இரண்டாம் உலகப் போரின்போது நாஸிப் படையினரால் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். அப்போது நடந்த உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை சித்தரிக்கும் படங்களில் 3 மிகப் பிரபலமானவை. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் “சிண்ட்லர்ஸ் லிஸ்ட்”, ரொபெர்டோ பெனிக்னியின் “லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்” மற்றும் ரோமன் பொலன்ஸ்கியின் “தி பியானிஸ்ட்”. மூன்றுமே அதனதன் இயக்குனர்களுக்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுத்தந்தவை.

முன்னது மிகச் சிறந்த படமென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் கொஞ்சம் “ஹாலிவுட்தனமானது”, அளவுக்கு மீறிப் பிரம்மாண்டமான சட்டகத்துக்குள் வரையப்பட்டிருப்பதால் ஓரளவுக்கு யதார்த்தத்தை மீறுவது, மிகப் பலரின் கதையைச் சேர்த்துக்கட்டிய பொட்டலம் போன்ற திரைக்கதையுடையது. “சிண்ட்லர்ஸ் லிஸ்ட்”க்கு அப்படியே நேர் எதிரானது “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்”, ஒரு விளையாட்டுப்போல அந்தப் பிரச்சனையை இலகுவாக்கி நகைச்சுவையாகச் சொல்லும் படம். இந்த இரு துருவங்களுக்கும் நடுவில், யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும் படம் “தி பியானிஸ்ட்” தான்.

மேலும் அந்த இரு படங்களின் மையக் கதாபாத்திரங்களும், தத்தம் வழிகளில் நம்பிக்கையுடன் போராடி தம்மைச் சார்ந்தவர்களின் உயிரைக் காப்பாற்றி ஹீரோக்களாகிறார்கள். ஆனால் “தி பியானிஸ்ட்”டின் மையப்பாத்திரம் முழுக்க முழுக்க சாதாரணமானவனாக, கிடைக்கும் சந்தர்ப்பங்களின் பொந்துகளுக்குள் நுழைந்து, தன்னைக் குறுக்கிக்கொண்டு, பசித்திருந்து, தனித்திருந்து, ஒரு கரப்பான் பூச்சியைப்போல வாழ்ந்து தன்னை மட்டும் தப்புவித்துக்கொள்கிறான். நாம் அந்தச் சூழலில் இருந்தால் என்ன செய்திருப்போமோ அதைத்தான் அவன் செய்கிறான், அவன் ஒரு ‘ஹீரோ’ அல்ல, காப்பாற்றுபவன் அல்ல, தப்பிப் பிழைப்பவன் மட்டுமே.

அட்ரியன் பிராடி’க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்த அந்தக் கதாபாத்திரம் நூறு சதவிகிதம் ரத்தமும் சதையுமாகத் திரையில் உயிர்பெற்றிருக்கிறது. ரோமன் பொலன்ஸ்கி இயக்கியதில் ஆகச் சிறந்ததென்று நான் நினைப்பதும் இந்தப் படத்தைத் தான். போலந்தின் புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞரான Wladyslaw Szpilman எழுதிய சுயசரிதையை, முடிந்தவரை அப்படியே எடுக்க முயற்சித்திருக்கிறார் ரோமன்.

படத்தின் முதல்காட்சியில், ‘வார்ஸா’ நகரின் வானொலி நிலையத்தில் பியானோ வாசித்தபடி இருக்கிறான் ஸ்பில்மன். திடீரென்று வெளியே குண்டுகள் வீசப்படும் சத்தங்கள் கேட்க, அப்போதும் அவன் அசையாமல் வாசித்தபடியே இருக்கிறான். ஊரின் களேபரங்களைவிட, நேரடி ஒலிபரப்பில் இசை நிற்கக்கூடாது என்பதுதான் அவனுக்கு முக்கியமாக இருக்கிறது. வானொலி நிலையம் மீதே குண்டு வீசப்பட்டு மற்ற பணியாளர்கள் எல்லாம் ஓடிய பிறகும் அவன் விரல்களைப் பியானோவிலிருந்து விலக்கவில்லை. இறுதியில் அந்த அறையே வெடிக்கும்போதுதான் அவன் அங்கிருந்து ஓடுகிறான்.

ஊரே அழியும்போதும் தன் வேலையிலேயே கவணமாக இருக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை இந்த முதல் காட்சியே காட்டிவிடுகிறது. பிறகு, யூதர்கள் வார்ஸாவின் உணவகங்களுக்குள் நுழைவதும் பூங்கா பெஞ்சுகளில் உட்காருவதும் கூட தடைசெய்யப்படும்போது, நாயகன் மிகச் சாதாரணமாக அதை ஏற்றுக்கொண்டு அந்தப் புதிய சூழலுக்குள் வாழத் தன்னைப் பழக்கிக்கொள்கிறான். இந்தத் தன்மைதான் அவனை இறுதிவரை காப்பாற்றுகிறது.

ஸ்பில்மனும் அவனது அப்பா, அம்மா, இரு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனும் சேர்ந்து தங்களிடம் இருக்கும் பெரும் பணத்தை எப்படி ஒளித்துவைப்பது எனத் திட்டமிடும் காட்சியும், சில நாட்களுக்குப் பின்பு அவர்களே கும்பலோடு கும்பலாக அடைக்கப்பட்டிருக்கும்போது, அங்கு மிட்டாய் விற்கும் ஒரு யூதச் சிறுவனைப் பார்த்து “இனி பணத்தை வைத்து இவன் என்ன செய்யப்போகிறான்?” என்று பேசுவதும், தங்கள் கைச் செலவுக்கிருந்த மொத்தத்தையும் கொடுத்து ஒரு மிட்டாயை வாங்கி, ஆறு பொடித் துண்டுகளாக நறுக்கி குடும்பமே பகிர்ந்துண்ணும் காட்சியும் மறக்க முடியாதவை.

இந்தக் குடும்பம் பார்த்துக்கொண்டிருக்க, எதிர் அபார்ட்மெண்டில் நாசிப்படை நுழைகிறது, மூன்றாவது மாடியில் உணவு மேஜையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தினர் எழுந்து நிற்க, ஊனமுற்ற ஒருவர் மட்டும் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார், நாசிப் படையினர் வீல் சேரோடு அவரைத் தூக்கி ஜன்னலுக்கு வெளியே தட்டிவிடுகிறார்கள். மற்றொரு காட்சியில் பொழுதுபோகாத நாசிகள் நடுரோட்டில் வைத்து யூதர்களை ஜோடி ஜோடியாகச் சேர்த்து ஆடவிடுகிறார்கள். படம் நெடுகிலும் இம்மாதிரிக் காட்சிகள் வந்தபடியே இருக்கின்றன.

படத்தில் மிக முக்கியமானதாகக் காட்டப்பட்டிருப்பது …பசி. தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடைய சகோதரன் விசாரணைக்காகப் பிடிக்கப்பட்டிருக்க, ஸ்பில்மன் தனக்குத் தெரிந்த போலந்து அதிகாரியிடம் கெஞ்சி அவனை விடுவிக்கிறான். சகோதரன் வீராவேசமாக ‘எதற்காக அவர்களிடம் மண்டியிட்டாய்’ என்று கோபித்தபடி நடந்து, சட்டென்று கிறங்கி விழுந்து “பசி..” என்று முனங்கும்போது, மனிதனுக்கு எது மிக முக்கியமானது எனும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

ஒரு வயோதிகப் பெண்ணிடமிருந்து உணவைப் பறிக்க ஒருவன் முயற்சித்து, இருவரும் போராடி அது தரையில் கொட்டிவிட, அவன் பாய்ந்து அதை நக்கிச் சாப்பிட, அவள் அழுதவாறு அவன் முதுகில் அடித்தபடியே இருப்பதை ஸ்பில்மன் பார்க்கிறான். படத்தின் பிற்பாதி முழுவதும் அவனே அப்படித்தான் உணவுக்காக அலைகிறான். தன் வயிற்றை நிரப்பிக்கொள்வதே ஸ்பில்மனுக்கு மற்றெல்லாவற்றையும்விடப் பிரதானமாக இருக்கிறது.

முன்பு தனது ரசிகையாக இருந்து, பின்பு தோழியாகவும் ஆன பெண்ணின் வீட்டில், அவன் தஞ்சமடையும் போது, அவளும் அவள் கணவனும் பியானோ கலைஞன் என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலோடு பார்த்தபடி இருக்க, அவன் “ஒரு துண்டு பிரட் கிடைக்குமா?” என்று கேட்கிறான். மற்றொரு காட்சியில் உணவுக்காகத் தன் கடிகாரத்தை விற்கும்போது, “உணவு, காலத்தை விடவும் அத்தியாவசியமானது” என்கிறான்.

அவனைக் காப்பாற்றுவதற்காக ஒரு அப்பார்ட்மெண்டின் ஃபிளாட்டுக்குள் வைத்துப் பூட்டுகிறார்கள், உள்ளே ஆள் இருப்பதே தெரியக்கூடாது- ஒரு சிறு சத்தம்கூட வெளியே மற்றவர்களுக்குக் கேட்கக்கூடாது என்று அறிவுருத்துகிறார்கள். ஆனால் அந்த ஃப்ளாட்டுக்குள் ஒரு பியானோ இருக்கிறது, அவன் பியானோவைப் பார்த்தே பலமாதங்கள் ஆகிவிட்ட நிலையில் வாஞ்சையோடு அதைப் பார்க்கிறான். உட்கார்ந்து வாசிக்கிறான்.. இனிமையான பியானோ இசை நம் செவிகளை நிறைக்கிறது.. சத்தம் வெளியே கேட்குமே என்று நாம் பதைபதைக்கும்போது, அவனது விரல்கள் காட்டப்படுகின்றன.. மிக வேகமாக அந்த விரல்கள் வாசித்தபடி இருந்தாலும், அவை எவையுமே பியானோவின் விசைகளைத் தொடவே இல்லை. அந்தரத்தில் அசைந்தபடி இருக்கின்றன. அந்த இசை முழுக்க முழுக்க அவனது மனதுக்குள்தான் இசைக்கப்படுகிறது.

படம் நெடுகிலுமே அவன் உயிரைக் காப்பாற்ற ஓடியபடி, அல்ல, பதுங்கியபடியே இருக்கிறான். சந்தர்ப்பங்கள்தான் அவனைத் தப்பவிடுகின்றன. ரோமன் பொலன்ஸ்கி, வார்ஸாவில் நடக்கும் அடக்குமுறைகள், போராட்டங்கள், யுத்தங்கள் எல்லாவற்றையும் மையக் கதாபாத்திரத்தின் பார்வைக் கோணத்திலிருந்து மட்டுமே காட்டுகிறார். அதைத் தாண்டி அவர், காட்சி விறுவிறுப்புக்காக அவற்றை விவரித்துக் காட்டுவதில்லை.

கடுமையான போருக்குப்பின் அந்த நகரமே அழிந்து, வெறும் இடிபாடுகளின் குவியலாக மாற, அதன் நடுவே ஸ்பில்மன் மட்டும் மெலிந்த உருவமாகப் பசியில் தள்ளாடியபடித் தனியாக செல்லும் காட்சிதான் ரோமன் பொலன்ஸ்கி எடுத்தவற்றிலேயே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தை சமீபத்தில் நான் திரும்ப பார்த்தபோது, அந்தக் காட்சியில் என் மனதுக்குள் “கரப்பான் பூச்சி” என்ற ஒற்றைச் சொல்தான் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் படத்துக்குள் அப்படிப்பட்ட ஒப்பீடு எதுவுமே இல்லை.

படத்தின் இறுதியில் ஸ்பில்மன் ஒரு ஜெர்மன் அதிகாரியின் கண்ணில் பட்டுவிடுகிறான். “யார் நீ?” என்று அவர் கேட்க, ஸ்பில்மன் யோசித்துவிட்டு “..பியானிஸ்ட்” என்கிறான். அவர் அமைதியாகத் தன்னைப் பிந்தொடரும்படிச் சைகைகாட்டிவிட்டுப் பக்கத்து அறைக்குள் செல்கிறார். அந்த அறையில் ஒரு பியானோ இருக்கிறது. ஸ்பில்மன் அதை வாசிக்கிறான். அற்புதமான இசையை உள்ளம் உருகக் கேட்கும் அந்த நாசிப் படைக்காரர், அந்த யூதனுக்கு உணவு கொடுத்து, மறைந்து வாழ உதவியும் செய்கிறார், “ரஸ்யப் படைகள் நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் கொஞ்ச நாளுக்கு நீ தாக்குப்பிடித்துவிடு” என்றும் சொல்கிறார்.

பின்பு ஜெர்மன் படைகள் வார்சாவை விட்டுப் பின்வாங்கிச் செல்லும்போது, அந்த அதிகாரி ரகசியமாக ஸ்பில்மனை வந்து பார்த்து, சில நாட்களுக்குப் போதுமான அளவுக்கு உணவுப்பொருட்களும் குளிருக்கு ஆடையும் கொடுக்கிறார். ஸ்பில்மன் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று உணர்ச்சிவசப்பட, அவர் அமைதியாக “கடவுளுக்கு நன்றி சொல், எனக்கல்ல. அவர் நாம் உயிர்வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறார் இல்லையா? ..குறைந்தது அப்படித்தான் நாம் நம்பவேண்டும்” என்கிறார். “போருக்குப் பின் நீ என்ன செய்வாய்?” என்று அவர் கேட்க, “ரேடியோவில் இசைப்பேன்” என்று ஸ்பில்மன் சொல்ல, அந்த அதிகாரி, “உன் பெயரைச் சொல்லு.. நான் ரேடியோவில் உன் இசையைக் கேட்பேன்” என்கிறார். மிகுந்த உருக்கமான அந்த சம்பவம், நிஜமாக நடந்து சுயசரிதையில் எழுதப்படாவிட்டால் நம்பவே முடியாத அளவுக்கு, மனித நேயத்தையும் மனித குலத்தின்மேல் நம்பிக்கையையும் பிரகடனப்படுத்துவதாக இருக்கிறது.

காலம் எல்லாவற்றையும் சட்டென்று மாற்றிப்போட்டுவிடுகிறது. ஸ்பில்மன் ரஸ்யப் படையால் மீட்கப்பட்டு, போலந்தின் மதிப்புமிக்க இசைக் கலைஞராக 88 வயதுவரை வாழ்ந்தார். அந்த ஜெர்மன் அதிகாரி ரஸ்யப் படையால் பிடிக்கப்பட்டு, போர்க் குற்றவாளியாக சிறையிலேயே இருந்து, 1953யில் இறந்துபோனார். அவர் ஸ்பில்மன்னை தவிர்த்து வேறு சில யூதர்களையும் காப்பாற்றியதாகப் பின்பு தெரியவந்தது. தற்போது யூதர்களின் நாடான இஸ்ரேல் அந்த நாசி அதிகாரிக்கு மிக உயரிய விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், அனைவரின் மனதையும் உலுக்கிய, உணர்ச்சிகரமான “தி பியானிஸ்ட்” படம்தான்.

[திருத்தப்பட்ட மறுபதிப்பு]