‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஆரண்ய காண்டம்’, ‘அவன் இவன்’ ஆகிய மூன்று சமீபத்திய படங்களை ஒப்பிட்டு ஒரு அவதானிப்பு.

மூன்று படங்களுக்குமுள்ள ஒரு ஒற்றுமை, அவை மூன்றுமே நகைச்சுவைப் படங்கள் என்பது.

பாலாவும் எஸ்.ராமகிருஷ்ணனுமே பேட்டிகளிலும் மேடைகளிலும் ‘அவன் இவன்’-ஐ ஒரு முழுநீள காமெடி என்று சொல்லிவிட்டதனால் நாம் அதில் ஐயப்படுவதற்கு ஏதுமில்லை. ‘ஆரண்ய காண்டம்’ பற்றிய சுரேஷ் கண்ணனின் திரைஅலசல் மிக முக்கியமானது. அதில் அவர் அந்தப் படம் ‘ப்ளாக் காமடி’ வகையைச் சார்ந்தது என்று சொல்லி அதை விரிவாகவும் விளக்கியிருக்கிறார். அதே சுரேஷ் கண்ணன் ‘அழகர்சாமியின் குதிரை’யை கழுதை என்றும், கிராமத்துப் பெரிசுகள் போலீஸ் ஸ்டேஷனில் பேசுவது யதார்த்தமாக இல்லை என்றும் விமர்சித்திருக்கிறார். அது ‘வைட் காமெடி’ வகையைச் சார்ந்தது என்று சுரேஷ் கண்ணனுக்கு ஏன் புரியவில்லை என்று தெரியவில்லை. நான் ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தை இருமுறை பார்த்தேன், அப்போதெல்லாம் அதுவொரு நகைச்சுவைப் படம் என்றே பொதுவாகத் திரையரங்கில் மக்கள் பேசிக்கொண்டார்கள். (சுரேஷ் கண்ணன் என் மீது கோபப்படாமல், இதுவும் பிளாக்கோ வைட்டோ ஏதோ ஒருவகைக் காமெடியில் சேரும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்)

இந்த மூன்று காமெடிப் படங்களும் சீரியஸாக முன்வைக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியே நான் இங்கு சொல்ல வந்தது.

ஆரண்ய காண்டத்தின் ஆகச் சிறந்த அம்சம் ‘காளையன்’ என்கிற வாழ்ந்துகெட்ட ஜமீந்தார் கதாபாத்திரம். அதில் நடித்த சோமசுந்தரம் சந்தேகமில்லாமல் தமிழ்த்திரையின் புதிய நம்பிக்கை நட்சத்திரம். அந்த கிராமத்து அப்பா-மகன் கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்து, காட்சிக்குக் காட்சி அற்புதமாகத் திரையிலும் வடித்துக்காட்டியிருக்கும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பாராட்டுக்குரியவர். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் அந்த ஜமீந்தார் கதாபாத்திரம் எல்லாவகையிலும் தன் சொந்த ஊரிலேயே தோற்றுவிட்டதை வலியோடு வெளிப்படுத்தும் இடங்களும், தன் சொந்த மகனே கூடத் தன்னைக் கையாலாகாதவனாகப் பார்க்கும்போது வேதனைப்படும் இடமும், நம் மனதை அத்தனைதூரம் தொடுவது எதனால்?

அவன் இவன் படத்திலும் ‘ஹைனஸ்’ கதாபாத்திரம் பழம்பெருமை பேசியபடி தற்காலத்துக்கு ஒட்டாத ஒருவராக ஒரு கேலிச் சித்திரமாகவே சுற்றி வருகிறார். ஒட்டு மீசை என்கிற அம்சமே மிக ஆழமாக அவரது கதாபாத்திரத்தின் நிலையை வெளிப்படுத்திவிடுகிறது. அவர் உள்ளூரில் கொஞ்சம் மரியாதையைத் தக்கவைத்திருக்கிறார், அந்த மக்கள் அவர்மீது விசுவாசமாகவே இருக்கிறார்கள். ஆனால் அவரோடு அதெல்லாம் முடியப்போகிறது, அவரது பரம்பரைப் பெருமை அவருக்குப் பின் தொடரப்போவதில்லை என்பதை அங்கு எல்லாருமே உணர்ந்திருக்கிறார்கள். ஒருவித இறக்கத்தைத்தான் அவர்மீதான மரியாதையாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இறுதியில் அவருக்கு நேரும் முடிவு, அவமானப்படுத்தப்பட்டு அடித்துக் கொல்லப்படும் காட்சி, எல்லா வகையிலும் அவர்மீது ஒட்டிக்கொண்டிருந்த கௌரவத்தையும் பழம்பெருமையையும் துடைத்தழிப்பதாகவே அமைகிறது. அவர் அறிமுகமாகும் காட்சியில், பல பெண்கள் உதவ நீண்ட நேரம் ஒப்பனை செய்துகொண்டிருப்பதாகக் காட்டப்படுவதும், இறுதிக்காட்சியில் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தொங்கிக்கொண்டிருப்பதாகக் காட்டப்படுவதற்கும் உள்ள தொடர்பை எவரும் உணரமுடியும்.

பாஸ்கர் சக்தி எழுதி சுசீந்திரன் இயக்கியிருக்கும் அழகர்சாமியின் குதிரை, எந்தவொரு தனிப்பட்ட ஜமீந்தாரையும் முன்வைக்கவில்லை என்றபோதும், நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து முழுமையாக வெளிவராத ஒரு கிராமத்து சமூகத்தைப் பற்றிப் பேசுகிறது. நிலப்பிரபுத்துவ அம்சங்கள் இதிலும் கேலிசெய்யப்படுகின்றன. இந்தக் காலத்தில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று அந்த கிராமத்தின் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் கிண்டல் செய்தபடி இருக்கிறார்கள். இறுதியில் அந்த இளைஞர்களே தாங்கள் நினைத்ததைச் சாதிக்கிறார்கள். அவர்களின் முன்னால், சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள் வெட்கித் தலைகுனிந்து நிற்பதாகவே படம் முடிகிறது. கிராமத்துப் பெரியவர்கள் போலிகௌரவம், அறியாமை, திருட்டு, பொய், ஏமாற்று, கள்ளத் தொடர்பு, மூட நம்பிக்கை, சாதி வெறி என்று எல்லா தீய அம்சங்களோடும் இருக்க, அதற்கு நேர்மாறாக இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அநேகமாக அனைவருமே (சூரி நடித்திருக்கும் கதாபாத்திரம் தவிர்த்து) நல்லவர்களாக இருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக்கொள்ளத் துடிக்கும் ஒரு கிராமத்துச் சமூகத்தைப் பற்றிய கதை என்றே நான் அழகர்சாமியின் குதிரை படத்தைப் பார்க்கிறேன்.

நிலப்பிரபுத்துவக் காலம் எப்போதோ முடிந்துபோனாலும் கூட, தமிழ் சினிமா தொடர்ந்து அதைத் தக்கவைத்தபடியேதான் இருந்தது. குறைந்தபட்சம் கிராமங்களில் அது நீடிப்பதுபோன்ற ஒரு தோற்றத்தையே படங்கள் உருவாக்கின. ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் ஒரு படி மேலேபோய், சுதந்திர இந்தியாவுக்குள் தான் இருக்கின்றனவா என்று நம்ப முடியாத அளவுக்கே கிராமங்களைக் காட்டினார்கள். ஆனால் அவர்களை விமர்சிப்பதற்கு முன் நாம் ஒரு விஷயத்தை யோசிக்கவேண்டும். மக்களுக்குப் பிடிக்காத எதையும் ஒரு வணிகப் படத்தின் இயக்குனர் தன் கதையில் வைக்கப்போவதே இல்லை. வெற்றிகரமான சினிமாக்காரர்கள் எல்லாருமே பெரும்பான்மையான மக்களின் மனநிலைகளை விருப்பங்களை நன்கு புரிந்துவைத்திருந்தார்கள், அல்லது தங்களை அறியாமலேயே உள்ளுணர்வால் மிகச் சரியாக வெளிப்படுத்தினார்கள் என்று நான் நம்புகிறேன்.

மிகப் பெரிய வெற்றிபெற்ற அந்த முந்தையகாலக் கிராமத்துப் படங்களில், நீதியும் நேர்மையும் கொண்ட ஒரு பண்ணையாரோ, ஜமீந்தாரோ, நிலச்சுவாந்தாரோ பதினெட்டுப் பட்டியையும் பரிபாலனம் செய்வதுபோன்றும், அவருக்கு விசுவாஸமான ஊழியரோ, பண்ணையாளோ, கிராமத்து ஏழைப்பெண்ணோ துணையாக இருப்பதுபோன்றும் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது. அது பெருவாரியான மக்களின் மறைமுகமான ஆழமான விருப்பம் ஒன்றை திருப்திசெய்தது என்பதே அவை பெற்ற வெற்றிகள் தெரிவிக்கும் செய்தி. அப்போது மக்கள் நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து முற்றிலுமாக விடுபடாமல் இருந்தார்கள் என்பதே உண்மை.

பின்பு மெல்ல மெல்ல தமிழ் சினிமா அந்த நிலப்பிரபுத்துவ அம்சங்களைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. முதலில் கேலி செய்யப்பட்டது பஞ்சாயத்துக் காட்சிகள் தான். ‘முதலாளித்துவ காலத்தின் சட்டங்கள் கொடுக்கும் தாமதமான நீதியை விடவும், நிலப்பிரபுத்துவக் காலப் பஞ்சாயத்துகளில் கிடைத்த உடனடி நீதி மேன்மையானது’ என்பதுபோன்ற தோற்றத்தையே முந்தைய தமிழ் சினிமாவின் பஞ்சாயத்துக் காட்சிகள் உருவாக்கின. அதை உடைத்துக் கேலி செய்யும் நகைச்சுவைக் காட்சிகளை அடுத்த தலைமுறையினர் ரசிக்க ஆரம்பித்தார்கள். அழகர்சாமியின் குதிரை படத்தில் கிராமத்துப் பெரியவர்கள் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கப் பக்கத்து ஊர் ஸ்டேஷனுக்குப் போகும்போது, இன்ஸ்பெக்டர் அவர்களிடம் ‘உங்க ஊர்க்காரர்கள் போலீஸையே மதிப்பதில்லை, ஒத்துழைப்பதில்லை, இப்போதுமட்டும் ஏன் வந்தீர்கள்’ என்றே கேட்கிறார். சாமியின் குதிரை காணாமல் போனதால்தான் ஊருக்குள் போலீஸ் வந்து முதல்முறையாகத் தங்குவதாக அந்தப் படத்தில் காட்டப்படுகிறது. பஞ்சாயத்தில் கூடும் பெரியவர்களை விடவும், குறிசொல்லும் கோடங்கியை விடவும், இன்ஸ்பெக்டரே அதிக நேர்மையானவராக அங்கு இருக்கிறார் என்பதையும் நாம் கவணிக்கலாம்.

சம்பந்தமில்லாத வெவ்வேறு படைப்பாளிகளிடமிருந்து ஒரேசமயத்தில் வந்திருக்கும் இந்த மூன்று ‘அ’வரிசைப் படங்களும், நிலப்பிரபுத்துவத்தில் ஊறியிருந்த மக்களின் மனநிலை இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது என்பதை அதிகார பூர்வமாக அறிவிக்கின்றன என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். இப்போது இன்னொரு கேள்வியும் எழுகிறது. நிலப்பிரபுத்துவத்தின் சில நல்ல அம்சங்கள் மக்களின் மனதில் நீடித்ததாலேயே நம் சமூகம் சில ஒழுங்குகளைக் கொண்டிருந்தது. இப்போது அதையும் சேர்த்து நாம் இழந்துவிட்டோம். எப்படி அதை ஈடுசெய்யப் போகிறோம்?

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியா டுடே தமிழ் இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரையின் இறுதி வரிகள் இதே கவலையையே முன்வைக்கின்றன. நிலப்பிரபுத்துவகால அறங்கள் நமக்கு இருந்தன. நமக்கு பெரியவர்கள் அவற்றைச் சொல்லி வளர்த்தனர். இன்று நாம் வேகமாக முதலாளித்துவத்திற்குள் நுழைகிறோம். நிலப்பிரபுத்துவ அறங்களை கைவிடுகிறோம். ஆனால் முதலாளித்துவத்துக்கு பல்வேறு அறங்களும் ஒழுக்கங்களும் உண்டு. அவற்றை நாம் கற்றுக்கொள்வதில்லை. இன்று தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை இதுவே” என்கிறார் ஜெயமோகன். அது உண்மையென்றே தோன்றுகிறது.

ஆரண்ய காண்டத்தின் காளையன் கதாபாத்திரம், கையாலாகாதவனாக, பிழைக்கத் தெரியாதவனாக, கடவுள் நம்பிக்கையில் ஊறியவனாக, தனது பழம்பெருமையைப் பேசிக்கொண்டு தன்னிறக்கத்தில் உழல்பவனாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் அதையும் தாண்டி நம்மைக் கவர்வது அவனது மனத்தூய்மையும் நீதியுணர்வும் தானே? நிலப்பிரபுத்துவத்தின் சிறந்த அம்சங்களல்லவா அவை. தவறு செய்வதற்குப் பயப்படும் சென்ற தலைமுறையின் பிரதிநிதி அல்லவா அவன். சமீபத்தில் செய்திகளில் அடிபடும் இளம் குற்றவாளிகளைப் பற்றியும், பெரிய காரணங்கள் ஏதுமற்ற வன்மத்தினால் நிகழும் கொலைகள் பற்றியும் அறியும்போது கவலையாகவே இருக்கிறது. ‘மனசாட்சி’ என்ற வஸ்துவின்மேல் போன தலைமுறை வரை இருந்த பயம் இப்போது இல்லாமல் ஆகிவிட்டதா? அல்லது புதிதாக ஒரு மனசாட்சியை சமூகம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறதா?

அவன் இவன் ‘ஹைனஸ்’ கதாபாத்திரம் தன் பரம்பரையால் ஆளப்பட்ட அந்த மண்ணையும் மக்களையும் இப்போதும் நேசிக்கிறார். அங்குள்ள கலைஞர்களைப் பேணுவது தன் கடமை என்று நினைக்கிறார். நிலப்பிரபுத்துவக் காலத்தில் கிராமியக் கலைகளையும், கர்நாடக இசை, பரதநாட்டியம் போன்ற செவ்வியல் கலைகளையும் நிலச்சுவாந்தார்களே பேணிப் பாதுகாத்தார்கள் என்பதையும் அவர்கள் இல்லையென்றால் அவை அழிந்து காணாமல் போயிருக்கும் என்பதையும் நாம் மறுக்கவே முடியாது. இப்போது இந்தக் கலைகளைப் பேணப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது. இந்த முதலாளித்துவ யுகத்தில் சினிமா, டிவி, வீடியோ கேம்ஸ் போன்றவையோடு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் மால்களில் சுற்றிவருவதும் பொருட்களை வாங்குவதுமே பிரதான பொழுதுபோக்குகளாக மாறிவருகின்றன. கலைகளை வாழ்விப்பதற்கென்றே நடத்தப்பட்ட கோவில் திருவிழாக்கள் இன்று ஊர்ப்பொதுவில் திரைகட்டி புதுப்படம் போடுபவையாகவும், நிறைய நன்கொடை கிடைக்குமிடத்தில் பாடகர்களின் இசைநிகழ்ச்சியோ ‘டி.வி. புகழ்’களின் நடனநிகழ்ச்சியோ நடத்துபவையாகவும் மாறிவிட்டன. இந்தக் கலைகளைக் காப்பாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம்?

ஹைனஸ் நாளெல்லாம் இரு சின்னத் திருடர்களோடு பழகிக்கொண்டிருப்பவர் என்றபோதும், தன் பிராந்தியத்தில் ஒருவன் சட்டவிரோதமாக மாடுகளைக் கடத்துகிறான் என்று தெரிந்தவுடன், பார்த்துவிட்டுச் சும்மா போக அவரால் முடியவில்லை. தன் முப்பாட்டன்களைப் போல உடனடியாக அங்கேயே நீதிவழங்குவதற்கான அதிகாரம் இப்போது அவருக்கு இல்லை. ஆகவே அவர் தற்காலத்தின் சக்திவாய்ந்த அமைப்புகளுள் ஒன்றான மிருகவதைக்கு எதிரான உலகளாவிய தன்னார்வ கூட்டமைப்பின் உதவியை நாடுகிறார். அநீதியை உடனே தடுத்து நிறுத்துகிறார். அந்த சட்டவிரோத வியாபாரிக்கு வரும் கோபமே ‘உனக்கு ஏன் இந்த வேலை? உனக்குச் சம்பந்தமில்லாத பிரச்சனையில் நீ ஏன் தலையிட வேண்டும்’ என்பதுதான். அதற்காகவே அவன் அவரைக் கொடூரமாகக் கொன்று, மக்களைப் பயமுறுத்துவதற்காகப் பொது இடத்தில் தொங்கவிடுகிறான்.

பொதுவில் நடக்கும் இத்தகைய அராஜகங்களைப் பார்த்தும், நாம் நமக்குள் மட்டுமே புளுங்கிக்கொண்டும் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று விலகிக்கொண்டுமே இருக்கிறோம். மனித உரிமை அமைப்பையோ நீதித்துறைகளையோ நாடி, பொதுப் பிரச்சனைகளுக்காகப் போராடுபவர்கள் ஒருசிலரே. அவர்களுக்குத் துணையாகவேணும் மக்கள் சக்தி திரளவேண்டும். சமீபத்தில் அன்னா ஹசாரே-வுக்குப் பின்னால் திரண்ட இளைஞர்களையும், மெரீனாவில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்ட கூட்டத்தையும் பார்க்கும்போது ஒரு மெல்லிய நம்பிக்கை பிறக்கிறது.

அழகர்சாமிக்கு திருவிழா நடத்தினால் மழைபெய்து ஊர் வளமாகும் என்று கிராமத்தின் பெரியவர்கள் எல்லாருமே நம்புகிறார்கள். இளைஞர்கள் அதில் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். பெரியவர்களின் அறியாமையை ஆயிரம் குறைசொன்னாலும் இறுதியில் அது எப்படியோ மழை வரத்தான் செய்கிறது. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் என்னை நெகிழச் செய்த தருணம் அது. ஏதோ ஒரு பெருங்கருணை தலைக்குமேல் நின்றபடி காத்து ரட்சிப்பதான ஒரு நம்பிக்கையில், சென்ற தலைமுறை, சாமிக்கும் தன் மனசாட்சிக்கும் பயந்து சுயகட்டுப்பாடுகளைச் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகாதபடி எதுவோ ஒன்று அவர்களைக் காத்துக்கொண்டும் இருந்தது. அந்தக் கருணைக் குடையை மடக்கிப் போட்டுவிட்டுத் தனியே நடைபோடும் நம் தலைமுறை, வெட்டவெளியின் முன்னால், பிரபஞ்சத்தின் முன்னால் தனியே விடப்பட்டிருக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையும் ஒரு கூட்டமாய் மாறி ஒன்றுக்கொன்று உதவியபடி எல்லாரையும் நேசித்தபடி வாழ்வது மட்டுமே இப்போதைக்கு ஒரே வழி என்று தோன்றுகிறது. இதற்காகவே மனித இனம் தகவல் தொழில்நுட்பத்தை இத்தனை விரிவாக வளர்த்தெடுத்திருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.