300

‘வன்மம்’ மனிதனின் மிக அடிப்படையான குணங்களில் ஒன்று. அவனுள் இருக்கும் மிருகம். ஆனால் அவன் சமூக மிருகம் என்பதாலும் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதனாலும் வெளிப்படையாக வன்மத்தைக் காட்டிக்கொண்டு திரிவது நாகரீகமல்ல என்று ஆகிவிட்டதனாலும், தனக்குள் அடக்கி வைத்திருக்கிறான். ஆனால் அதை அவ்வப்போது வருடிக்கொடுத்தபடியும், தன்னுடைய செயல்பாடுகளில் பல வடிவங்களிலும் மிக நுண்மையாகவும் வெளிப்படுத்தியபடியும் தான் இருக்கிறான். தன் எதிரிகளிடம் மட்டுமல்ல, உறவுகள் நட்புகள் என்று தன்னைச் சூழ்ந்திருப்பவர்களிடமும், முன் பின் தெரியாதவர்களிடமும், சிலசமயம் தன்மீதே கூட வன்மத்தோடுதான் நடந்துகொள்கிறான்.

சிற்பங்கள், ஓவியங்கள் உட்பட எல்லா காட்சிக் கலைகளும் மிக ஆரம்ப காலத்திலிருந்தே காமத்தையும் வன்மத்தையுமே மிக அதிக அளவில் பதிவுசெய்திருக்கின்றன. இந்த இரண்டையும் சரியாக, அளவுக்கு மிஞ்சாமல் கையாண்ட எந்த சினிமாவும் உடனடிக் கவணத்தைப் பெற்றுவிடுகிறது. உலகம் முழுக்க இதேதான். காரணம் மனித மனத்தின் இருட்டுக்குள் தேங்கிக் கிடப்பவைகளுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது. அவற்றை நிஜ உலகில் உலவவிட்டால் சமூகப் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்துவிடும். ஆனால் கற்பனையுலகில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அந்தக் கற்பனை, கலைகளின் வழியாக நிகழும்போது, முழுமையும் அழகும் பெற்றுவிடுகிறது. இப்போது கலையனுபவம் வெறும் வடிகாலாக மட்டுமில்லாமல், நிஜத்தைவிடவும் அதிக மனநிறைவைத் தருவதாக உன்னதமானதாக ஆகிவிடுகிறது.

Frank Miller's 300

சினிமா இயக்குனர்களில், வன்முறையின் எல்லைவரை சென்று, ஆனால் அது வக்கிரமாக மாறிவிடாமலும் பார்த்துக்கொண்டு, நல்ல கலையனுபவத்தை அளித்தவர்கள் சிலர் மட்டுமே. அமெரிக்க இயக்குனர்களில், கடந்த இருபது ஆண்டுகளில் டேவிட் ஃபின்ச்சர், குவெண்டின் டரண்டினோ, ராபர்ட் ராட்ரிக்கே ஆகியவர்களே அதைச் சாதித்திருக்கிறார்கள். அதில் ராபர்ட் ராட்ரிக்கே (Robert Rodriguez) படங்களான ‘எல் மரியாச்சி’ ‘டெஸ்பெராடோ’ ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்ஸிகோ’ போன்றவை, என் விருப்பத்துக்குரிய செர்ஜியோ லியோனி-யின் சாயலில் அமைந்திருந்தமையால் மிகவும் பிடித்திருந்தன. 2004-யில் ராபர்ட் மிக வித்தியாசமான ஒரு படத்தை இயக்கியிருந்தார், ‘சின் சிட்டி’. வித்தியாசத்துக்குக் காரணம் அது அதிகமும் கருப்பு-வெள்ளையாகவும் தேவையானபோது சில வண்ணங்களை மட்டும் காட்டுவதாகவும் எடுக்கப்பட்டிருந்தது, அதோடு முதல் முறையாகக் காமிக்ஸ் வரைபடங்கள் அப்படியே திரையில் அசைபவையாக மாறிவிட்டதுபோன்ற பிரம்மையை ஏற்படுத்தும்படிக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கார்ட்டூன், அனிமேஷன் படங்கள் போல இல்லாமல், லைவ் ஆக்ஷன் படமொன்று காமிக்ஸ் ஸ்டைலில் எடுக்கப்பட்டிருந்தது. அதன் கேமராக் கோணங்கள், பின்னணி செட்அமைப்பு, ஒளியமைப்பு, நிறங்கள், படச்சட்டம், உடைகளின் அசைவில் கூட ஓவியத்தின் சாயல் என்று எல்லாமே தனிப்பட்ட கவணத்தோடு காமிக்ஸ்ஸை நினைவுபடுத்தும்படி அமைந்திருந்தன.

அந்தப் படத்தில் ராபர்ட்டின் பெயரோடு இன்னொருவர் பெயரும் இயக்குனராகக் குறிப்பிடப்பட்டிருந்தது, அது ஃபிராங்க் மில்லர். மேலும் ராபர்ட் தன் நண்பரான குவெண்டின் டரண்டினோ-வின் பெயரை ‘சிறப்பு விருந்தினராகச்’ சேர்த்திருந்தார். எனக்குத் தெரிந்து ஒரு படத்தில் ‘ஸ்பெஷல் கெஸ்ட் டைரக்டர்’ என்று ஒருவருக்குக் கிரெடிட் கொடுக்கப்பட்டது இந்தப் படத்தில் மட்டும்தான். டிஜிட்டல் சினிமாவில் சும்மா கால் நனைத்துப் பார்ப்பதற்காகவே ஒரு காட்சியை மட்டும் இயக்கினார் டரண்டினோ. அதுவும் ஒரு விவாதத்தின் போது, மரபுவழி படமாக்கலிலும் திரையிடலிலும் மட்டுமே விருப்பமுள்ள டரண்டினோவிடம் ராபர்ட் “ஒரு காட்சியை டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்துப் பாருங்கள், அதன் பிறகும் பிடிக்கவில்லையென்றால் நிராகரியுங்கள்” என்று சவால் விட, அதை ஏற்றே டரண்டினோ இந்தப் படத்தில் ஒரு காட்சியை இயக்கினார் என்றும், படப்பிடிப்பிற்குப் பின் டிஜிட்டல் சினிமா கீழானதென்ற எண்ணத்தை அவர் மாற்றிக்கொண்டார் என்றும் அப்போது இணையத்தில் வெளியாகி மேலும் ஆர்வத்தைக் கூட்டியது. உடனடியாகக் கள்ளச் சந்தையில் தேடிப்பிடித்து அந்தப் படத்தைப் பார்த்தேன்.

மேட்டி முறையில், நீலம் அல்லது பச்சை வண்ணத்தால் சூழப்பட்ட படப்பிடிப்புத் தளத்துக்குள் சிறிய செட்களும் கொஞ்சம் பொருட்களும் மட்டும் வைத்துக்கொண்டு நடிகர்களை நடிக்க வைத்து, பிறகு கற்பனைக்குச் சாத்தியமான அனைத்தையும் கிராஃபிக்ஸ் மூலம் பின்னணியில் சேர்த்துவிடுவது என்பது முன்பே சிறப்புக் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதுதான். கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பே கூட ஆப்டிகல் எஃபெக்ட்களிலும் இந்த முறையின் மூலமே மாயாஜாலங்கள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் அப்படியே முழுப்படத்தையும் எடுத்துவிடலாம் என்பதை டிஜிட்டல் சினிமாவே சாத்தியமாக்கியது. ஜார்ஜ் லூக்காஸ் தனது ஸ்டார் வார்ஸ் தொடரின் கடைசி இரு படங்களை அப்போது அப்படித்தான் எடுத்து அசத்திக்கொண்டிருந்தார். அதேகாலத்தில் அதே முறையில் எடுக்கப்பட்ட ‘சின் சிட்டி’ முற்றிலும் வித்தியாசமாக காமிக்ஸ்-யிலிருந்து தன் மாதிரியை எடுத்துக்கொண்டிருந்தது. படத்தின் வடிவமும் உள்ளடக்கமும் பிரம்மிப்பூட்டின. படத்தின் இயக்குனர்களுள் ஒருவராகப் பெயர் போடப்பட்ட ஃபிராங்க் மில்லர் என்பவரைப்பற்றி அதன்பின் தான் நான் தெரிந்துகொண்டேன்.

காமிக்ஸ் உலகில் மிகப் புகழ்பெற்றவரான ஃபிராங்க் மில்லர், ஓவியராக ஆரம்பித்து பின்பு காமிக்ஸ் கதைகளை எழுதுபவராகவும் மாறியவர். டிசி காமிக்ஸ், மார்வெல் காமிக்ஸ் உட்பட பல புகழ்பெற்ற நிறுவனங்களில், மிகப் பிரபலமான கதைத் தொடர்களில் அவர் பணியாற்றியிருக்கிறார். இன்று தனிப் புத்தகங்களாகவே புகழ்பெற்றிருக்கும் “பேட்மேன்: த டார்க் நைட் ரிடர்ன்ஸ்” “பேட்மேன் : டார்க் நைட் ஸ்ட்ரைக்ஸ் அகைன்” “சின் சிட்டி” “300” “ரோனின்” “டேர் டெவில்” “ரோபோ காப்” “எலெக்ட்ரா” “ஹார்டு பாயில்டு” “ஸ்பான்” போன்ற பல காமிக்ஸ் நாவல்களை எழுதியும் வரைந்தும் உருவாக்கியிருக்கிறார். சின் சிட்டி என்ற பொதுத் தலைப்பில் அவர் எழுதியிருக்கும் பல குறுங்கதைகளிலிருந்து நான்கை மட்டும் தேர்ந்தெடுத்துப் படத்தின் திரைக்கதைக்குள் அடுக்கியிருக்கிறார்கள். ஃபிராங்க் மில்லரின் கதாபாத்திர அமைப்புகளும், வசனங்களும், கதைச் சூழலும், திருப்பங்களும், எதிர்பாராத முடிவுகளும் ‘சின் சிட்டி’ஐ ஒரு மறக்கமுடியாத படமாக மாற்றியிருக்கிறது.

ஃபிராங்க் மில்லர் பிறகு தனியாகவும் ஒரு படத்தை இயக்கினார். “த ஸ்பிரிட்”(2008) என்ற அந்தப் படம் இன்னொருவர் எழுதிய காமிக்ஸ்-ஐத் தழுவியது. எடுக்கப்பட்ட விதத்தில் அது சின் சிட்டியை விட காமிக்ஸ் ஸ்டைலுக்கு இன்னும் நெருக்கமாக இருந்தது, ஆனால் ஏனோ ஜீவனில்லாததாக வறட்டுத்தனமாகத் தோன்றியது.

ஆனால் அவரது சித்திர நாவலை அச்சு அசலாகத் தழுவி 2006-யில் ஸாக் ஸ்நைடர் எடுத்த “300”, இந்த வகை சினிமாவின் ஒரு உச்சம் என்று சொல்லலாம். வணிக ரீதியிலும் உலகம் முழுக்க மிகப்பெரிய வெற்றியை எட்டிய அந்தப் படம், வழக்கமான வரலாற்றுப் படங்களிலிருந்து எத்தனை மாறுபட்ட கதைசொல்லலைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கவணித்து ரசிக்க முடியும்.

இந்தப் படங்களின் மூலம் ஏற்பட்ட உத்வேகத்தினால் ஃபிராங்க் மில்லரின் அடல்ட் காமிக்ஸ்களைப் படிக்கத்தொடங்கினேன். மிகுந்த வசீகரமான ஓவியங்களும் கூர்மையான வசனங்களும் என்னை சட்டென்று உள்ளிழுத்துக்கொண்டன. புதிய புதிய உலகுகளில் அனுபவங்களில் பயணிக்க வைத்திருக்கின்றன.

அவரது தனித்தன்மை என்பது,

  • வன்மம் கொப்பளிக்கும் விதவிதமான கதைச் சூழல்கள், கான்ஃபிளிக்டுகள், கிளைமாக்ஸ்கள்.
  • மையக் கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்தையே நேரேட்டிவ்வாகப் பயன்படுத்துவது, காமிக்ஸ்க்குப் புதுமையானது.
  • அழித்தொழிப்பதைக் காட்டிலும் தியாகமே பெரிய ‘ஹீரோயிஸம்’ என்று முடிவில் காட்டப்படுவது.

வீரம் என்ற ஒற்றைச் சொல்லால் அவரது நாயகர்களை டிஃபைன் செய்துவிடலாம். ஆனால் நாம் நிறைய பார்த்திருக்கும், தேய்வழக்காகவே மாறிவிட்ட வீரர்களைப் போல இல்லாமல், அந்தக் கதாபாத்திரத்தின் உளவியல், உடல்நோய் உட்பட எல்லா நுணுக்கங்களோடும் அவர் படைத்தளிக்கிறார். அவனை மிகத் தூய்மையான இடத்திலேயே வீற்றிருக்கவிடாமல், குற்றங்களுக்கும் அசிங்கங்களுக்கும் நடுவில் உழல்பவனாகவே சித்தரிக்கிறார். உடல்பலமும் மனபலமும் கொண்டவனாக இருந்தபோதும், பல சமயங்களில் அவன் தடுமாற்றத்தோடும் பலவீனத்தோடும் அலைபவனாகவும், தோல்வியுறுபவனாகவுமே காட்டப்படுகிறான். அன்பும் நீதியுணர்வும் கொண்ட ஒரு முரட்டு ஆசாமியே பொதுவாக அவரது நாயகன். அவன் போலீஸ் என்றாலும் ரவுடி என்றாலும் பேட்மேன் என்றாலும் அப்படித்தான் இருக்கிறான். தனது உச்சகட்டமான கோபத்தினாலும், ஆழமான வன்மத்தினாலுமே அவன் நீதிமானாகவும் உன்னத மனிதனாகவும் மாறுவதாகக் காட்டப்படும் தருணங்களிலேயே ஃபிராங்க் மில்லரின் காட்சிமொழி உச்சமடைகிறது.

அவரது காமிக்ஸ் உலகுக்குள் நுழைய விரும்பும் புதிய வாசகர்கள், முதலில் ‘300’, ‘சின் சிட்டி’, ‘பேட்மேன்: த டார்க் நைட் ரிடர்ன்ஸ்’ ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவரது கதையில் வரும் பேட்மேன், 50 வயதைத் தாண்டிய கிழட்டுச் சிங்கம். அந்த வயதுக்கே உரிய உடல் உபாதைகளும் இதய நோய் போன்றவையும் கொண்டவர். அனுபவம் கொடுத்த நிதானம் அவரை மிக மெதுவாகவே எந்த முடிவையும் எடுக்கவைக்கிறது. ஆனால் முந்தைய எந்த பேட்மேன் கதைகளை விடவும் தீரத்தில் குறைவுபடாத, ஆக்ரோஷமான ஒரு பேட்மேனை உருவாக்கியிருக்கிறார் மில்லர். அவரது பாதிப்பிலேயே, கிறிஸ்டோபர் நோலானின் குழு தங்களது பேட்மேன் கதைகளை உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பேட்மேனுடைய ஆரம்பகாலத்தைப் பற்றிய மூன்று படங்களை நோலான் எடுக்கிறார். வரும்காலத்தில் பேட்மேனுடைய இறுதி நாட்கள் பற்றிய சில தொடர்படங்கள் நிச்சயம் எடுக்கப்படும், அதற்கு மில்லரின் காமிக்ஸ்களே அடிப்படையாக அமையும் என்பதை அவற்றைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது.

மில்லரின் காட்சி மொழியை இன்னும் நுணுக்கமாகப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டுமென்று இப்போது முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஒரு பொழுதுபோக்காகவும் பயிற்சி முறையாகவும் அவரது காமிக்ஸ் கதையொன்றைத் தமிழாக்கம் செய்ய ஆரம்பித்தேன். அவற்றைப் பதிவில் போடலாமா கூடாதா என்று தெரியவில்லை. காப்பிரைட் பிரச்சனைகள் எழலாம். வணிகத்துக்குப் பயன்படுத்தாதவரை பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.

.

Advertisements