயம் விடுவதற்கும் மனமில்லை. ஆனாலும் பொழுதுபோக்குக்குப் பஞ்சம் இருக்காது என்கிற உத்திரவாதத்தை டிரைலர் கொடுக்கிறது.

.

அடுத்தது, ‘அட்டாக் த பிளாக்’ என்ற இங்கிலாந்து நாட்டின் சின்ன பட்ஜெட் படம். மே மாதமே யூ.கே.-யில் வெளியாகிவிட்ட இந்தப் படம் அமெரிக்கா மற்றும் உலகமெங்கும் இந்த வாரம் தான் வெளியிடப்படுகிறது. லண்டனின் மத்திய வர்க்க மக்கள் வசிக்கும் காலனி ஒன்றின் விடலைப் பசங்களுக்கும் அங்கு வந்துவிட்ட ஏலியன்களுக்குமான சண்டையைப் பற்றிய சுவாரஸ்யமான கதை. இளம் படைப்பாளிகளின் ‘விளையாட்டுத்தனமான’ இந்த முதல் முயற்சி, ஏற்கனவே திரைப்பட விழாக்களில் கவணத்தையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது. நிச்சயம் இளைஞர்களுக்குப் பிடிக்கும் என்றும் விரைவில் இணையத்தில் இதுபற்றி நிறைய பேசப்படும் என்றும், டிரைலரைப் பார்க்கும்போது தோன்றுகிறது. இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.

.

சத்யஜித் ரே-வின் ஏலியன்

.

.