bicycle-thieves

இணையத்தில் பரவலாகக் கண்ணில்படுவனவற்றை வாசிக்கையில் ஒன்றை உணரமுடிகிறது. ஒரு நல்ல சினிமா என்பது சமகால அரசியலைப் பற்றிப் பேசியிருக்கவேண்டும் என்கிற எண்ணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. கலையம்சம் என்பதை இரண்டாமிடத்திலேயே வைக்கிறார்கள். ஒரு படம் POLITICALLY CORRECT—ஆக இருக்கிறது என்பதற்காகவே அது எத்தனை மோசமாக இருந்தாலும் கொண்டாடுகிறார்கள். தான் நம்பும் அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்பதாலேயே ஒரு படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பிடிவாதமாக நிராகரிக்கிறார்கள்.

திரைப்படம் என்று மட்டுமில்லை, ஒரு நாவலைப் பற்றிய விமர்சனக் கட்டுரையாக இருந்தாலும் கூட அதன் அரசியல் பற்றியே அதிகமும் எழுதப்படுகிறது. ஆனால் ஒரு கலைப் படைப்பை அதன் நுட்பமான கலை அம்சம், வடிவ ஒருமை, அழகியல் போன்றவற்றை மையமாக வைத்து விமர்சிப்பதே சரியானதென்று நான் நினைக்கிறேன். அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக அது உருவாக்கப்பட்ட அரசியல் பின்னணி பற்றி எழுதலாம் தப்பில்லை. ஆனால் ஒவ்வொரு படைப்பையும் அது முன்வைக்கும் அரசியல் என்ன என்கிற ஆராய்ச்சியோடு மட்டுமே அணுகுவது, எடைபோடுவது தவறு என்று நான் நினைக்கிறேன்.

கலை என்பது வெறும் பொழுதுபோக்குக்கானது, அரசியல்தான் சமூகத்தை வழிநடத்துவது, ஆகவே கலையை விட அரசியல் மேன்மையானது – முக்கியமானது என்கிற கருத்து பொதுவாகவே எல்லாரிடமும் இருக்கிறது. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இதைச் சொல்வதற்காகப் பலரும் என்னைக் கேலிசெய்யக் கூடும். திட்டக் கூடும்.

என் நிலைப்பாட்டை எனக்குத் தெரிந்த சினிமாவிலிருந்தே விளக்க முயற்சிக்கிறேன். உலக அளவில் மிக முக்கியமான படங்களில் ஒன்று ‘பைசைக்கிள் தீவ்ஸ்’. நான் திரைப்படக் கல்லூரியில் படித்த போது இயக்குனர் ஹரிஹரன் (ஏழாவது மனிதன்) மூன்று நாள் பயிலரங்கு ஒன்றை அங்கு நடத்தினார். அதில் ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்தின் பின்னணியில் இருக்கும் இத்தாலிய அரசியல், இரண்டாம் உலகப்போர் தோல்விக்குப் பின்னான சூழல் (சர்வாதிகாரி முசோலினி கொல்லப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட படம்) போன்றவற்றைச் சொல்லிப் படத்துக்குப் புதிய விளக்கம் ஒன்றை வழங்கினார். ஆனால் அது எதுவும் தெரிவதற்கு முன்பே ஒரு கலைப் படைப்பாக அது பெரும் உச்சத்தில் இருக்கிறது என்கிற முடிவுக்கு நான் வந்திருந்தேன். ஆச்சர்யம்தான்.

எந்த கிளாஸிக்கும் ஒவ்வொரு முறையும் முற்றிலும் புதியதாக எதையாவது நமக்கு வழங்கிக்கொண்டே இருக்கும் என்பதை நான் தெரிந்துகொண்டது அப்போதுதான். அதோடு, ஒரு நல்ல கிளாஸிக் படம் எக்காலத்துக்கும் எந்த நிலப்பரப்புக்கும் பொருந்தக்கூடிய அம்சங்களைத் தன்னிடம் கொண்டிருக்கும் என்பதையும், அந்தப் படம் எடுக்கப்பட்ட காலத்து அரசியல் சூழல் என்பது பிற்காலப் பார்வையாளர்களுக்கு வெறும் தகவல்களாகவே மிஞ்சும் – அவற்றால் அந்தப் படத்துக்கு எந்தப் பயனும் இல்லை என்பதையும் புரிந்துகொண்டேன். “பைசைக்கிள் தீவ்ஸ்” வெறும் இத்தாலிய அரசியலோடு சுருங்கிவிடும் படமே அல்ல. அது உலகம் முழுவதிலுமுள்ள எளிய மனிதர்களோடு, திக்கற்று நிற்பவர்களோடு நேரடியாக உரையாடக் கூடியதாக, காலம் கடந்து தேசம் கடந்து நிற்கக்கூடியதாக இருக்கிறது.

bicycle_thieves

1933யில் எடுக்கப்பட்ட ‘கிங்காங்’ திரைப்படம் அந்தக் கால அமெரிக்க அரசியல் மீதான விமர்சனமே என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் கிங்காங் படம் அப்படி சுருங்கக் கூடியதாக இருந்திருந்தால், உலகம் முழுவதும் ரசிகர்களை அது பெற்றிருக்க முடியாது, மீண்டும் மீண்டும் அந்தப் படத்தை வேறு காலகட்டங்களில் எடுத்திருக்கவும் மாட்டார்கள். அந்தப் படத்தின் கடைசி வசனமான “அழகுதான் அந்த மிருகத்தைக் கொன்றது” (It was Beauty Killed the Beast) என்பதிலிருந்து ஆரம்பித்து நாம் அந்தப் படத்திற்குள் எதிர்நீச்சல் போட்டு உள்ளே நுழைந்தால், அற்புதமான ஆழங்களுக்குள் இழுத்துச் சென்றுவிடும் கலைப்படைப்பு அது.

சமகால அரசியலைப் பற்றிக் கருத்துச் சொல்வது என்பது நாம் எப்போதும் செய்துகொண்டிருப்பதுதான். டீக்கடையிலிருந்து ஃபேஸ்புக் வரை நாம் அதைத்தான் செய்கிறோம். அதையே நாம் கலைப் படைப்புகளிலும் எதிர்பார்க்கிறோம்.

சோழர் காலத்தில் ஒரு கோயில் மண்டபத்தில் சிலர் உட்கார்ந்து அரசியல் நிலவரம் நாட்டு நடப்பெல்லாம் பேசினார்கள் என்று வைத்துக்கொள்வோம். பாண்டியன் படையெடுத்து வந்து கைப்பற்றிய பிறகு, அதே கோயில் மண்டபத்தில் வேறு சிலர் உட்கார்ந்து வேறு அரசியல் பேசியிருப்பார்கள். நாயக்கர் காலத்தில் வேறு பேசியிருப்பார்கள், ஜமீந்தார் காலத்திலும் அரசியல் பேசியிருப்பார்கள், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பெரிய அரசியல் கூட்டங்கள் அங்கு நடந்திருக்கும், விடுதலையடைந்த இந்தியாவிலும் அங்கு அரட்டைக் கச்சேரிகள் தினமும் நடந்துகொண்டுதானிருக்கும். ஆனால் பேசப்படும் அரசியலில் தலைகீழ் மாற்றங்கள் நடந்திருக்கும், முன்பு சரியாக இருந்தது இப்போது தவறாக ஆகியிருக்கலாம், முன்பு எதிர்க்கப்பட்டது இப்போது ஆதரிக்கப்படலாம். அதேசமயத்தில், அந்தக் கோவிலில் இருக்கும் சிலைகள், வேலைப்பாடுகள் மிக்க கற்தூண்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளாக அதே அழகுடனும் கலையம்சத்துடனும் மாற்றமில்லாமல் இப்போதும் இருக்கும் அல்லவா? ஒவ்வொரு காலத்திலும் புதுப்புதுக் குழந்தைகள் அந்த கோபுரத்தையும் மேல் விதானத்தையும் வியப்புடன் அன்னாந்து பார்த்திருக்கும் அல்லவா? அதுதான் கலையின் சிறப்பு. சமகால அரசியலைப் பற்றிக் கருத்துச் சொல்வது என்பதை விட, கலை மிகமிகமிக உயரத்தில் நின்றுகொண்டிருக்கிறது.

king-kong

அதேசமயத்தில், அரசியல் செயல்பாட்டாளர்கள், சமூக மாற்றத்துக்காகப் போராடுபவர்கள், தேசத்தை வழிநடத்துபவர்கள், அவர்களுக்குப் பின் நிற்கும் மக்கள் சக்தி, அவர்களை ஒன்றினைக்கும் இலட்சியம், கொள்கை என்பனவற்றோடு நான் கலைஞர்களின் செயல்பாட்டை ஒப்பிடவில்லை என்பதையும், கலைஞர்கள் சமூகப் போராளிகளை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லவரவில்லை என்பதையும் இங்கு நான் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

அரசியல் செயல்பாடு என்பது எந்தச் சமூக அமைப்பிலும் பிரிக்க முடியாதபடி கலந்திருப்பது. எல்லாருக்கும் அவரவர் அரசியல் முக்கியம்தான். அரசியல் தான் மானுடத்தை மாற்றியமைக்கிறது. மனிதனின் ‘சர்வைவல்’ போராட்டம், குழு மனப்பான்மை, எதிர்க் குழுக்கள் மீதான வன்மம் என்பது கற்காலத்திலிருந்தே மனிதர்களோடு கூடவே இருக்கிறது. அதே குழு அரசியல் தான் இன்றைய நாகரீக சமூகத்திலும் இருக்கிறது. ஆரம்பத்தில் கற்களால் மோதிக்கொண்டவர்கள் இப்போது சொற்களால் மோதிக்கொள்கிறார்கள். அரசியல் இல்லாதவர்களே இல்லைதான். ஆனால், சமகாலத்து அரசியல் எதிர்வினை ஒன்றைச் சுமந்துவரும் நியூஸ் பேப்பர் போலத்தான் கலைப்படைப்பும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது சரியல்ல.

மனிதனுக்கு எதற்குக் கலை? உன்னதத்தையும் கீழ்மையையும் மனிதனுக்கு உணர்த்துவது கலைதான். அறத்தையும் அநீதியையும், அழகையும் அசிங்கத்தையும் அதுவே நமக்குக் காட்டித் தருகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் சிறு குழந்தையாக இருந்ததிலிருந்து கலைகளின் வழியாக, கதைகளின் வழியாகத்தான் மனித மேன்மையை நோக்கி வளரமுடியும். அதுவே கலையின் தேவை.

கிங்காங் படத்தின் இறுதியில், அந்த மிருகத்தை சங்கிலியில் கட்டி, அடக்கி ஆண்டு, காட்சிக்கு வைத்து காசுபார்க்க நினைக்கிறார்கள். அந்த அரசியல் அடக்குமுறையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எழுந்து போராடுவதற்கான வேகத்தை அந்த மிருகம் பெறுவது, அழகின் மீதான ஈர்ப்பினால் தான்.

மனித குலத்தின் கைகள் அரசியல் என்றால், மனித குலத்தின் கனவு தான் கலை. கனவுகள் இல்லாத கைகளால் எதையும் புதிதாக உருவாக்கிவிட முடியாது.

[மேலும்]