[ மீள்பதிவு ]

இயக்குனர் ரோமன் பொலன்ஸ்கியின் படங்களில் நான் முதலில் பார்த்தது “சைனா டவுன்”. திரைக்கதை எழுதுவதைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதிய ஆசிரியர் “சிட் ஃபீல்ட்” (SYD FIELD), நல்ல திரைக்கதையின் கூறுகளை விளக்குவதற்கு அடிக்கடி உதாரணத்திற்கு எடுத்துப் பேசும் படம் சைனா டவுன். அதனாலேயே, அவர் சொல்வதை விளங்கிக்கொள்வதற்காகவாவது அந்தப் படத்தைப் பார்த்தாக வேண்டுமென்ற அவசியம் திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலேயே ஏற்பட்டது. பழைய வீடியோ கேஸட் வடிவிலேயே அந்தப் படத்தை முதலில் பார்த்தேன்.

துப்பறியும் கதைகளுக்கே உரித்தான முடிச்சுகளும், திருப்பங்களும், விறுவிறுப்பும் நிரம்பிய கதையென்பதால் இலகுவாக நம்மை உள்ளிழுத்துச் சென்றுவிடும் படம் அது. அதோடு இளம் ஜாக் நிகல்ஸனின் துடிப்பான நடிப்பாற்றலும், யதார்த்தமான சண்டைக் காட்சிகளும் இப்படத்தை ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும் ஆக்குகிறது. அதிலும் குறிப்பாக இயக்குனரே ஒரு சிறிய அடியாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவர் கத்தியால் ஜாக் நிகல்ஸனின் மூக்கை அறுக்கும் காட்சி, ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் நிஜம்போலவே தோன்றுகிறது. ஆனால் இதை ஒரு சராசரிப் படத்திலிருந்து உயரத்துக்குத் தூக்கிச் செல்வது, உளவியல் சிக்கல்களையும் விபரீதமான உறவுச் சிக்கல்களையும் இதில் ரோமன் பொலன்ஸ்கி கையாண்டிருக்கும் விதம்தான்.

1974யில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 1937ஆம் ஆண்டு வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் கதாநாயகன், பொதுவாகக் கணவன்-மனைவி கள்ளத்தொடர்புகளைப் புலனாய்ந்து சம்பாதிப்பவன். அவனிடம் ஒரு பெண் வந்து, நகராட்சியின் நீர்நிலைகளைப் பராமரிக்கும் தலைமைப் பொறியாளரான தனது கணவனுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறதாவென வேவு பார்க்கச் சொல்கிறாள். நாயகன் துப்பறிய ஆரம்பிக்கும்போது, அது நீர்நிலை திட்டங்களில் இருக்கும் தில்லுமுல்லுகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவது, நகராட்சியில் நடக்கும் ஊழல், பினாமிகளின் பெயரில் நில ஆக்கிரமிப்பு செய்யப்படுவது என்று பெரிய தளத்தில் விரிகிறது.

நாயகன் அந்தத் தலைமைப் பொறியாளர் நிஜமாகவே பொதுமக்களின் நலனில் அக்கறையுள்ளவர் என்று கண்டறிகிறான், ஆனால் அவருக்கு ஒரு இளம் பெண்ணோடு தொடர்பிருக்கிறது என்றும் தெரிகிறது. அந்த உண்மையை அவன் வெளியிட்ட பிறகுதான், தலைமைப் பொறியாளரின் உண்மையான மனைவி இன்னொருத்தி (கதாநாயகி) என்பதும், அவனிடம் துப்பறியும்படிச் சொன்னவள் ஒரு போலி என்பதும், அவன் யாராலோ இந்தப் பொறிக்குள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறான் என்பதும் தெரியவருகிறது. இதற்கிடையில் தலைமைப் பொறியாளர் நீரில் மூழ்கி இறந்துபோக, நாயகன் அது கொலைதான் என்று கண்டறிகிறான்.

அந்தக் கொலையைச் செய்தது யார், காரணம் என்ன, என்பதைத் துப்பறியுமாறு அவனிடம் நாயகியே சொல்கிறாள். நகராட்சியின் ஊழல்களுக்கெல்லாம் மையமாக விளங்கும் பெரும்புள்ளியான ‘நோவா கிராஸ்’, நாயகியின் தந்தைதான் என்பது நாயகனுக்குத் தெரியவருகிறது. தலைமைப் பொறியாளருக்குத் தொடர்பிருப்பதாக நாயகன் நினைத்த அந்த இளம் பெண் யார் என்பது தெரிந்தால் எல்லா முடிச்சுகளும் அவிழும் என்று அவன் நினைக்கிறான். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, அந்த இளம் பெண்ணை, நாயகியே ஒளித்துவைத்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்கிறான். முதலில் நாயகி அவளைத் தன் தங்கை என்கிறாள், பிறகு தன் மகள் என்று மாற்றிச் சொல்கிறாள்.

இறுதியில் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது. பெரும்புள்ளியான நோவா கிராஸ்க்குத் தன் சொந்த மகளுடனேயே வரம்பு மீறிய உறவிருந்தது. நாயகிக்குப் 15 வயதிருக்கும்போது அந்த உறவால் பிறந்த குழந்தைதான் இப்போது அந்த இளம்பெண்ணாக வளர்ந்து நிற்கிறாள். நாயகி தன் மகளோடு தன் அப்பாவிடமிருந்து தப்பிச்செல்வதற்கு நாயகனின் உதவியைக் கோருகிறாள். நாயகன் “உன் அப்பா உன்னைக் கற்பழித்துவிட்டாரா?” என்று கேட்கும்போது, நாயகி கண்களில் ஈரம் கசிய ‘இல்லை’ என்று தலையாட்டுகிறாள். அடுத்தக் காட்சியில் நோவா கிராஸ் நாயகனிடம், “நான் என்னைக் குற்றம் சொல்லமாட்டேன்.. நிறைய பேருக்கு ஒரு உண்மை தெரிவதில்லை, சரியான நேரமும், இடமும், சந்தர்ப்பமும் அமைந்தால் ஒரு மனிதன் எந்த எல்லைக்கும் போகக்கூடும்..” என்று சொல்லும்போது, காட்சியாகக் காட்டப்படாத அந்த விபரீத சம்பவம் தீவிரமாக நமக்கு உறைக்கிறது.

ரோமன் பொலான்ஸ்கியின் திகில் படமான “ரோஸ்மேரிஸ் பேபி” (Rosemary’s Baby) (1968), ஹாலிவுட்டின் பிரபலமான பேய்ப் படங்களான “எக்ஸார்சிஸ்ட்”, “ஓமென்” படங்களின் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறது என்ற போதிலும் அவற்றுக்கு முற்றிலும் வேறான ஒரு படமாகவும், ஐரோப்பிய சினிமா பாணியைக்கொண்டும் இருக்கிறது. ஏராளமான சஸ்பென்ஸ் திரில்லர்களை எடுத்த ஹிட்ச்காக் ஒரு பேய்ப்படம் கூட எடுத்ததில்லை. ஒருவேளை அவர் எடுத்திருந்தால் அது “ரோஸ்மேரிஸ் பேபி” போல இருந்திருக்கும் என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு. சுருக்கமாக இந்தப்படம், பார்வையாளர்களின் கண்களை மிரட்டாமல் மனதை மிரட்டும் திகில் படம் என்று சொல்லலாம்.

அமானுஷ்ய சக்தியால் ஒருத்தி தற்கொலை செய்துகொள்வது, ஒரு நாடக நடிகரின் கண்கள் இரண்டும் குருடாவது, ஒரு முதியவர் திடீரென்று கோமாவில் விழுந்து பிறகு இறந்துபோவது என்பதெல்லாம் இந்தக் கதைக்குள் இருக்கிறது. ஆனால் இவை எவையுமே ‘காட்சியாக’ப் படத்தில் வராது. ரோஸ்மேரி என்னும் மையக் கதாபாத்திரத்திரம் எதையெல்லாம் காண்கிறதோ அதுமட்டுமே காட்சியாக வருகிறது. மற்றவையெல்லாம் அவள் நடந்து முடிந்த பிறகு பார்க்கும்போதும், கேள்விப்படும் போதும்தான் பார்வையாளர்களுக்குத் தெரிகிறது. ஆனால் அந்த அத்தனைக் குரூரக் காட்சிகளும் பார்வையாளர்களின் மனதுக்குள் நடந்துவிடும் என்பதால் அதிகமாக பயமுறுத்துவதாக இருக்கிறது.

இந்தப் படத்தின் முக்கியமான ஒரு திகில் காட்சியைக் கூட நாயகி, அது கனவா நனவா என்று தெரியாத குழப்பத்துடனேயே காண்கிறாள். கனவுகளைப் படமெடுப்பதில் தேர்ந்தவர்களான பெர்க்மன் (Ingmar Bergman), தார்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) போன்றவர்களுக்கு இணையாக அந்தக் கனவை ரோமன் பொலன்ஸ்கி படமாக்கியிருக்கிறார்.

என்னை மிகவும் பாதித்தது அதன் கடைசிக் காட்சிதான். படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் போடும்போது ஒரு தாலாட்டுப் பாட்டு கேட்கும், ரோஸ்மேரி தன் கணவனோடு புதிதாக ஒரு அபார்ட்மெண்டில் வந்து தங்குகிறாள், சூனியக்காரர்களின் ரகசிய சமூகக்குழு ஒன்றின் சூழ்ச்சி வலைக்குள் அவள் சிக்குகிறாள். அவளுக்குத் தெரியாமல், சாத்தான் அவளோடு உடலுறவுகொள்ளும்படிச் செய்கிறார்கள். அவள் வயிற்றில் குழந்தை உண்டானதும், அவர்கள் கொடுக்கும் மூலிகை பானத்தை தினமும் குடிக்க வேண்டும், அவர்களது டாக்டரைத்தான் பார்க்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். அந்த டாக்டரோ பேறுகாலம் பற்றின எந்தப் புத்தகத்தையும் படிக்கக் கூடாது, முன் அனுபவம் உள்ள யார் சொல்வதையும் கேட்கக்கூடாது என்கிறார்.

வயிற்றில் குழந்தை வளர வளர அவள் மெலிந்து, வெளிரி ரத்தசோகை நோயாளிபோல் ஆகிறாள். அவளுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் கர்ப்பகாலத்தில் பெண்கள் இப்படி இருக்கமாட்டார்கள் என்கிறார்கள். மெல்ல மெல்ல அவளுக்குச் சூனியக்காரர்களைப் பற்றித் தெரிய வருகிறது, தன் குழந்தையைப் பலியிடுவதற்காகவே அவர்கள் எல்லாம் செய்கிறார்கள் என்று அவள் நினைக்கிறாள். அவர்களிடமிருந்து தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று அவள் பலவாறாக முயற்சிக்கிறாள், தப்பித்து ஓடுகிறாள். தன் எண்ணங்களை வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசியபடியே இருக்கிறாள், ஓரளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் ஆகிவிடுகிறாள். ஆனால் குழந்தை பிறக்கவிருக்கும் சமயத்தில் அவர்களிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறாள்.

அவள் திரும்பக் கண் விழிக்கும் போது, நடந்தது எல்லாமே அவளுடைய வீணான பயத்தால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுதான், இம்மாதிரி மனக் குழப்பங்கள் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு வருவதுதான் என்கிறார்கள். அவள் செய்த களேபரத்தால் குழந்தை இறந்தே பிறந்தது என்கிறார்கள். பிறகு, அவள் தனிமையில் இருக்கும்போது, பக்கத்து ஃப்ளாட்டிலிருந்து தன் குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்டு அங்கு செல்கிறாள். சூனியக்காரர்களின் சமூகம் மொத்தமும் அங்கு குழுமியிருக்க, நடுவில் தொட்டிலில் அந்தக் குழந்தை அழுதபடி இருக்கிறது. அந்தக் குழுவின் தலைவன் ரோஸ்மேரியை அந்தக் குழந்தையின் அருகில் செல்ல அனுமதிக்கிறான். அவளைப் பார்த்ததும்தான் குழந்தை அழுகையை நிறுத்துகிறது. பார்வையாளர்களுக்கு அந்தக் குழந்தையின் முகம் காட்டப்படுவதில்லை. “குழந்தையின் கண்கள் ஏன் இப்படி விநோதமாக சிவப்பாக இருக்கிறது” என்று அவள் கேட்க, தலைவன், “அது தன் தந்தையின் கண்களைக் கொண்டிருக்கிறது” என்கிறான். அவன் சாத்தானைப் பற்றிச் சொல்கிறான் என்பது ரோஸ்மேரிக்குப் புரியவில்லை, அவள் தன் குழந்தையை அன்போடு பார்த்துத் தாலாட்டுப் பாடத் தொடங்குகிறாள். ஆரம்ப டைட்டில் காட்சி போலவே, உயரத்திலிருந்து ஊரின் பகுதிகள் காட்டப்பட பின்னணியில் தாலாட்டு ஒலிக்கிறது.

எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததுமே முதலில் தோன்றியது, அன்பு எத்தனை ஆபத்தானது என்பதுதான். சாத்தானின் குழந்தையானாலும் தாய் அன்பைப் பொழியத்தான் செய்கிறாள். அன்பு மனித குலத்தை வாழ்விக்கிறது, ஆனால் அதேசமயத்தில் மாபெரும் அழிவுச் சக்தியும் அன்புதான்.