பொதுவாக வணிக சினிமா பற்றி ஆராய்ந்து எழுத யாரும் முன்வருவதில்லை. வணிக சினிமா என்பது மூளை இல்லாதவர்களால் மூளை இல்லாதவர்களுக்காக எடுக்கப்படுவது என்கிற மேட்டிமையான எண்ணம் பொதுவாக எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் வெகுஜன மக்களின் ஆசைகளை, லட்சியங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை, அவநம்பிக்கைகளை, ஏமாற்றங்களை, கோபங்களை எல்லாம் முழுக்கப் புரிந்துகொண்டவை வணிக சினிமாக்கள்தான். அதை ஆராய்வது ஒருவகையில் எளிய மக்களின் கூட்டு மனத்தை ஆராய்வதுதான் என்று நான் நம்புகிறேன்.

1940கள் முதல் 1960கள் வரையான காலகட்டம் இந்திய சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. மொத்த இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கூட தனக்கென்று சந்தைகளை உருவாக்கிக்கொண்டு, வணிக ரீதியாகவும் கலை ரீதியாகவும் இந்தி சினிமா வெற்றிபெற்ற காலம் அது. அந்தச் சமயத்தில்தான் இந்திய வணிக சினிமாவின் அடிப்படையான விதிகள், சட்டகங்கள் எல்லாம் உருவாகின. அக்காலத்தில் வந்த இந்திப் படங்களின் முக்கியமான காட்சிகளை முன்வைத்து வணிக சினிமாவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சிதான் இந்தத் தொடர் கட்டுரைகள்.

குத்துப் பாட்டு

இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த குத்துப் பாட்டுக்கள் தெலுங்கில் தான் இருக்கின்றன. சரி, முதல் குத்துப் பாட்டு எது?

இந்திய வணிக சினிமாவின் சட்டகங்களை வடிவமைத்த ராஜ் கபூர் தான் முதல் குத்துப் பாட்டையும் படத்தில் வைத்தார் என்பதும், அந்தப் பாட்டின் முதல் வரி தெலுங்கில்தான் அமைந்தது என்பதும் ஆச்சர்யம் அல்ல.

 

நாட்டுப்புறப் பாட்டில் துடித்து ஆடுவதற்கு உகந்த தாளம் கொண்டவை எளிதில் குத்துப் பாட்டாகிவிடும் அல்லவா? ‘ஶ்ரீ 420’ படத்தில் இடம்பெற்ற “ராமைய்யா வஸ்தாவய்யா” தெலுங்கு கிராமியத் திருவிழாப் பாடலிலிருந்து வந்ததுதான்.

அந்தப் படத்தின் இசையமைப்பாளர்களான ஷங்கர் ஜெய்கிஷண் இரட்டையரில், ஷங்கர் ஹைதராபாத்தில் வளர்ந்தவர். அவர் பாடலின் மெட்டை ராஜ் கபூருக்குப் பாடிக் காட்டும்போது “ராமைய்யா வஸ்தாவய்யா” என்ற தெலுங்கு முதல் வரியைப் பயன்படுத்தியே பாடிக் காட்டினார். ராஜ் கபூர் அந்த வரியை மாற்ற வேண்டாம் மற்ற வரிகள் மட்டும் ஹிந்தியில் இருக்கட்டும் என்றார். படம் வெளியான பின்பு வடநாட்டு ரசிகர்கள் புரியாத அந்த வரியை ஒரு மந்திரம் போல முனுமுனுத்துத் திரிவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் வரி புரியாத மொழியில் இருப்பது சிறந்த குத்துப் பாட்டுக்கு அழகென்று ஆனதும் அந்தப் பாட்டிலிருந்துதான்.


அதோடு எத்தனைத் துள்ளலாகப் பாடல் அமைந்தாலும் உள்ளே சோகம் இல்லாத குத்துப் பாட்டு வெற்றியடையாது என்பதும் ஒரு முக்கியமான விதி. தமிழின் பல நல்ல குத்துப் பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். ராமைய்யா வஸ்தாவய்யா தான் அதற்கும் முன்னோடி.


தாலி செண்டிமெண்ட்

குத்துப் பாட்டு போலவே, மற்ற நாட்டு வணிகப் படங்களில் இல்லாத- இந்திய வணிகப் படங்களில் மட்டும் உள்ள இன்னொரு அம்சம் தாலி செண்டிமெண்ட்.

இந்தி திரைப்பட உலகில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு அபரிமிதமானது என்பது நமக்குத் தெரியும். வசனங்கள் பாடல்களிலும் கூட உருது தாக்கம் அதிகம். இந்தியும் உருதும் சமமாகக் கலந்த ‘இந்துஸ்தானி’ மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தி நிலைநிறுத்திய இயக்குனர்-தயாரிப்பாளர் மெஹ்பூப் கான், இந்திய வணிக சினிமாவை வடிவமைத்தவர்களிலும் முதன்மையான ஒருவர். அவர் உருவாக்கிய மெஹ்பூப் ஸ்டூடியோ, பாலிவுட்டின் முக்கிய மையமாக இன்றும் விளங்குகிறது. அவர் அடைந்த வணிக வெற்றிகளுக்குக் காரணம் இந்திய வெகுஜன மனதை முழுக்கப் புரிந்துகொண்டதுதான்.


‘மதர் இந்தியா’ அவருடைய ஆகச் சிறந்த படம். திருமணத்துக்காக வாங்கிய கடன் வளர்ந்து ஒரு விவசாய குடும்பத்தை நெருக்குகிறது. அதை அடைப்பதற்காக மிகக் கடினமாக உழைக்கிறான் கணவன். அதில் ஒரு கையை இழக்கிறான். உழைக்க முடியாதவனாகி தான் குடும்பத்துக்குப் பாரமாக இருக்க விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிவிடுகிறான். இப்போது கடன் சுமையும், மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும் முழுமையாக அந்த இளம் மனைவியைச் சேர்கிறது. அவள் எப்படி ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து அந்த ஊருக்கே தாய்போல ஆனாள் என்பதுதான் கதை. அந்தக் கதையின் வழியாக, சுதந்திர இந்தியாவின் தேசக் கட்டுமானம் பற்றிப் பேசுகிறார் இயக்குனர். டைட்டில் அதையே குறிக்கிறது. இறுதியில், தன் மகன்களில் ஒருவன் கொள்ளைக்காரனாகவும் கொலைகாரனாகவும் மாறும்போது, அந்தத் தாயே அவனை சுட்டுக் கொல்கிறாள்.


திரைக்கதை முழுக்கவே அந்தப் பெண்ணுக்கு என்னென்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் வந்தன, அதில் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள், பின்பு எப்படி வைராக்கியமாக மீண்டெழுந்தாள் என்று அடுக்கிச் செல்வதுதான். கடன் கொடுத்த பணக்காரன் அந்தப் பெண்ணைத் தன்னுடையவளாக வைத்துக்கொள்ள விரும்புகிறான். ஆனால் அவள் தன் கணவன் என்றாவது திரும்ப வருவான், ஆகவே ஒழுக்கம் கெட்டுவிடக் கூடாதென்று வைராக்கியமாக இருக்கிறாள். நிலத்தில் பாடுபட்டு உழைக்கிறாள். ஆனால் வெள்ளம் வந்து பயிர்கள் அழிகின்றன. வெள்ளத்தில் மாட்டி துணையிருந்த மாமியார் சாகிறாள். குழந்தைகள் பசியால் வாடுகின்றன. பணக்காரன் அவளுக்கு உணவு தர வருகிறான், ஆனால் அவள் வைராக்கியமாக மறுக்கிறாள்.

ஒரு குழந்தை பசியால், உணவைக் கனவுகண்டு அரற்றியபடி செத்துப்போகிறபோதுதான் அவள் உடைகிறாள். இன்னொரு குழந்தையும் அப்படி இறக்கும் சூழலை அடையும்போது அவள் வைராக்கியத்தைக் கைவிட்டு அந்தப் பணக்காரனைத் தேடிச்செல்கிறாள். கதவைத் தட்டுகிறாள். அவன் அவளை அடையும் ஆசையால் உள்ளே அழைக்கிறான். உள்ளே போனதுமே அவள் தன் தாலியை அவிழ்த்து எறிகிறாள்.

இந்த இடம் திரைக்கதையில் மிக சிக்கலானது. அங்கே அவள் ஒழுக்கம் கெட்டுவிட்டால், பின்னால் சொல்லப்படவிருக்கிற கதைக்கு முரணாக ஆகிவிடும். ஆனால் இந்தமுறை யாரும் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை. அவளேதான் எல்லாவற்றுக்கும் தயாராக அங்கே போனாள். இப்போது அவள் அவனை அடித்துவிட்டுத் திரும்பி வருவதற்கு எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் தாலி செண்டிமெண்டை வைத்து எந்த லாஜிக் முரணையும் சரிப்படுத்திவிட முடியும்தானே?

இந்தத் திரைக்கதை முடிச்சை மிக எளிதாக அவிழ்க்கிறார் மெஹ்பூப் கான். அந்தக் காட்சியை, அந்தப் பெண்ணுக்கும் அவளை அடைய விளைபவனுக்குமானதாக ஆக்காமல் – ஒரு தாயின் கண்ணீருக்கும் அதற்குப் பதில் சொல்லவேண்டிய தெய்வத்துக்கும் இடையிலானதாக மாற்றிவிடுகிறார். பாருங்கள்…

(தொடரும்)