பெரும்பான்மையானவர்களைப் போலவே நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 2-3 புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு, மற்ற நண்பர்களுக்கும் ஒரு சுற்றுப் படிக்கக்கொடுத்து, ஞாயிற்றுக் கிழமைக்குள் மீண்டும் ஒருமுறை அவைகளைப் படித்துவிடுவது என் வழக்கமாக இருந்தது. விதவிதமான துப்பறிதல்கள், மர்மங்கள், சாகஸங்கள்.. அற்புதமான கதாநாயகர்கள்.. அதிபயங்கர எதிரிகள்.. அழகிய காதலிகள்.. டெக்ஸாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், ரியோ டி ஜெனிரோ, அடர் காடுகள், மலைகள், பாலைவனங்கள், தீவுகள் என்று நான் அறியாத நிலப்பரப்புகள்… இளவயதில் என் உலகை விரிவுகொள்ள வைத்தவை காமிக்ஸ்களே.

அவற்றில் வரும் குத்தும் கைகள், ஓங்கிய கத்திகள், வெடிக்கும் துப்பாக்கிகள் பற்றிய சித்திரங்கள் ஆழமாக என் மனதுக்குள் பதிந்திருக்கின்றன என்பதை இப்போதும் பலசமயங்களில் ஒரு திடுக்கிடலோடு நான் உணர்வதுண்டு. மனதுக்குள் ஏற்கனவே இருக்கும் ஒரு இருள் மூலையில் அவையெல்லாம் சென்று சேகரமாகியிருக்கின்றன என்றும், அந்த வித்துக்களே வன்முறைகள் நிறைந்த திரைப்படங்களில் எனக்கு ஓர் ஆழமான ஈர்ப்பை உண்டாக்கியிருக்கின்றன என்றும் நான் நினைப்பதுண்டு.

காமிக்ஸ்களைக் கதைகளுக்காக மட்டுமின்றி, வரையப்பட்ட விதங்களுக்காகவும் அப்போது நான் ரசித்தேன். வரைவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. பள்ளிக் காலத்தில் நான் தொடர்ந்து பல ஓவியப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன், வரைவதில் எனக்கிருந்த விருப்பமே காமிக்ஸ்களில் நான் மூழ்கியதற்குக் காரணமென்றும் சொல்லலாம்.

இப்போது யோசித்துப் பார்க்கையில் நான் அதிகமும் வரைந்தது பெண் முகங்களையும் பாரதியாரையும் தான் என்று தோன்றுகிறது. பாரதியாரின் ஆளுமை என்னை ஈர்த்ததற்குக் காரணம் சொல்லத் தெரியவில்லை. பாரதியாரின் சில எளிய பாடல்வரிகளின் மூலம் உள்நுழைந்து, அவரது மொத்தப் படைப்புகளையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். பாரதியார் எனக்கு மரபுக் கவிதைகள் மீதும், பழந்தமிழ் இலக்கியங்களின் மீதும் மோகத்தை ஏற்படுத்தினார். ஒன்பது-பத்தாம் வகுப்புப் படித்த காலத்திலேயே நான் சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தின் ஒரு காண்டத்தையும், புறநானூறையும் சொந்தமாக வாங்கிப் படித்து முடித்திருந்தேன் என்று சொன்னால் இப்போது பல இளைஞர்களால் நம்ப முடியாது. அந்தச் சமயத்தில் என்னை அறியாமலேயே ஓவியம் வரைவதை நிறுத்தியிருந்தேன். அதற்கு முன்பே காமிக்ஸ் வாசிப்பதும் நின்றுபோயிருந்தது.

அந்த நேரத்தில், திருக்குற்றாலக் குறவஞ்சியின் சந்த நயமும், கண்ணதாசன் கவிதைத் தொகுப்பின் எளிய அழகும், பாரதியின் உணர்ச்சி வேகமும் எனக்குச் சுயமாகச் செய்யுள்கள் இயற்றுவதற்கான விருப்பத்தை ஏற்படுத்தின. பள்ளித் தமிழ்ப் பாடத்தின் யாப்பிலக்கணம் போதுமானதாக இல்லை. பாரதிதாசனாரின் மிகச் சிறிய இலக்கண நூல் ஒன்றே எனக்கு வழிகாட்டியாக அமைந்தது. கடினமான வெண்பா உட்பட எல்லாப் பாவகைகளையும் எழுதிப் பார்த்தாலும் ஆசிரியப்பாவே (விருத்தம்) இயல்பாகக் கைவந்தது. ஓராண்டாக பள்ளியின் எந்தக் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் ஓவியப் போட்டிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்த நான், திடீரென்று ஓர்நாள் கவிதைப் போட்டிக்குப் பெயர் கொடுத்தபோது ஆசிரியர் ஆச்சரியப்பட்டார். நான் எழுதிய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தைப் படித்து, மேல் வகுப்புகளுக்குப் பாடமெடுக்கும் மகாதேவன் என்கிற ஆசிரியர் (பின்பு அவர் நல்லாசிரியர் விருதும் பெற்றார்) வியந்து பாராட்டி ஊக்கப்படுத்தினார். பிறகு பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை உள்ளூரிலும் மாவட்ட அளவிலும் ஏராளமான கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகள் பெற்றேன். பிறகு திடீரென்று ஓர்நாள், நான் எழுதுவதெல்லாம் குப்பை என்று தோன்றி செய்யுள்கள் செய்வதை நிறுத்திக்கொண்டேன். கன்னி முயற்சியாக சிறுகதைகள் சில எழுதிப்பார்த்தேன். மீண்டும் வரைவதிலும் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது, ஆனால் காமிக்ஸ் உலகைவிட்டு வெகுதூரம் விலகிவந்திருந்தேன்.

பிறகு தொலைக்காட்சியில் நான் பணியாற்றிய ஆரம்ப நாட்களில், என் நண்பனும், திரைப்படக் கல்லூரியில் என் ஜூனியருமான பாஸ்கர் (பின்னாட்களில் அவன் தெலுங்குத் திரையுலகுக்குள் நுழைந்து ‘பொம்மரில்லு’ என்ற படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்களுள் ஒருவனாக மாறினான், அந்தப் படம் தமிழில் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என்ற பெயரில் என்னுடைய இன்னொரு ஜூனியரான ராஜாவால் எடுக்கப்பட்டது) தான் ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக காமிக்ஸ் கதாநாயகன் ஒருவனை மையமாக வைத்து கதைபண்ணிக்கொண்டிருப்பதாகச் சொல்லி அவ்வப்போது வந்து ஆலோசனைகள் கேட்பதுண்டு. நான் அப்போது ‘ஜீ பூம் பா’ என்கிற வெற்றிகரமான சிறுவர் தொடருக்கு திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தேன். பின்பு சில வருடங்கள் கழித்து அதே பாஸ்கர் வந்து ராடான் நிறுவனம் ‘இரும்புக்கை மாயாவி’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்போகும் தொடருக்கு நான் கதையும் திரைக்கதையும் எழுதிக்கொடுக்க முடியுமா என்று கேட்டான். அப்போது தென்னிந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக இருந்த ராடான், பம்பாயிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தது. அந்தத் தொடரை இந்தியில் எடுத்துத் தமிழ் தெலுங்கில் டப்பிங்கும் செய்துகொள்ளலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். நான் இரும்புக்கை மாயாவியின் ரசிகன் என்பதால் உடனே சம்மதித்தேன். அதிலிருந்து என் காமிக்ஸ் வாசிப்பின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

சில மாதங்களுக்கு, புத்தகக் கடைகள் மற்றும் சாலையோரத்தில் பழைய புத்தகம் விற்பவர்கள், தனிநபர்கள் சேகரித்து வைத்திருந்தவை என்று எல்லா இடங்களிலிருந்தும் வாங்கிவந்து குமிக்கப்பட்ட காமிக்ஸ்களால் என் வீடு முழுவதும் நிரம்பிக் கொட்டிக்கொண்டிருந்தது. அந்த வாசிப்பின் வழி காமிக்ஸ்களின் அதிநாயகர்களின் உலகுக்குள் நுழைந்து, நானே சொந்தமாக ஒரு கதையை எழுதிவிடுவதுதான் என் நோக்கம். காமிக்ஸ்களும் கார்ட்டூன்களும் சிறுவர்களின் மனதில் வன்முறையை விதைப்பதாக ஏற்கனவே எனக்கொரு எண்ணமிருந்ததால், இப்போது சிறுவர்களுக்காகக் கதை எழுதும் இடத்தில் நான் இருக்கும் போது சமூகப் பொறுப்போடு செயல்பட வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் இருந்தாகவேண்டும். ஜார்ஜ் லூக்காஸ்-யின் திரைக்கதைகள், குறிப்பாக ஸ்டார் வார்ஸ், இண்டியானா ஜோன்ஸ் போன்ற தொடர் படங்களின் தாக்கம் எனக்கு அப்போது நிறைய இருந்தது. கூடவே ஹாரி பாட்டர் புத்தகங்களும் முதல் படமும், லார்ட் ஆப் த ரிங்ஸ் முதல் பாகமும், சாம் ரைமி இயக்கிய ஸ்பைடர் மேன் முதல் பாகமும் அப்போது வெளியாகி பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

அந்தப் படங்களுக்கும் இரும்புக்கை மாயாவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும், அவற்றிலிருந்து நேரடியாகக் காப்பியடிக்க ஏதுமில்லை என்பதையும், ஆனால் ஒரு திரைக்கதை எழுத்தாளன் தன் சூழலைப் பற்றி ஏதும் அறியாதவனாக, தான் மிகவும் ரசித்தவைகளைக் கிரகித்துக்கொள்ளாதவனாக இருக்கமுடியாது என்பதையும் நான் இங்கு விளக்கவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். சொந்தக் கற்பனை என்பது புதிதாக ஒரு மலர் பூப்பதைப் போலத்தான் நடக்கும், ஆனால் அதற்குத் தேவையான நீரும் தாதுச் சத்துக்களும் வேரின் பல கிளைகள் வழியாகப் பலகாலம் உறிஞ்சப்பட்டிருக்கும். நான் அந்தக் கதையை எழுதி முடித்து சில வருடங்கள் கழித்து வெளியான கிறிஸ்டோபர் நோலான்-யின் ‘பேட்மேன் பிகின்ஸ்’ படத்தில் என் திரைக்கதையிலிருந்த பலகூறுகள் இடம்பெற்றிருந்தன. கண்ணாடியில் என்னை நானே பார்த்து சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டேன்.

அந்தத் திரைக்கதையில், ஒரு சாதாரண இளைஞன் எப்படி இரும்புக் கை மாயாவியாக மாறினான் என்கிற முன்கதையையும், இப்போது அவன் முக்கியமான வில்லன்களை எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கும் கதையையும் இணையாகவே சொல்லிக்கொண்டு வருவதுபோன்று அமைத்திருந்தேன். தொடரின் முதல் மாதத்தின் இறுதியில் அந்த இரண்டு கதைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, நாயகன் தன் உற்ற நண்பனாக இருந்தவனையே, தன்னை ஒரு அதிமனிதனாக மாற்றிய கர்த்தாவையே, இப்போது, அதிபயங்கர வில்லனாகக் கண்டடைவதாக எழுதியிருந்தேன். தொடர்ந்து பின்னால் கதையில் நிகழப்போகும் திருப்பங்கள் வளர்ச்சிகள் போன்றவற்றையும், பத்து விதவிதமான புதிய வில்லன்களையும் நான் உருவாக்கிக் கொடுத்தேன்.

ஆனால் அந்தத் தொடர் எடுக்கப்படாமலே நின்றுபோனது. நான் பணியாற்றி வெளிவந்தவைகளைவிட அப்படி நின்றுபோனவையே அதிகம் என்பதால் நான் மெல்ல அதை மறந்து வேறு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தபோது, காமிக்ஸ் வாசிப்பும் கூடவே நின்று போனது.

சிறுவர்கள்-ஒழுக்கம்-சமூகப் பொறுப்பு என்கிற கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல், முழுக்க முழுக்கப் பெரியவர்களுக்காகவே காமம்-வன்மம் எல்லாம் கலந்து உருவாக்கப்படும் அடல்ட் காமிக்ஸ் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருந்த போதும் அவற்றைத் தேடிப் படிக்கும் மனநிலை அப்போது இருக்கவில்லை. ஜப்பானிய ‘மங்கா’ காமிக்ஸ்கள் பற்றி ஒருசமயம் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது, ஆனாலும் பெரிதாக எதையும் படித்துவிடவில்லை.

காமிக்ஸ் வாசிப்பில் என்னுடைய மூன்றாவது அத்தியாயம் ஆரம்பித்ததைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(தொடரும்)

.