கொப்பலாவின் பேட்டி ஒன்றை நான் தமிழாக்கம் செய்து 4 பகுதிகளாக வெளியிட்டிருந்தேன். அது மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. பொதுவாக நூலகங்களில் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு நன்கு பரிச்சையமான இலக்கியப் பத்திரிக்கையான ‘அம்ருதா’ இதழில், என்னைப் பற்றிய குறிப்புடன் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு நண்பர் படித்துவிட்டுச் சொன்னார், நான் இன்னும் அந்த இதழை வாசிக்கவில்லை, என்றாலும் மிகப் பெருமையாக இருக்கிறது. ஏற்கனவே கோவையிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டு, அங்கு நடந்த ஃபிலிம் சொஸைட்டி திரையிடலுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரையை பிரதி எடுத்துக்கொடுத்ததாகச் சொல்லியிருந்தார். இதெல்லாமே கொப்பலாவுக்கு இன்றும் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.  அந்த பேட்டி தொடர்பான வேறு சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு

அந்தப் பேட்டியின் முக்கியமான ஒரு அம்சம், சினிமாவை பணம் சம்பாதிப்பதற்கான வழியாக அல்லாமல் கலையாக அனுகவேண்டும் என்று இளைஞர்களை நோக்கி கொப்பலா விடுத்திருக்கும் அறைகூவல். திரைக்கலை உருவாகிய ஆரம்ப கட்டத்திலேயே அதில் புதுப்புது முயற்சிகள் செய்துபார்க்கவிடாமல் வியாபாரமாக மாற்றிவிட்டார்கள் என்று அவர் வருத்தப்படுகிறார். ஆனால் அதைவிட எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய அவதானிப்பு முக்கியமானது.

இணையத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி, எல்லாவற்றையும் இலவசமாக டவுன்லோடு செய்து பார்த்துவிடலாம் என்று நினைக்கிற இன்றைய இளைஞர்களின் மனநிலை காரணமாக, எதிர்காலத்தில் சினிமா, இசைத்தொகுப்பு போன்றவற்றின் வியாபாரமே அழிந்து அந்தத் துறைகளே இல்லாமல் ஆகிவிடுமோ என்று சில வருடங்களாகவே நான் அச்சப்படுவதுண்டு. ஆனால் கொப்பலா அதை வேறு மாதிரியாகப் பார்க்கிறார். அவர் இலவச டவுன்லோடுகள் ஒருவேளை சரிதானோ என்கிறார். வரப்போகும் புதிய யுகத்தில் அது திருட்டுத்தனமாக இல்லாமல், எல்லாக் கலைகளும் முற்றிலும் இலவசமானதாக மாறிவிடலாம் என்கிறார்.

பழைய காலத்தில் கலைகள் அப்படித்தான் இருந்தன, சில நூறாண்டுகளாகத்தான் கலைஞர்கள் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். என்றென்றைக்கும் அது அப்படியே நீடிக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, கலைக்கு கட்டாயம் ஒரு விலை இருக்கவேண்டுமென்று யார் சொன்னது? என்று கேட்கிறார் கொப்பலா. இந்தப் புதிய மாற்றம் சினிமாவை ‘வியாபார எதிர்பார்ப்புகள்’ என்கிற பிடியிலிருந்து தூய கலை வடிவமாக மீட்டுக்கொண்டுவரும் என்று அவர் நம்புகிறார். இந்தப் புதிய சூழலில் கலைஞர்கள் தங்கள் நிதியாதாரத்துக்கு ஒரு உப தொழிலையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார். இது நிச்சயம் ஒரு விவாதத்திற்குரிய விஷயம்தான்.

மேலும் அந்தப் பேட்டியில் கொப்பலா, இலக்கியப் படைப்புகளை திரைப்படமாக மறு ஆக்கம் செய்யும் இயக்குனருக்கு உபயோகமாகக் கூடிய சில நல்ல குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். முதல்முறை வாசிக்கும்போதே நாவலின் பக்கங்களிலேயே குறிப்புகளை எழுதிவைத்து, தேவையான பக்கங்களை மட்டும் தொகுத்து வைத்துக்கொண்டு, படப்பிடிப்புத் தளத்தில் திரைக்கதையை விடவும் அந்தத் தொகுப்பைச் சார்ந்தே தான் படமெடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். அப்படி அவர் நாவலின் பக்கத்துக்குள்ளேயே குறிப்புகளை எழுதிவைத்திருக்கும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பார்த்தேன். மரியோ புஸோ-வின் காட்ஃபாதர் நாவலில் ஒரு பக்கத்தில் கொப்பலா தன் கைப்பட குறிப்புகள் எழுதிவைத்திருக்கும் படம் கீழே :

கொப்பலா அந்தப் பேட்டியில் சொன்ன இன்னொரு புதிய செய்தி, ‘கலைத் திருட்டு’ ‘அறிவுத் திருட்டு’ என்று பொதுவாக நம் பதிவர்கள் பொங்குவது தொடர்பானது. ‘எங்களிடமிருந்து திருடுங்கள்!’ என்று புதிய இயக்குனர்களை நோக்கிச் சொல்கிறார் கொப்பலா, ‘நீங்கள் எடுத்துக்கொண்டது எல்லாமே நாங்கள் உங்களுக்குக் கொடுத்ததுதான், அதை உங்கள் குரலில் பதிவுசெய்யுங்கள், அப்படித்தான் உங்கள் சொந்தக் குரலை நீங்கள் கண்டடைய முடியும்’ என்கிறார். நான் முன்பு எழுதிய ஒரு கட்டுரையில் செர்ஜியோ லியோனி என்ற பெரிய படைப்பாளியே தன்னுடைய முதல் படத்தின் கதையைத் ‘திருடி’த்தான் எடுத்தார் என்றும் சினிமா போன்ற ஒரு பரப்புக்கலை அப்படிக் கொண்டும் கொடுத்தும் தான் வளர முடியும் என்றும் எழுதியிருந்தேன்.

காப்பியடித்த தமிழ்ப் படங்களைக் காட்டிக்கொடுக்கும் விதமாக ஹாலிவுட் பட நிறுவனங்களுக்கு இமெயில் அனுப்புவதை ஒரு இயக்கமாக நடத்துவதாக, சமீபத்தில் சில பதிவர்கள் அறிவித்ததைப் பார்த்து எனக்கு சிரிப்பே வந்தது. ஹாலிவுட் நிறுவனங்கள் எவ்வளவு யோக்கியமானவை என்று நினைத்துக்கொண்டதால் வந்த சிரிப்பு அது. தமிழில் படம் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் நிறுவனம் இங்கு யாருடைய பொறுப்பில் அதை விட்டிருக்கிறதோ அவர் முன்பு தமிழிலும் இந்தியிலும் எடுத்த படத்தைப் பார்க்காமலா இருந்திருப்பார்கள்? இதை நான் சத்யஜித்ரே-வின் ஏலியன் என்ற பதிவில் ஒரு காட்டமான இறுதிப் பத்தியாக எழுதி பிறகு அதை அழித்துவிட்டேன். பாதியில் முடித்ததால்தான், அந்தக் கட்டுரையின் இறுதி வரி, நான் ஸ்பீல்பெர்க் மீது தீர்ப்புக்கூறியது போல அமைந்துவிட்டது. ஆனால் அது என் நோக்கமல்ல.

வெளியிலிருந்து எடுத்துக்கொள்வது என்பதை ஹாலிவுட் நிறுவனங்களும் கலைஞர்களும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். காப்பிரைட் பிரச்சனை வருமளவுக்கு இருந்தால் மட்டுமே அவர்களும் அதற்கான உரிமத்தை வாங்குகிறார்கள். இல்லையென்றால் விட்டுவிடுகிறார்கள். தங்களுக்குத் தூண்டுதலாக அமைந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்கள் டைட்டிலில் போடுவது இல்லை, பொதுவில் சொல்வதும் இல்லை. கிறிஸ்டோபர் நோலான் முதல் உலகமெங்கும் உள்ள இயக்குனர்கள் இதில் அடக்கம்.

கொப்பலா இதை வேறுவிதமாகப் பார்க்கிறார். அடுத்த தலைமுறையினர் தன்னிடமிருந்து ‘எடுத்துக்’கொள்வதே ஒரு கலைஞனை மரணமில்லாதவனாக ஆக்குகிறது என்று பிரஞ்சு எழுத்தாளர் ஒருவர் சொன்னதை உதாரணமாகச் சொல்லும் கொப்பலா, ஒரு வளரும் கலைஞன் தான் விரும்பும் வேறொருவரின் படைப்பை அப்படியே போலிசெய்து மீண்டும் உருவாக்குவது கூட தவறில்லை என்கிறார். இதே கருத்தை வேறொரு வீடியோ பேட்டியிலும் கொப்பலா சொல்லியிருக்கிறார். அதன் காணொளி கீழே..