rajini_3விமர்சகர்களை மட்டும் குறைசொல்ல முடியாது. தமிழகத்தின் சாதாரணப் பார்வையாளர்களிலிருந்து விஷயம் தெரிந்தவர்கள் வரை நாம் எல்லாருமே எல்லாவற்றையுமே அரசியலாக்கித்தான் பார்க்கிறோம். நாம் ரசிக்கும் அல்லது வெறுக்கும் எதையும் ஒட்டுமொத்தமான சூழலில் இருக்கும் நியாய அநியாயங்களோடு இணைத்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். நம்முடைய பண்பாட்டிலேயே இந்தக் குணம் எப்படியோ ஒட்டிக்கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு, ஒருவர் ரஜினிகாந்தின் திரைப்படங்களால் கவரப்பட்டிருக்கிறார், திரையில் தோன்றும் ரஜினியின் ஆளுமையால் மிகவும் ஈர்க்கப்பட்டிருக்கிறார் என்றால், அவர் ரஜினியின் நடிப்பை ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவே மாட்டார். அவர் ரஜினியைத் தமிழகத்தை வழிநடத்தும் தலைவர்களில் ஒருவராகத்தான் பார்ப்பார். அவரைப் புனிதராகவும் அறிஞராகவும் உருவகித்துக்கொள்வார். தனது ஆன்மீகத்திலிருந்து, வாக்குரிமை வரை அந்த ரசிகர் ரஜினியையே பின்பற்றுபவராக ஆவார்.

ஒருவேளை அந்த ரசிகர் பின்னாளில் கொஞ்சம் மாறி, வாழ்க்கைச் சுழலில் சிக்கியோ அல்லது திடீர் உலக ஞானத்தைப் பெற்றோ, சமூக அமைப்பின்மேல் விமர்சனமும் கோபமும் கொண்டவராக ஆகிறார் என்று வைத்துக்கொள்வோம். முன்பு வெறிபிடித்த ரசிகராக இருந்த அவர் இப்போது முற்றிலும் எதிர்ப்பக்கத்தில் போய் நின்று அதே வெறியோடு கத்த ஆரம்பிப்பார். தமிழகத்தின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ரஜினிதான் காரணம் என்று சொல்ல ஆரம்பிப்பார். ஒரு கட்சியை நடத்தும் அரசியல்வாதி செய்யவேண்டிய எல்லாவற்றையும் ரஜினி செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பார். அதைச் செய்யாததிற்காக ரஜினியைக் குறைசொல்வார். எதிர்க்கிறாரோ அல்லது இப்போதும் ஆதரிக்கிறாரோ எதுவாயினும் அவரைப் பொறுத்தவரையில் ரஜினி ஒரு அரசியல் சக்திதான்.

அவ்வளவு பெரிய உதாரணம் கூடத் தேவையில்லை. சமீபத்தில் பவர் ஸ்டார் டாக்டர் என்று பட்டங்களைச் சுமந்திருக்கும் சீனிவாசனை திரையில் கண்டு குதூகலித்த இளைஞர் கூட்டத்தினர் பலரும், படத்தில் ரசித்துச் சிரித்ததோடு விட்டுவிடவில்லை. “பாத்தீங்களா? முந்தி பவர் ஸ்டார நீங்க எல்லாரும் எவ்ளோ கிண்டல் பண்ணீங்க? இப்போ எங்க கொண்டுபோய் உங்க மூஞ்சிய வச்சிக்கப் போறீங்க? பவர் ஸ்டார் ஜெயிச்சிட்டாரில்ல..” என்று சமூகத்தைப் பார்த்துக் கோபாவேசமாக நியாயம் கேட்டதையும் நாம் காணமுடிந்தது. இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளில் “உழைப்பால் உயர்ந்த உத்தமர்” என்று தலைப்புக் கொடுத்தாலோ, அல்லது ‘DON’T JUDGE A BOOK BY ITS COVER’ என்று ஆங்கிலக் கட்டுரை எழுதச் சொன்னாலோ, அநேகமாகப் பலரும் பவர் ஸ்டார் பற்றி எழுதுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

தான் ரசித்த ஒருவரை சமூகத்தின் உதாரணப் புருஷனாக நிறுவ முயல்வதும், தனக்குப் பிடிக்காத ஒன்றை ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே விஷம் என்று நிறுவ முயலுவதும் என்ன மாதிரியான மனநிலை என்று எனக்குப் புரியவில்லை. “அந்தப் படம் வெளிப்படுத்தும் அரசியல் நிலைப்பாடு எனக்கு ஏற்புடையதாக இல்லை ஆனாலும் எனக்குப் படம் ரொம்பப் பிடித்திருக்கிறது” என்று சொல்கிறவர்களை நான் மிகக் குறைவாகவே கண்டிருக்கிறேன். ஏன்? ஒரு இயக்குனரின் அரசியல் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அவருடைய படமும் பிடிக்காமல் போகவேண்டுமா என்ன?

The-Bridge-on-River-Kwai

இங்கிலாந்தில் பிறந்த சினிமா இயக்குனர்களில் சார்லி சாப்ளின், ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் அளவுக்கே முக்கியமான இன்னொருவர் டேவிட் லீன். பிரம்மாண்டமான சினிமா என்பதற்கு உதாரணம் அவரது படங்கள் தான். கதையை சுவாரஸ்யமாகச் சொல்வது மட்டுமல்ல, கதை நடக்கும் மொத்தப் புவியியலையும் பெயர்த்தெடுத்துப் படச்சுருளுக்குள் வைத்துக் கடத்திவிட அவரால் மட்டுமே முடிந்திருக்கிறது. கண்ணுக்குத் தெரிவதைப் படம் பிடிப்பதில் என்ன பிரமாதம் இருக்கிறது என்று சினிமா பற்றித் தெரியாதவர்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் எல்லா இயக்குனர்களும் படம்பிடிக்கப் போராடிக்கொண்டிருப்பது கண்ணுக்குத் தெரியாத உணர்வுகளைத் தான். டேவிட் லீன் உணர்வுகளை மட்டுமல்ல, விதவிதமான கதைக் களங்களையும் புவியியலையும் மட்டுமல்ல, அங்கிருக்கும் தட்பவெப்பத்தையும் கடத்தி வந்து நம்மை உணரச் செய்துவிடுவார்.

“லாரன்ஸ் ஆஃப் அரேபியா” படத்தைப் பார்ப்பவர்கள், பல நாட்கள் பாலைவனத்தில் வாழ்ந்துவிட்டதைப் போல உணர முடியும். இதை என் அனுபவத்திலிருந்து மட்டும் சொல்லவில்லை, உலகமெங்கிலும் அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் இதைப் பதிவுசெய்திருக்கிறார்கள். “டாக்டர் ஸிவாகோ” படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ரஸ்ய நிலவெளியில் பனியில் நனைந்தபடி பனியை சுவாஸித்தபடி உறைபனியின்மீது நடந்து களைத்ததைப் போன்ற உணர்வே எனக்குத் தோன்றியிருக்கிறது. ஜப்பானிய ஆதிக்கத்தில் பர்மா-சியாம் ரயில் பாதை போடப்பட்டதைப் பின்னணியாகக் கொண்ட “தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்” படம் முழுக்க உண்மையில் இலங்கையில் தான் படமாக்கப்பட்டது என்பதை நம்புவதற்குச் சிரமமாகவே இருக்கிறது. காரணம் நிஜம் போலவே அத்தனைத் துல்லியமாகக் காட்சிச் சூழல் படமாக்கப்பட்டிருக்கிறது. மேலே சொன்ன மூன்று படங்கள் மட்டுமே கூடப் போதும் டேவிட் லீன் உலகம் உள்ளவரை நினைக்கப்படுவதற்கு.

Lawrence_of_Arabia-3

ஆனால் டேவிட் லீன் ஆங்கிலேய மேட்டிமைவாதத்தில் ஊறிய பழமைவாதி. உலகின் பல்வேறு நிலப்பரப்புகளைப் படம்பிடித்த அவரால் தனது சொந்த நிலத்தின் இனவாதத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க முடியவில்லை. தன்னுடைய மத நம்பிக்கையிலும் ஆழமான பற்றுடைய அவர், அதைத் தன் படங்களிலும் வெளிக்காட்டத் தயங்கியதில்லை. நடுநிலையான ஒரு படத்தையும் அவர் எடுத்ததில்லை. ஆங்கிலேயர்கள் புத்திசாலிகளாகவும், மனித நேயம் மிக்கவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் காட்டப்படும் அதேவேளையில் ஜப்பானியர்களும், அரேபியர்களும், இந்தியர்களும் எல்லாம் காட்டுமிராண்டிகளாகவும், சுயநலமிகலாகவுமே அவர் படங்களில் காட்டப்படுகிறார்கள். கம்யூனிஸத்துக்கும், ரஸ்யப் புரட்சிக்கும் எதிரான படம் “டாக்டர் ஸிவாகோ”. அதில் காலங்காலமாகப் பணக்காரர்களாக இருப்பவர்களே நல்லவர்களாக, நேர்மையான மேன்மக்களாக, மனித உணர்வுகளை மதிப்பவர்களாக காட்டப்படுகிறார்கள், புரட்சிப்படையைச் சேர்ந்தவர்கள் வக்கிரமும் கீழ்மைக் குணங்களும் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

பொலிட்டிக்கலி கரெக்ட்-ஆக அவரது படங்கள் இல்லை. ஆனால் அதற்காக அந்தப் படங்களைத் திரையுலகம் நிராகரித்துவிடவில்லை. பிரிட்டனில் மட்டுமின்றி உலகமெங்கும் திரைப்படக் கல்லூரிகளில் அவரது படங்கள் இப்போதும் பாடமாகப் படிக்கப்படுகின்றன. அவரது படங்களைத் தவிர்ப்பவர்கள் அற்புதமான திரைப்பட அனுபவத்தையே இழப்பார்கள். இயக்குனராகும் ஆசை உள்ளவர்கள் அவரது எல்லாப் படங்களையும் பார்த்தே ஆகவேண்டும். தனித்துவமான திரைக்கதை யுத்திகள், மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட இயக்கம், சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களும் கம்போஸிஷனும், இவையெல்லாவற்றையும் விடப் படத்தொகுப்பு (எடிட்டிங்) நுணுக்கங்கள் [எடிட்டராகவே பலபடங்களில் பனியாற்றிய அனுபவமுள்ள இயக்குனர் அவர்] ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தபடி, தலைமுறை தாண்டி வரும் புதிய இயக்குனர்களின் மீது பாதிப்புகளைச் செலுத்திக்கொண்டே இருக்கின்றன டேவிட் லீனின் படங்கள்.

நமக்கு வகுப்பெடுக்க வந்த பேராசிரியர் ஒருவர் அந்தப் பாடப்பிரிவில் ஒரு பெரும் அறிஞர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் ஒரு அரசியல் கட்சிச் சார்புடையவர், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வகுப்பின் இடையே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார், அது நமக்குப் பிடிக்கவில்லை என்றும் வைத்துக்கொள்வோம். அதற்காக அவரது வகுப்புக்களை நிராகரிக்க வேண்டுமென்று சொல்வது எத்தனைப் பெரிய அபத்தமோ, அத்தனை அபத்தம் டேவிட் லீனை நிராகரிக்கச் சொல்வதும். இத்தனைக்கும் டேவிட் லீன் தன்னுடைய சமகாலத்து உலக அரசியலை, நிஜ சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்ட படங்களையே நிறைய எடுத்திருக்கிறார். ஆனால் அவரது படங்களை ரசிப்பதற்கு அந்த அரசியல் களமும், லீனின் வெள்ளைக்கார மேட்டிமைவாத ‘நுண்ணரசியலும்’ (நம்முடைய விமர்சகர்களின் சொல்லாட்சி) – எந்த வகையிலும் தடையாக இல்லை என்பதே என் அனுபவம். அவரது படங்களைப் பார்த்திருந்தால் நீங்களும் நிச்சயம் இதை ஒத்துக்கொள்வீர்கள்.

imgel-doctor-zhivago2

யாரும் அரசியல் முழுப் பூசனிகளை சினிமாவுக்குள் ஒளித்துவைத்துவிட முடியாது. எப்படியாகிலும் அது வெளிப்பட்டுப் பல்லிளித்துவிடும். ஒரு படைப்பாளி பார்வையாளர்களிடம் ஒன்றைக் கொண்டுசேர்க்க நினைக்கிறான் என்றாலே, ஒன்று அதை அவன் வெளிப்படையாகச் சொல்லிவிடுவான் அல்லது திறமையாகக் காட்டிப் புரியவைத்துவிடுவான். இன்னும் திறமையான இயக்குனராக இருந்தால், சொல்லாமல் காட்டாமல் பார்வையாளர்களுக்கு உணர்த்த மட்டுமே கூட முடியும். எப்படியென்றாலும், ஒரு செய்தியை இயக்குனர் வெளிப்படுத்த விரும்புகிறார் என்றாலே, பூசனி தானாகவே வெளியே வந்துவிடும். சில சமயங்களில் நாம் கையில் பூதக் கண்ணாடிகளோடு உள் அரசியலையும் நுண் அரசியலையும் தேடுகிற வேகத்தில் பெரிய பூசனிக்காய்களையே காணத் தவறிவிடுவதும் உண்டு.

சில சமயங்களில், திரைப்படத்தில் ஒரு உண்மைக்குப் புறம்பான அரசியல் தகவலைப் பார்வையாளர்கள் நம்பும்படியாகக் காட்சிப்படுத்தி நிலைநிறுத்தியிருப்பார்கள். அப்போது அதை மறுத்து எழுதவேண்டியது விமர்சகர்களின் கடமை. அத்தகைய விமர்சனத்துக்கு அதிகமான கவணமும் புகழும் கிடைக்கும். ஆனால் அதற்காக, வருகிற எல்லாப் படங்களையும் டீகோடிங் செய்து அரசியலைக் கண்டுபிடிக்க விளைவதில் உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால்; தேடல் வேகத்தில் அல்லது மற்றவர்களை முந்திக்கொண்டு தடாலடியாக எதையாவது சொல்லிக் கவணம் பெறுவதற்காகவே, இல்லாத ஒரு கோட்-வேர்டை அவர்களே இணைத்துக் காட்டி, அதை அவர்களே டீகோடிங்-ம் செய்து, ஒரு பரபரப்பை உண்டாக்கிவிடுகிறார்கள். அரசியல் பத்திரிகைகளின் விளம்பர சுவரொட்டிகளில் பளிச்சிடும் ‘திரைமறைவு ரகசியங்கள்’ கொண்ட ‘கவர் ஸ்டோரி’-களில் எத்தனை உண்மையிருக்குமோ அத்தனை உண்மைதான் இந்த விமர்சனங்களிலும் இருக்கின்றன.

விமர்சகர்களையும், பார்வையாளர்களையும் மட்டும் இந்த விஷயத்தில் குற்றம் சொல்வது சரியாக இருக்காது. தமிழ்ச் சினிமா இயக்குனர்களிடமும் குற்றம் இருக்கிறது.

சினிமாவுக்குள் சமகால அரசியலை வைப்பது சிறந்தது என்று நிறைய சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். அந்த முயற்சி பல சமயங்களில் மோசமான விளைவுகளையே உருவாக்குகிறது. வெளிச் சூழலில் பரபரப்பாக இருக்கும் ஒரு அரசியல் பிரச்சனையை வலிந்து திணித்துத் தன் கதைக்குள் ‘ஏதோசெய்து’ சம்பந்தப்படுத்தி பொதிந்துவைத்துவிடுகிறார்கள். இந்த வீண்வேலையை மிகச் சிறந்த சில இயக்குனர்களே செய்துவிடுகிறார்கள் என்பது இன்னும் வருத்தமளிப்பதாக இருக்கிறது.

சமகால அரசியலைப் பொதிந்து வைத்தீர்கள் என்றால் அது எதிர்காலத்தில் ஒரு வரலாற்று ஆவணமாக வேண்டுமானால் ஆகலாம், ஆனால் ஒரு கலைப்படைப்பாக ஆகுமென்பதற்கு எந்த அவசியமும் இல்லை. தன்னுடைய படம் ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழ்ந்தால் தனக்குப் பெருமைதானே என்று இயக்குனர்கள் நினைக்கக்கூடும். அவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்-

அகழ்வாராய்ச்சியில் எந்தப் புதைபொருள் கிடைத்தாலும், அது கல்வெட்டாக இருந்தாலும், ஓலையாக இருந்தாலும், ஏன் ஒரு மண் பாண்டமாகவோ, செப்பு நாணயமாகவோ, எலும்புத் துண்டாகவோ எதுவாக இருந்தாலும், அது ஒரு வரலாற்று ஆவணமாக- தொல்பொருளாக ஆகிவிடும். ஆனால் அதில் கலையம்சம் இருந்தால் மட்டுமே அது ஒரு கலைப் பொருளாக மதிக்கப்படும். தன் படம் ஒரு தொல்பொருளாக இருக்கவேண்டுமா, அல்லது ஒரு கலைப் பொருளாக இருக்க வேண்டுமா என்பதை அந்த இயக்குனர்தான் முடிவுசெய்துகொள்ள வேண்டும்.

.