imagesசினிமா வட்டாரத்தில் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட “ஸ்டாப் பிளாக்கில மறைஞ்சு போயிட்டான்” என்று சொல்வது உண்டு. ஸ்டாப் பிளாக் என்கிற தந்திரம் சினிமாவுக்குள் நுழைந்த மிகப்பழமையான உத்திகளுள் ஒன்று. திரைக்கதையின் அடிப்படை நுட்பங்கள் கூட உருவாகியிருக்காத காலத்திலேயே இந்தத் தொழில்நுட்பம் தோன்றிவிட்டது. அத்தனைப் பழசு.

ஒருவர் தன் இடத்தில் இருந்தபடியே திடீரென்று ‘மறைந்து’ போய்விடுவது போல வரும் காட்சிகளுக்கும்; இல்லாத ஒன்று திடீரென்று ‘தோன்றி’விடுவது போல வரும் காட்சிகளுக்கும்; திடீரென்று ஒரு கணத்தில் ஒன்று இன்னொன்றாக மாறுவது, ஒருவர் மற்றொருவராக மாறுவது போன்ற காட்சிகளுக்கும், ஸ்டாப் பிளாக் என்கிற தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது.

 விட்டலாச்சாரியாரின் பிரபலமான ‘ஜகன் மோகினி’ படத்தில் ‘ஸ்டாப் பிளாக்’ பயன்படுத்தப்படாத காட்சியே இல்லை என்று சொல்லலாம். கீழ்க்காணும் பாடல் காட்சிக்குள்ளேயே ஹேமமாலினி எத்தனை முறை தோன்றி மறைகிறார் என்று பாருங்கள்..

 

 

ஒரு மாயாஜாலக் காட்சியில், முனிவர் சாபமிட்டதும் ஒருவன் ஆடாக மாறவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஃபிரேமுக்குள் முனிவரையும் அந்த ஆளையும் வைத்துக் காட்சிக்குத் தேவையானதை எடுப்பார்கள். முனிவர் சாபமிட்டதும், எந்தக் கணத்தில் அவன் ஆடாக மாற வேண்டுமோ அந்தக் கணத்தில், “ஃபிரீஸ்” என்று இயக்குனர் ஆணையிடுவார். உடனே முனிவராக நடிப்பவர் அந்த நொடியில் கை கால்களை முகத்தை எப்படி வைத்திருந்தாரோ அப்படியே உறைந்து நின்றுவிடுவார். அதோடு அந்த செட்டில் அசைவது எல்லாம் நிறுத்திவைக்கப்படும். அதற்கு முன்பாகவே கேமராவின் எல்லா திருகுகளையும் முடக்கியிருப்பார்கள். அப்படி முடக்காமல் கேமராவில் மிக மெல்லிய நகர்வு இருந்தால் கூட அது எஃபெக்ட்-ஐ பாதிக்கும்.

இப்போது அந்த சபிக்கப்பட்ட ஆளாக நடிப்பவரை ஃபிரேமுக்கு வெளியே வரச்சொல்லிவிட்டு, சரியாக அவர் நின்ற இடத்தில் ஆடு ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவார்கள். “ஆக்‌ஷன்” என்று இயக்குனர் மீண்டும் குரல் கொடுத்ததும், முனிவர் தனது உறைநிலையிலிருந்து மீண்டு, ஆட்டைப் பார்த்து சாப விமோசனத்துக்கான வழியைச் சொல்லுவார். படப்பிடிப்பு முடிந்து, படத்தொகுப்புக்காக அந்தக் காட்சிக் கோர்வை வரும். அங்கு, “ஃபிரீஸ்” என்ற ஆணைக்கும் “ஆக்‌ஷன்” என்ற ஆணைக்கும் இடைப்பட்டதை வெட்டிவிட்டு இரண்டையும் ஒன்றாக இணைப்பார்கள். அதாவது, முனிவரும் மற்றவையும் இடையில் உறைநிலைக்குப் போனதே தெரியாதவாறு வெட்டித் தூக்கிவிடுவார்கள். மேலும் நுணுக்கமாகக் கத்தரித்து, நடிகரின் உடலசைவும் மற்றவையும் பொருந்தும்படியாகத் தொகுப்பார்கள். இப்போது இந்தக் காட்சியைத் திரையிட்டால் அந்த ஆள் சட்டென்று ஆடாக மாறிவிட்டதைப் போலத் தெரியும்.

 காட்சியில், அந்த மாற்றம் நடக்கும் கணத்தில், பின்னணியில் ஒரு ‘பேங்’ சத்தத்தைச் சேர்ப்பதும் நமது மரபு. அந்த ஒலி ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறது. நடந்திருப்பது எடிட்டிங் அல்லது புரொஜக்‌ஷன் பிழையால் நடந்த கோணல் அல்ல, ஒரு அதிசயம் நடந்திருக்கிறது என்று அந்தக் கணத்திலேயே நம் மூளையை நம்பவைப்பது அந்த ‘பேங்’ இசைதான்.

 எஃபெக்ட்-ஐ மேலும் கூட்ட, புகை முதலியவையும் நடுவே பயன்படுத்துவது உண்டு. பழைய படங்களில் நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள். ஆள் முதலில் புகையாக மாறி, பிறகு அந்தப் புகையிலிருந்து ஆடு வெளிப்படும். அதற்கு, அந்த சாபம்பெற்ற ஆளை ஃபிரேமிலிருந்து வெளியேற்றியவுடன், அவன் நின்ற இடத்தில் புகை தரக்கூடிய ஏற்பாட்டைச் செய்து புகையைப் படம் பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆட்டை அங்கு நிறுத்த வேண்டும். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஸ்டாப் பிளாக் எஃபெக்ட்டை செயல்படுத்தும்போது ‘கட்’ செய்யும் இடத்தில் சட்டத்துக்குள் எல்லாம் உறைநிலையில் அசையாமல் இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் எத்தனை அதிகாரமுள்ள இயக்குனர் ஃபிரீஸ் என்று ஆணையிட்டாலும், புகை அப்படியே உறைந்து நின்றுவிடாது. ஆகவே படத்தொகுப்பாளர் ஓரளவு மேட்ச் செய்து காட்சியைத் தொகுப்பார். ஆனால் வெட்டிய இடத்தில் நிச்சயம் ஒரு இடையூறை பார்வையாளர்கள் உணர்வார்கள். ஆகவே பொதுவாக இந்தச் சமயங்களில், அப்படியே வெட்டி ஒட்டாமல், ஒன்றின்மேல் மற்றது கலந்து வருவது போல் டிஸ்ஸால்வ் செய்வார்கள். ஆளின் மேல் மெல்ல புகை கலந்து தோன்றும் – ஆள் மறைவான் – பின்பு புகையின் மேல் ஆடு கலந்து தோன்றும் – புகை மறையும். ஆனால் முடிந்தவரை இந்த இரு டிஸ்ஸால்வ்-களும் வேகமாக நடந்துவிட வேண்டும். ஸ்டாப் பிளாக்-யின் அழகே சட்டென்று நடந்துவிடும் அந்த மாயம்தான் இல்லையா?

ஸ்டாப் பிளாக் அல்லது ஸ்டாப் டிரிக் என்கிற தந்திரக் காட்சியை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ஒரு ஃபிரேமுக்குள் எல்லாவற்றையும் உறையச் செய்து, ஒன்றை மட்டும் மாற்றிவைத்துப் படமெடுத்து, பின்பு படத்தொகுப்பின் மூலமாக, உறைந்ததை நீக்கிவிட்டு அந்த ஃபிரேமுக்குள் மற்ற எல்லாம் வழமையாக இயங்கிக்கொண்டிருந்தது போலவும், அந்த ஒன்று மட்டும் திடீரென்று மாறிவிட்டதைப் போலவும் ஒரு தோற்றத்தை உண்டாக்குவது. அவ்வளவுதான்.

ஃபேன்டஸி தாண்டி, மற்றப் படங்களிலும் கூட நகைச்சுவைக்காக இந்த உத்தி தொடர்ந்து பயன்படுத்தப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். பாடல் நடனங்களிலும் இந்த உத்தி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எப்போதெல்லாம் இது திரையில் நிகழ்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு மேஜிக் நிகழ்ச்சியைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை நாம் அடைகிறோம். உண்மையில் மேஜிக் நிகழ்ச்சிகளில் இருந்துதான் இந்தத் தொழில்நுட்பம் சினிமாவுக்கே வந்தது.

 1895யில் பாரீஸ் நகரில் லூமியர் சகோதரர்கள் தாங்கள் எடுத்த உலகின் முதல் திரைப்படத்தைப் பொதுமக்களுக்குத் திரையிட்டபோது, அதில் பார்வையாளராக இருந்த ஒருவர் ஃபிரான்ஸ் நாட்டின் பிரபல தொழில்முறை மேஜிக் நிபுணரான ஜார்ஜஸ் மெலியஸ் (Georges Melies). அவருக்கு சினிமாவின்மேல் கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டது. சலனப்பட கேமரா எனும் புதிய கருவியை அவர் ஒரு நவீன மந்திரக்கோலாகத்தான் பார்த்தார்.

 georges melies

அவர் சினிமாவைக் கைப்பிடித்தது ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. தந்திரக் காட்சிகளை முதன்முதலில் சினிமாவில் சோதித்துப் பார்த்து, அந்த சோதனை ஓட்டத்திலேயே பல சாதனை வெற்றிகளைப் படைத்தார் ஜார்ஜஸ் மெலியஸ். சினிமா என்பது என்ன என்கிற தெளிவே பிறந்திராத ஆரம்ப காலகட்டத்தில், அவர் எப்படி இத்தனைப் பெரும் புதுமைகளைச் செய்தார் என்கிற வியப்பை வெளிப்படுத்தாத சினிமா வரலாற்றாசிரியர்களே இல்லை. அனைத்து வகை தந்திரக் காட்சிகளுக்கும் (விஷூவல் எஃபெக்ட்) பிதாமகரான அவர்தான் ‘ஸ்டாப் பிளாக்’ நுட்பத்தையும் உருவாக்கினார்.

 மேடையில் நிகழ்த்தப்படும் மேஜிக் நிகழ்ச்சிகளில் எக்காலத்திலும் விரும்பப்படுகிற ஒன்று “மறையவைக்கும் தந்திரம்” (DISAPPEARING MAGIC TRICK). மேஜிக் நிபுணர் ஒரு பொருளையோ அல்லது ஒரு ஆளையோ பார்வையாளர்களின் கண்முன்னே மறையச் செய்து மீண்டும் தோற்றுவித்துக் கொண்டுவருவார். இந்த தந்திரம் எவரையும் உடனடியாகக் கவரக்கூடியது என்பது தொழில்முறை மேஜிக் கலைஞரான மெல்லியஸ்க்குத் தெரியும். ஆகவே அந்தத் தந்திரத்தை சினிமாவில் உருவாக்கிக் காட்ட விரும்பி, அவர் கண்டுபிடித்ததுதான் ஸ்டாப் டிரிக் (STOP TRICK) அல்லது ஸ்டாப் பிளாக் உத்தி.

 சினிமாவின் ஆதிக்காலத்திலேயே அவர் இந்த தந்திரக் காட்சியை எத்தனைத் தேர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார் என்பதற்குப் பெரிய உதாரணமாக அவருடைய THE HAUNTED CASTLE படத்தைச் சொல்லலாம். 1896ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இப்போது யூடியூபில் கிடைக்கிறது. சுமார் 117 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஸ்டாப் பிளாக் நுணுக்கத்தின் எல்லா சாத்தியங்களும் சோதித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதை வியக்காமலிருக்க முடியவில்லை. நீங்களே பாருங்கள்–

 

 ஜார்ஜஸ் மெலியஸ் சினிமாவில் நிகழ்த்திய இன்னொரு மேஜிக் காட்சியையும் கீழே இணைத்திருக்கிறேன். தற்கால கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸின் இன்றியமையாத பகுதியாக விளங்கும் காம்போஸிட்டிங் நுட்பம் 1898யில் எடுக்கப்பட்ட இந்தப்படத்திலேயே கையாளப்பட்டிருப்பது ஆச்சர்யம்தான் இல்லையா?