Paradesi

உழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே என்று விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் நோக்கிக் கூக்குரலிடுகிறது அந்தப் படம் 

‘பரதேசி’ தமிழின் முக்கியமான ஒரு திரைப்படம் என்று நான் நினைக்கிறேன். அதற்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைப்பதன் மூலமும், திரையரங்குகளில் வணிக வெற்றியைப் பெறுவதின் மூலமும் தொடர்ந்து இதுபோன்ற சினிமாக்களை எடுப்பதற்கான சூழல் தமிழ்த் திரையுலகில் உண்டாக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

 அதேசமயம் பரதேசியின்மேல் வைக்கப்படும் எல்லா ஆரோக்கியமான விமர்சனங்களையும் வரவேற்கிறேன். தமிழ்ச் சினிமாவை ஏதோ ஒருவகையில் முன்னே தள்ளிச் செல்வதற்கு அவை உதவும் என்று நம்புகிறேன். ஆனால், போலியான உணர்ச்சி வேகத்தோடு எழுதப்பட்ட, முன்முடிவுகள் கொண்ட சில விமர்சனங்கள், சினிமாவைப் பின்னிழுத்துச் சென்றுவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.

 கவிஞர் மகுடேசுவரனிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் “அந்த ராசாவின் பாத்திரம் இன்றைய தமிழனின் அசல் முகமாகப் பட்டது” என்று சொன்னார். அதில் உண்மை இருப்பதாகவே நினைக்கிறேன். ராஜன் குறை அவர்களின் விமர்சனத்தில், “ கிராமத்தில் கதைநாயகனின் உழைப்புக்கு கஞ்சிதான் தரமுடியும் கூலி தரமுடியாது என்கிறார் கடைக்காரர். அதிலிருந்து காப்பதாக கூட்டிச்செல்லும் கங்காணி கூலியை கண்ணில் காண்பித்துவிட்டு அதை மளிகைக் கடைக்காரரிடமும், மருத்துவரிடமும் கொடுத்துவிடுகிறார். உழைக்கும் வர்க்கத்திற்கு பெரும்பாலும் நடப்பது அதுதானே? ஒருபுறம் கூலியை கொடுத்துவிட்டு மறுபுறம் சூப்பர் மார்கெட்டிலும், மருந்துக்கடையிலும், மதுபானக்கடையிலும் அதை பறித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை முதலீட்டியம் செய்து வைத்துள்ளதல்லவா? அதற்குமேல் கிரெடிட் கார்ட் என்ற கடன் அட்டைகளை கொடுத்து நுகரச்செய்து வட்டியுடன் கழுத்தில் துண்டுபோட்டு வசூலிக்கும் தந்திரமும் அதற்குத் தெரியும் ” என்று சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமான பார்வையாகப்படுகிறது.

 சுதீஷ் கமத் தனது ஆங்கிலக் கட்டுரையில் (டி)ஜாங்கோ அன்செயின்டு படத்தோடு பரதேசியை ஒப்பிட்டு எழுதியிருப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் பாலாவின் முந்தையப் படங்களைப் போல பரதேசியின் நாயகனும் தீயவர்களை எல்லாம் வதம்செய்து அழிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் போல. அவர் தென் தமிழகத்திலிருந்து 48 நாட்கள் நடந்தால் பாகிஸ்தானுக்கே போய்விடலாம் என்கிறார். அப்படியா? நடந்துபார்த்தால்தான் தெரியும். வால்பாறை இப்போதுகூட போக்குவரத்துவசதி குறைவான ஊர்தான். சுமார் நூறு கிராமங்களும் நூறு டீ எஸ்டேட்டுகளும் உள்ள அந்தப் பகுதியில் இப்போதும் ஒரே ஒரு பெட்ரோல் பங்க்தான் இருக்கிறது என்கிறார்கள். தமிழகத்திலேயே இன்னும் சினிமா தியேட்டர் இல்லாத ஒரே ஊர் அதுதான். பழங்காலத்தில் தென் மாவட்டத்திலிருந்து வால்பாறைக்கு நடந்துவர நிறைய நாட்கள் ஆகியிருக்கும் என்றே தோன்றுகிறது.

 மதம் மாற்றும் கிறிஸ்தவ டாக்டர் கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம் சூழலிலும் பல அதிதீவிர கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களும், மருவத்தூர் அம்மாவின் பக்தர்களும், ஜக்கி – ஶ்ரீஶ்ரீ போன்றவர்களின் சீடர்களும் நம்மை அவர்களோடு சேர்ந்துகொள்ள அழைத்தபடியேதானே இருக்கிறார்கள்? அவர்களைப் பார்த்தால் நமக்கு சிரிப்பாய்த்தானே வருகிறது? ஆனால் ஒருவிஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 அந்தக் காலரா நோய் பரவுகிற காட்சி மிகப் பிரமாதமாக ஆரம்பிக்கிறது. நம்மையே பார்த்தபடி அமர்ந்திருக்கும் ஒரு பெண்பிள்ளை சட்டென்று சரிந்து உருண்டு விழ அவளுடைய அம்மா ஓடிவந்து கதறுகிறாள். ஹான்டிங்கான அந்த ஷாட்டைத் தொடர்ந்து, தொற்றுநோயில் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்துவிழுந்தார்கள் என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதை நாம் கண்ணால் காண்கிறோம். படம் மிகப்பெரிய உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண வைக்கிறது. அப்போதுபார்த்து சிவசங்கர் மாஸ்டரும் அவரது மனைவியாக நடித்த வெள்ளைப் பெண்ணும் வந்து குத்துப்பாட்டெல்லாம் பாடி ஆடி கோமாளித்தனங்கள் செய்ததில் எல்லாத் தீவிரத்தையும் படம் இழந்துவிடுகிறது.

 கிளைமாக்ஸ்க்கான ஆயத்தக் காட்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னால், அதிரும் இசையுடன் நடனப்பாடல் ஒன்றைப் போடுகிற வழக்கமான வணிக சினிமா டெக்னிக் இந்த மாதிரி கதைகளுள்ள சினிமாவுக்கும் தேவைதானா? முதல்பாதியில் கலகலப்பாக கதை நகர்வது இரண்டாம் பாதியின் உக்கிரத்தைச் சமன்செய்யத்தான் என்றால், இரண்டாம் பாதியிலும் இவ்வளவு கீழிறங்கி காமெடி செய்திருக்கவேண்டுமா? மெல்லிய நகைச்சுவையோடு கடந்துசென்றிருக்கலாமே. திரைப்படத்தின் ஓட்டத்தை அது பாதித்ததோடு, படம் சென்று அடைந்திருக்க வேண்டிய உச்சத்தையும் கெடுத்துவிட்டதே என்கிற வருத்தம் மேலோங்குகிறது.

 கிராமத்துக் காட்சிகளில் இருக்கும் மிகை நடிப்பு நிச்சயம் வணிகச் சமரசம்தான். அவர்கள் தலித்கள் என்பதையும், தீண்டாமைக் கொடுமையையும் ஒரு காட்சியோடு காட்டி நிறுத்திவிட்டதுகூட பொதுப் பார்வையாளர்களை மனதில்வைத்துச் செய்யப்பட்ட சமரசமே என்றும் தோன்றுகிறது. இடைவேளைக் காட்சியை இன்னும் கொஞ்சம் ஏற்கக்கூடியதாகச் செய்திருக்கலாம் என்று எல்லாரையும்போல நானும் நினைக்கிறேன்.

 ஆனால் இந்தக் காரணங்களுக்காக நான் பரதேசியை நிராகரிக்க மாட்டேன். பலபேரின் கடுமையான உழைப்பைப் படம் நெடுகிலும் காணமுடிகிறது. உழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே என்று விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் நோக்கிக் கூக்குரலிடுகிறது அந்தப் படம். பாலா மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அற்புதமான ஒளிப்பதிவு. கச்சிதமான வசனங்கள். அதர்வா, ஜெர்ரி, தன்ஷிகா மற்றும் பலரின் அர்ப்பணிப்பையும், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டிருக்கக்கூடிய சிரமங்களையும் நன்றாகவே உணரமுடிகிறது. மெலிந்த கூன்விழுந்த அந்தப் பாட்டி, கவிஞர் விக்ரமாதித்யனின் பாத்திரம், பயணப் பாடல் மற்றும் ‘செந்நீர்தானா’ பாடலின் மாண்டாஜ் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி ஆகியவை இயக்குனருக்கு எக்காலத்தும் புகழ் சேர்ப்பவையாக இருக்கும்.

 படத்தைப் பற்றி அதிகமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு, எரியும் பனிக்காடு நாவலுக்குப் படம் நியாயம் செய்யவில்லை என்பதே. அதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவரும், அந்த நூலின் தீவிர வாசகர்களும் இந்தக் கருத்தைச் சொல்லியிருப்பதால் அதை நிராகரிக்க முடியாது. அதேசமயம் எழுத்துக்கும் சினிமாவுக்குமான முரண் எப்போதும் இருப்பதுதான் என்பதையும் சொல்லவேண்டியதில்லை. ‘2001 எ ஸ்பேஸ் ஒடிஸி’ எழுதிய ஆர்தர் சி கிளார்க், அதைப் படமாக எடுத்த ஸ்டேன்லி க்யுப்ரிக்கின் ஆக்கத்தை சிறந்ததென்று ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே க்யூப்ரிக் எடுத்த “தி ஷைனிங்’ திரைப்படத்தை, அதை எழுதிய ஸ்டீஃபன் கிங் முழுமையாக நிராகரித்தது மட்டுமில்லாமல் சில வருடங்கள் கழித்துத் தானே மீண்டும் அதை இயக்கிப் படமாக்கினார். ஆனால் ஸ்டேன்லி க்யூப்ரிக்கின் அந்தப் படங்களைத்தான் திரைப்பட ஆர்வலர்களும் ரசிகர்களும் இன்றளவும் தலைமேல் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 இன்னொரு முக்கியமான விஷயம். ஒரு மூலப் புத்தகத்தை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியை ஒருவர் திரைப்படமாக எடுத்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. அதே கதையை மீண்டும் எடுக்கக் கூடாதென்று எந்த சட்டத்திலும் இல்லை. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ திரைப்படமாக ஆனபோது நிகழ்ந்த விபத்தைப் பற்றி பலரும் வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் நான், இனியும் ஒருமுறை மோகமுள் படமாக ஆகக்கூடாதென்று யார் தடுத்தார்கள்? என்றே கேட்பேன். இலக்கிய ஆக்கங்களை மீண்டும் மீண்டும் பல வெர்ஷன்களாகப் படமெடுத்ததிற்கு உலகெங்கும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன.

 தமிழிலேயே ‘கண்ணகி’, ‘பூம்புகார்’ என்று இருமுறை எடுக்கப்பட்டிருக்கிறது சிலப்பதிகாரக் கதை. அதில் முழுக்கப் பார்க்கக் கிடைப்பது பூம்புகார் மட்டுமே. அதோடு ஒப்பிட்டால் இளங்கோவடிகளின் காவியம் சூரியனின் உயரத்தில் இருக்கிறது. அதற்கு நியாயம் செய்யவேண்டுமானால் மீண்டும் ஒரு படம் எடுத்தாகவேண்டும். நான் எடுக்க ஆசைப்படும் கனவுப் படங்களில் ஒன்று அது. அப்படி மீண்டும் சிலம்பின் கதை நேர்த்தியான சினிமாவாக எடுக்கப்பட்டால் நிச்சயம் மக்கள் ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

 ‘லே மிஸரபிள்ஸ்’ (Les Miserables) ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எத்தனையோமுறை எடுக்கப்பட்டுவிட்டது. அந்தக் கதை தமிழிலும் 1950களில் ‘ஏழை படும் பாடு’ என்ற வெற்றிப் படமாக ஆகியிருக்கிறது. பிறகு அதே கதை 1970களில் சிவாஜி நடித்து ‘ஞான ஒளி’ என்று மீண்டும் வந்து மீண்டும் வெற்றியடைந்திருக்கிறது. ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை ரசிகர்கள் மீண்டும் பார்க்க வருவார்களா? வசூலாகுமா? என்ற சந்தேகம் தேவையில்லாதது. வணிகப் படங்களில் ஒரே கதை மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டு வசூலை அள்ளியிருக்கின்றன. எம்.ஜி.ஆர். நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ 150 நாட்கள் ஓடியிருக்கிறது. பிறகு அதே கதையில் கமல் நடித்த ‘சகலகலா வல்லவன்’ 175 நாட்கள் ஓடியிருக்கிறது. பல உதாரணங்கள். சமீபத்தில் கூட ரஜினியின் ‘பில்லா’, அஜித்தின் பில்லாவாக மறு அவதாரம் எடுத்ததல்லவா?

 அதேபோல, ‘எரியும் பனிக்காடு’ மீண்டும் ஒரு படமாக வந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வதைகளை இன்னும் வலியோடு சொல்கிற ஒரு படமாக அது வரலாம். தலித் மக்கள் அனுபவித்த கொடுமைதான் அதுவென்றும் தெளிவாகச் சொல்லலாம். அந்தக் கிறிஸ்தவ டாக்டர் சேவை மனப்பான்மையோடு ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாகக் காட்டப்படலாம்.

 முழுதாய் மூன்று மணிநேரத் திரைப்படமாக, டாக்டர் டேனியல் எழுத்தில் பதிவு செய்திருப்பதைத் திரையில் பிரதிபலித்துக் காட்டலாம். அந்தப் படத்திற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும். காரணம், எரியும் பனிக்காடு நூல் முன்னெப்போதையும் விட இப்போது நிறைய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அப்படிக் கொண்டு சேர்த்ததிற்காக இயக்குனர் பாலாவுக்கும் ஒரு நன்றிக் கார்டு அந்தப் புதிய படத்தில் போட்டாலும் தவறில்லை.

 பரதேசியில் ராசாவின் கதைதான் வருகிறது. எரியும் பனிக்காட்டு கருப்பனின் கதையை யார் எடுக்கப்போகிறார்கள்? அல்லது அதற்கு இணையான இன்னொரு கதையை, இன்னொரு வரலாற்றுக் களத்தை எந்தவொரு வணிகச் சமரசமும் இல்லாமல் எடுப்பதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்வருவார்களா? அப்படிப்பட்ட படங்கள் வரவேண்டுமென்று வற்புறுத்தியும், அந்தப் படங்களுக்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் திரைப்பட ரசிகர்கள் இணையத்தில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தால் நன்றாக இருக்கும்.