[டூரிங் டாக்கீஸ் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரை]

.
CharlesChaplin-TheGreatDictatorசார்லி
சாப்ளின் இயக்கி நடித்த தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஒரு காட்சி வருகிறது- கட்டாயத்தால் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பயந்த சுபாவமுள்ள நாயகன், போர்க்களத்தில் தன்னுடைய படையுடன் அணிவகுத்துச் செல்கிறான். குண்டுகள் வெடித்து எங்கும் புகைமூட்டமாக இருக்க, அதனூடே அந்தப் படைப்பிரிவு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு அதிகரிக்க புகைமூட்டமும் அதிகரிக்கிறது, எதிரில் என்ன இருக்கிறதென்று தெரியாத புகைக்குள் நாயகன் செல்கிறான். ஒருகட்டத்தில் புகை குறைந்து காட்சி தெளிவாகிறது, இப்போதும் நாயகன் படையில் அணிவகுத்தபடிதான் சென்றுகொண்டிருக்கிறான், ஆனால் ஏதோ தவறாக இருப்பதாக அவனுக்குப் படுகிறது. அவனுக்கு அருகில் செல்லும் சிப்பாயும் நாயகனை ஏனோ விநோதமாகப் பார்க்கிறான். உண்மையில் நாயகன் இப்போது அணிவகுத்துச் சென்றுகொண்டிருப்பது எதிரிப்படையோடு! புகைமூட்டத்தில் எங்கோ அவன் திசைமாறி, எதிரிப் படையோடு சேர்ந்திருக்கிறான். அவர்கள் அவனைச் சுடத் தயாராவதற்குள் நாயகன் ஓடித் தப்பிவிடுகிறான்.

மிக நேரடியாகப் போரின் அர்த்தமின்மையைக் காட்டிவிடும் இந்தக் காட்சி, சாப்ளினின் மேதைமைக்கு ஒரு சான்று. ஏராளமான உயிர்களைக் கொன்று குவிக்கிற அந்த இருநாட்டுப் படைவீரர்களும், தாங்கள் எந்தப் பக்கத்தில் நின்று போரிடுவது என்பதை அவர்களா தீர்மானித்தார்கள்? அவர்கள் ஒரு நாட்டில் பிறந்ததால், ஒரு இனத்தில் பிறந்ததால் அந்தப் போருக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நாட்டில் அல்லது அந்த இனத்தில் அவர்கள் பிறந்தது முழுக்க முழுக்கத் தற்செயலாகத்தானே?

நாம் தற்செயலாக எங்கே பிறந்தோம் என்பதுதானே நம் இனம் எது, மொழி எது, தேசம் எது என்பதை எல்லாம் தீர்மானிக்கிறது? புகைமூட்டம் சார்லி சாப்ளினை ஓரிடத்துக்குக் கொண்டுசேர்த்ததும் அவர் அங்கிருப்பவர்களோடு சேர்ந்து ‘லெஃப்ட் & ரைட்’ போட்டு அணிவகுத்தது போலத்தானே நாமும், தேசப்பற்று, இனப்பற்று, மதப்பற்று என்று பலவற்றையும் பற்றிக்கொண்டிருக்கிறோம்? உலகில் மிகப் பெரும்பான்மையான மக்கள் கடவுளைக் கும்பிடுவது தங்கள் பெற்றோர்கள் உண்டாக்கிய பழக்கத்தினால் அல்லவா? ஆனால் அந்தக் கடவுளே உண்மையான கடவுள் என்று அவர்கள் நம்புவதும், பிற மதத்தாரை மதமாற்றம் செய்ய முயலுவதும், தன் கடவுளை இழிவுபடுத்தியவர்களைத் தாக்கவும் கொல்லவும் கூடத் துணிவதும் எத்தனைப் பெரிய அபத்தம்? தான் எதேச்சையாகப் பிறந்துவிட்ட குடும்பத்தின் தெய்வம்தான் பிரபஞ்சத்தின் ஒரே கடவுள் என்று எப்படி அவர்களால் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள முடிந்தது? மனிதகுலத்தை அலைக்கழிப்பது இந்த மாபெரும் மாயைதான் இல்லையா? இந்த மாயையை ஒரு புகைமூட்டமாகச் சித்தரித்த சார்லி சாப்ளின் என்கிற மேதையை வியக்காமலிருக்க முடியவில்லை. திரைப்படத்தில் அரசியல் எப்படிக் கையாளப்படவேண்டும் என்பதற்கு சாப்ளினே சிறந்த வழிகாட்டி என்று நான் நினைக்கிறேன்.

ஆரம்பத்திலிருந்தே சினிமாவில் அரசியல் புகுந்துகொண்டது. காரணம் அடித்தட்டு முதல் உயர்மட்டம் வரை அனைவருக்கும் புரியக்கூடியதும் பாதிப்பைச் செலுத்தக்கூடியதுமான கலைவடிவமாக அது இருந்ததுதான். ஒரு கருத்தை மக்கள் மனதில் விதைப்பதற்குத் திரைப்படங்கள் சிறந்தவை என்று கண்டுகொண்ட உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், தங்களது பிரச்சாரத்துக்கு அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அரசாங்கங்களே நிதிகொடுத்துப் பிரச்சாரப் படங்களைத் தயாரித்தன. ஸ்டாலினும் ஹிட்லரும் இதில் முன்னோடிகள். செர்கே ஐசென்ஸ்டீன் போன்ற முதல்கட்ட பெரும் படைப்பாளிகள் கூட பிரச்சாரப் படங்களை எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போர்க் காலகட்டம் ‘பிரச்சாரப் படங்களின் பொற்காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் சார்லி சாப்ளின் எந்த அரசுப் பின்னணியும் இல்லாமல், ஒரு கலைஞனாக தன்னுடைய தனிப்பட்ட அரசியல் கருத்தை ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் பதிவுசெய்தார்.

Charlie Chaplin (The Great Dictator)

அரசியல் கேலிச்சித்திரத்தின் வடிவில் அந்தப் படம் இருந்தபோதிலும், தீவிரமான ஒரு அரசியல் செய்தியைச் சொல்லும் பிரச்சாரப் படமாகவும் அது இருக்கிறது. ஆனால் சாப்ளின், எந்தவொரு நாட்டையும் ஆதரிப்பதற்காகப் படமெடுக்கவில்லை. ஒரு அநீதிக்கு எதிராக அறத்தின் குரலாகத்தான் படமெடுத்தார். ஹிட்லர் ஒரு மாபெரும் சர்வாதிகாரியாக, உலகின் மையச் சக்தியாக இருந்த காலத்தில், அவரை நையாண்டி செய்து விமர்சிக்கவும், உறைக்கும் விதமாக அறிவுறுத்தவும் சாப்ளின் துணிந்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு வேகத்தில், குருட்டுத் தைரியத்தில் அதைச் செய்யவில்லை; மிக நிதானத்தோடும் பொறுப்போடும் செய்திருக்கிறார். அவர் ஜெர்மனி என்கிற நாட்டுக்கு எதிராகவோ, அதன் மக்கள் தீயவர்கள் என்றோ படத்தில் காட்டவில்லை. இனவாதம் பேசியே வளர்ந்த ஹிட்லரை எதிர்ப்பதற்கு சாப்ளினும் இனவாதம் பேசித் திருப்பித் தாக்கவில்லை.

படத்தின் உச்சக் காட்சியில், சாப்ளின் நிகழ்த்தும் உரை மிகப் பிரபலம். அதில் அவர் ஜெர்மனிக்கு எதிராகப் பேசாமல், உலக மக்கள் அனைவருக்கும் ஆதரவாக, அமைதிக்கு ஆதரவாக, போருக்கு எதிராகத்தான் பேசுகிறார். அதுவும் அந்தக் காட்சியில் அவர் உரை நிகழ்த்துவது, அந்த சர்வாதிகாரியின் படையினரை நோக்கித்தான். மூத்த அதிகாரிகள் முதல் கடைசி சிப்பாய் வரைக் கண்ணுக்கெட்டிய தூரம் நிரம்பியிருக்கும் இராணுவத்தை நோக்கி அவர் பேசுகிறார். அந்த உரை ரேடியோவின் மூலம், சர்வாதிகாரியின் ஆளுமைக்குள் இருக்கும் எல்லா மக்களுக்கும் சென்றுசேர்கிறது. சாப்ளின் அந்த இராணுவமும் மக்களும் அழியவேண்டுமென்று விரும்பவில்லை, திருந்த வேண்டுமென்றே சொல்கிறார்.

ஒரு நல்ல திரைப்படம், எந்தவொரு தீமைக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாகக் கெட்டவர்கள் என்று காட்டவே காட்டாது, இது ஒரு முக்கியமான அளவுகோல் என்று நான் நினைக்கிறேன். ஒருதலைப்பட்சமான அரசியலும், காழ்ப்புப் பிரச்சாரமும், இனத் துவேசமும் எக்காலத்திலும் ஒரு நல்ல திரைப்படமாக ஆகவே முடியாது. படைப்பாளி ஒரு தீமையைச் சாடவிரும்புகிறார் என்றால், அந்தத் தீமை எத்தனைக் கொடியதாயினும் சரி, அதை விமர்சிக்கும்போது படைப்பாளி நடுநிலையையும் நிதானத்தையும் கைவிட்டுவிடவே கூடாது.

the pianistரோமன் பொலன்ஸ்கி இயக்கிய பியானிஸ்ட் திரைப்படம், ஹிட்லரின் நாஸிப் படையால் யூதர்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டபோது அதிலிருந்து தப்பிய ஒரு பியானோ கலைஞனின் நிஜ அனுபவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் இயக்குனரும் ஒரு யூதர்தான். அந்தப் படத்தை அவர், மற்ற எல்லா அமெரிக்க, ஐரோப்பிய இயக்குனர்களையும் போல, யூதர்களுக்கு ஆதரவானதாகவும், நாஸிகளுக்கு எதிரானதாகவும் எடுத்திருக்க முடியும். ஆனால் நாஸிகளில் நல்லவர்களும் இருந்தார்கள் என்று அவர் படம் நெடுகிலும் காட்டியபடியே இருக்கிறார். அதேசமயம் யூதர்களின் சுயநலத்தைப் பற்றியும் அவர் காட்டிச் செல்கிறார். படத்தின் இறுதியில் நாஸிப் படையின் ஒரு அதிகாரி, அந்த யூத பியானோ கலைஞனுக்கு ரகசியமாக உதவிகள் செய்து உயிரைக் காப்பாற்றுவதை, நெகிழவைக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் பொலான்ஸ்கி. இந்த அம்சம்தான் அந்தப் படத்தை உலகின் தலைசிறந்த ஒன்றாக ஆக்கியிருக்கிறது.

ஒரு தரப்பை முழுக்கவும் குற்றம் சாட்டாமல், நடுநிலையோடு காட்சிப்படுத்துவது, ஏதோ தேய்வழக்கு [கிளிஷே] என்பதுபோல சிலர் நினைக்கலாம். உலக அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவை எல்லாமே தேய்வழக்குகள்தான். அதற்கு என்ன செய்வது?

உதாரணத்திற்கு, ஒரு இயக்குனர் இலங்கைப் பிரச்சனையைப் பற்றிப் படமெடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இலங்கை ராணுவத்தையும் ராஜபக்‌ஷேவையும் கொடூரமான கொலைகாரர்களாகக் காட்டவிரும்புகிறார் என்றால், அந்த இயக்குனர் சமன்செய்வதற்காக, சிங்களர்கள் எல்லாரும் தீயவர்கள் அல்ல, நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று படத்தில் எங்காவது பதிவுசெய்ய வேண்டும். அப்படி, சமநிலைப்படுத்துவதற்காகவே வைக்கப்படும் காட்சி வலிந்து திணிக்கப்பட்டதாகத் துருத்திக்கொண்டு தெரியாமல் அமைப்பது இயக்குனர் மற்றும் கதாசிரியரின் சாமர்த்தியம். இந்தக் கயிற்றில் நடக்கும் வித்தையை நிகழ்த்தத் துணிந்த கலைஞன் ஒழுங்காக பேலன்ஸ் செய்துதான் ஆகவேண்டும், வேறு வழியே இல்லை.

நாடின் லபாகி நடித்து இயக்கியிருக்கும் “வேர் டூ வி கோ நவ்?” என்ற படம் இந்த பேலன்ஸிங் வித்தையை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. லெபனான் நாட்டின் ஒரு கிராமத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சரிசமமாக வாழ்கிறார்கள். நாட்டில் மதக் கலவரங்கள் நிகழும்போதெல்லாம் இந்த கிராமத்து ஆண்கள் மோதிக்கொண்டு பல உயிர்ச்சேதங்களை நிகழ்த்திவிடுவது வழக்கம். கலவரம் இல்லாத நாட்களில் அவர்களுக்குள் இணக்கமும் நட்பும் நிலவத்தான் செய்கிறது. ஆனால் கலவரம் வந்துவிட்டால் ஆண்களுக்கு வெறிபிடித்துவிடும். ஒருசமயம் நாடெங்கும் மதக் கலவரங்கள் பரவ ஆரம்பித்திருப்பதாக அந்தக் கிராமத்துப் பெண்களுக்குத் தெரியவருகிறது. இதை எப்படியாவது ஆண்களுக்குத் தெரியாமல் மறைத்து, தங்கள் ஊரில் கலவரம் நடக்காமல் தடுப்பதற்காகப் பெண்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதுதான் கதை. மிகுந்த நகைச்சுவையோடும், உணர்ச்சிகரம் கலந்தும் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் ஒன்றாகவே கேலிசெய்கிறது. எந்த மதத்து ஆணாயிருந்தாலும் அவனது பலவீனம் ஒரே மாதிரியானதுதான் என்று காட்டுகிறது. ஆண்களின் வன்முறைக் குணத்தை இந்த மதங்களால் மாற்ற முடியவில்லை என்று காட்டுகிறது. மத அடையாளங்களை அவமதிக்கும் காட்சிகளும் படத்தில் உண்டு. ஒரு காட்சியில், கிறிஸ்தவ தேவாலயத்தின் மாதா சிலையில் ரத்தக் கண்ணீர் வருவதுபோல் செட்-அப் செய்து, ஒரு பெண்மணி மாதா தன்னிடம் பேசினார் என்று பொய்சொல்லி கெட்ட வார்த்தைகளால் மிரட்டுகிறாள். இன்னொரு காட்சியில், ஒரு பெண்மணி மாதாவின் முகத்தில் மண்ணை வீசி துப்பித் திட்டுகிறாள். ஒருமுறை மசூதிக்குள் ஆடுகள் நுழைந்துவிடுகின்றன. அவை மைக்கில் கத்த, வழக்கமாகப் பாங்கு ஒலிக்கும் ஒலிபெருக்கிக் குழாய்களில் “மே மே” என்று சத்தம் எழுகிறது. நம் நாட்டில் இந்தக் காட்சிகள் சென்ஸாரில் தப்புவது கடினம், அப்படியே தப்பினாலும் அரசியலில் ஈடுபட்டிருக்கும் மதவாதிகள் புகுந்து படத்தைக் கூறு போட்டிருப்பார்கள்.

படம் முழுக்க முழுக்க மதங்களுக்கு எதிரானதாகவும் ஆண்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. ஆனால் இயக்குனர் நாடின் மிகப் பிரமாதமான பேலன்ஸிங் ஆக்ட் ஒன்றை நிகழ்த்திக் காட்டுகிறார். அந்த ஊரில் ஒரேயொரு கிறிஸ்தவப் பாதிரியாரும், ஒரேயொரு இஸ்லாமிய மதபோதகரும் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே தங்கள் மதங்களில் உள்ள மெய்ஞானத்தில் மட்டுமே நாட்டம் கொண்டவர்களாகவும், மத அரசியலை, மோதலை வெறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பழுத்த பழங்களாக இருக்கும் அந்தப் பெரியவர்கள் தங்களுக்குள் புரிதலோடும் நல்லிணக்கத்தோடுமே இருக்கிறார்கள். இதன்மூலம் இயக்குனர், மிகத் தெளிவாகவே, இரு மதங்களின் இறையியல் தத்துவங்களும் அடிப்படையில் அன்பையே போதிக்கின்றன, அவை மதவெறியை ஆதரிப்பதில்லை என்று காட்டிவிடுகிறார்.

WhereDoWeGoNow

மனிதகுலம் நாகரீகத்தை நோக்கி நகர்ந்த ஆதிநாட்களில் தனித்தனிக் குழுக்களாகத்தான் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்துவமான சில பழக்க வழக்கங்களும் சடங்குகளும் இருந்திருக்கும். அதனால் மற்றக் குழுக்களோடு அவர்கள் முரண்பட்டிருப்பார்கள். அந்த விலகலும், பிழைப்புக்கான போட்டியும் சேர்ந்து, தீராத பகையாக மாறியிருக்கும். அந்த இனக்குழு மோதல்களின் தொடர்ச்சிதானே இன்றைய உலக அரசியல் என்பதும்? இப்போதிருக்கும் இனவாதிகளும், மதவாதிகளும் பழங்குடி மனப்பான்மையிலிருந்து எந்த அளவு மாறியிருக்கிறார்கள்?

ஆனால் ஒட்டுமொத்தமாக மனிதகுலம் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் நோக்கித்தான் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறியலாம். வரலாற்றின் எந்த ஒரு காலகட்டத்தை எடுத்துப் பார்த்தாலும், அதற்கு முந்தைய காலத்தைவிட, அப்போதைய காலகட்டத்தில், உலக மக்களுக்கிடையேயான தொடர்பும் இணக்கமும் கூடியிருந்திருப்பதைக் காணலாம். நம் காலத்தில் முன்னெப்போதையும் விட உலக மக்கள் நெருங்கியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மனித குலம் தன்னைத்தானே இணைத்துக் கட்டிக்கொள்வதற்காகத்தான் இணையம் முதலான தொடர்புவசதிகளை உண்டாக்கியிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த நெருக்கத்தை, உலகங்களுக்கு இடையேயான இணைப்பை எப்போதும் கனவுகண்டவர்கள் கலைஞர்கள்தான். இசை, நடனம், ஓவியம், சிற்பம், கதைகள், கவிதைகள் என்று எல்லாவற்றின் மூலமும் வேற்று மனிதர்களுக்குள் முதல் இணைப்பை, முதல் புன்னகையை, முதல் கைகுலுக்களை உண்டாக்கியவர்கள் கலைஞர்கள். மனிதர்களைப் பிரிப்பதை அல்ல இணைப்பதற்கே நல்ல கலை முயல்கிறது. இதுதான் கலையின் அரசியல்.

“வேர் டூ வி கோ நவ்?” படத்தில், ஊரிலிருக்கும் ஆண்கள் எல்லாரும் தங்களுக்குள் அடித்துக்கொள்ளத்தான் எப்போதும் முயல்வதாகக் காட்டப்படுகிறது. அவர்கள் பிரிவினை பேசியபடி, பகையை வளர்த்தபடி, சண்டையை எதிர்நோக்கியபடியே எப்போதும் இருக்கிறார்கள். அதேசமயம் பெண்கள் தங்களால் இயன்றவரை முயன்று ஒற்றுமையை உண்டாக்கவே போராடுகிறார்கள். ஆண்களின் மோதல் மனநிலை மற்றும் பெண்களின் அமைதிக்கான முயற்சிகள் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் தான் அரசியலுக்கும் கலைக்குமான வித்தியாசமும். அரசியல் பிளவுபடுத்தவே முயலும். கலை இணைக்கவே பார்க்கும். உலகமெங்கும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து மனித குலத்துக்கு என்ன பயனை அளித்திருக்கின்றன என்று நாம் யோசித்துப் பார்க்கலாம்.

என்னுடைய சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். நான் பாலைவனத்தையும் ஒட்டகத்தையும் முதலில் பார்த்தது சினிமாவின் அசையும் பிம்பங்களின் வழியாகத்தான். பனிப்பொழிவையும் உறைந்த ஏரிகளையும் சினிமாதான் எனக்குக் காட்டியது. நான் வரலாற்றுப் புத்தகத்தில் படித்த நாடுகளைக் கண்ணால் கண்டதும் திரையில்தான். அந்த நாடுகளை, அவற்றின் மன்னர்களும், சதிகளும், படைகளும், போர்களும் மட்டுமேயாக வரலாறு காட்டியபோது; அது அப்படி அல்ல, எளிய மனிதர்களால் நிரம்பியதே அந்த நாடுகள் என்று எனக்கு உறைக்க வைத்தது சினிமாதான். இன்று எனக்கு ஈரான் என்றால், முதலில் நினைவுக்கு வருவது ஷாக்களோ, முல்லாக்களோ, எண்ணைக் கிணறுகளோ, உலக அரசியலோ அல்ல. நல்லெண்ணங்களும் வெள்ளை மனங்களும் கொண்ட சாதாரண மனிதர்களும், ஏழை இஸ்லாமியக் குடும்பங்களும்தான். இதை என்னுள் விதைத்தது முழுக்க முழுக்க ஈரானிய சினிமாதான்.

பூமிப் பந்தின் மேல் வரையப்பட்டிருக்கும் ஏராளமான எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று, வேற்றுநாட்டு மனிதர்களை அவர்களின் உறவுகள் சூழல் எல்லாவற்றோடும் சேர்த்து நெருங்கி அறிவதற்கு, சினிமாவே சிறந்த கலை வடிவம். உலக இலக்கியத்தை நாம் அறிய மொழி ஒரு தடையாக இருக்கிறது. ஆனால் சினிமா என்கிற காட்சிக் கலைக்கு அத்தகைய தடைகள் எதுவும் இல்லை. பொதுவாக எந்தக் கலை வடிவமும் புரிபடுவதற்கு ஓரளவாவது ரசனைப் பயிற்சி அவசியம். ஒப்பீட்டளவில் சினிமா எளியது.

jsa

நாம் சினிமா என்கிற வாகனத்தில் ஏறி, கடல் பயணம் முதல் விண்வெளிப் பயணம் வரை சென்றுவர முடிகிறது. எல்லைகள் கடந்த மாபெரும் மானுடத்தை சினிமா சாத்தியமாக்குகிறது. அரசியல் எல்லைகளை அழிப்பதுதான் சினிமாவின் முக்கியமான அரசியல் செயல்பாடு என்று நான் நினைக்கிறேன். புவியியல் எல்லைகளும், பொருளாதாரப் படிநிலைகளின் எல்லைகளும், மத நம்பிக்கைகளின் எல்லைகளும், இன-மொழி-சாதி எல்லைகளும் தான் அரசியலைத் தீர்மானிக்கின்றன. இந்த எல்லைகளை அழிக்க முயல்வதின் மூலமாகக் கலை அந்த அரசியல்களுக்கு எதிரான இன்னொரு அரசியலை முன்வைக்கிறது. அது ‘மானுடம்’ என்கிற அரசியல்.

பார்க் சான்-வூக் இயக்கிய ஜாயின்ட் செக்யூரிட்டி ஏரியா என்ற படம் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள், எல்லையில் இருக்கும் பதட்டம், இரு இராணுவத்தினரின் ஜென்மப்பகை ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டது. எல்லைக் காவலில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பு இராணுவங்களின் இளம் வீரர்கள் சிலர் விளையாட்டுத்தனமாகத் தங்களுக்குள் ஒரு ரகசிய நட்பை உருவாக்கிக்கொள்வதைப் பற்றியதுதான் மையக் கதை. இதில் ஒரு காட்சி வருகிறது, படத்தின் இறுதியில் மீண்டும் அந்தக் காட்சி காட்டப்பட்டே படம் முடிகிறது. சில வெளிநாட்டுப் பயணிகள் அந்த எல்லைப் பகுதிக்கு சுற்றுலா வருகிறபோது, ஒரு பெண்ணின் தலையில் இருக்கும் தொப்பியைக் காற்று தூக்கிச் செல்கிறது. எல்லைக் கோட்டைத் தாண்டி அடுத்த நாட்டுக்குள் சென்று தொப்பி விழுகிறது. எதிர் நாட்டு வீரன் அந்தத் தொப்பியை எடுத்துக் கொடுப்பான். மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த எல்லைக் கோடு இயற்கையின் முன் அர்த்தமிழப்பதை அந்தக் காட்சியில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குனர்.

சர்வதேச எல்லைகள் எதுவொன்றாலும் காற்றைத் தடுத்துவிட முடிவதில்லை. திரைக்கலையும் அப்படிப்பட்ட ஒரு காற்றுத்தான். அரசியல் வேலிகளுக்குள் அது அடைபட வேண்டியதில்லை.

.