உணர்ச்சிகரம்

இந்திய வணிக சினிமா அளவுக்கு உணர்ச்சிமயமாகக் கதைசொல்லுவது வேறு எந்த நாட்டிலும் இல்லை. காரணம் எளிதுதான், இந்தியர்களே பொதுவாக உணர்ச்சிகரமானவர்கள்தான். இன்று நாம் ஓவர் ஆக்டிங் என்று சொல்லும் பல பழைய நடிகர்களின் நடிப்பு உண்மையில் அன்றிருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைந்ததுதான்.

பந்த பாசங்களின் உணர்ச்சிகரமான போராட்டங்களால் ஆனது இந்திய சினிமா. அதனால் ‘மெலோ டிராமா’ என்கிற வகையின் கீழ் மொத்த இந்திய வணிக சினிமாவையும் நாம் வகைப்படுத்திவிட முடியும்.

நம்மளவுக்கு மெலோ டிராமாக்களை உருவாக்கியவர்கள் வேறெங்கும் இல்லை. “கான் வித் த விண்ட்’, ‘பென்ஹர்’ போன்ற படங்கள், ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ போன்ற இசைப் படங்கள், ஓசு எடுத்த ‘டோக்யோ ஸ்டோரி’ முதலான படங்கள் என்று நிறைய நல்ல மெலோ டிராமா வகைத் திரைப்படங்கள் உலகம் முழுக்க இருந்தாலும், இந்தியா அளவுக்கு அதிக எண்ணிக்கையில் எங்கும் இல்லை.

உணர்ச்சிகரமாக நடிக்கத் தெரிந்தவர்கள், உணர்ச்சிகரமாக இயக்கத் தெரிந்தவர்கள், உணர்ச்சிகரமாக இசையமைக்கத் தெரிந்தவர்களைத்தான் மீண்டும் மீண்டும் வெற்றியடைய வைத்திருக்கிறார்கள் மக்கள். சில பழைய படங்களைப் பார்த்தால், நடிகர்கள் எதற்கு இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று இப்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

“ஆவாரா” படத்தின் இந்தக் காட்சியைப் பாருங்கள், ராஜ் கபூர், நர்கீஸ் மட்டுமல்ல அங்கு வீசும் காற்று கூட உணர்ச்சிகரமாகவே நடித்திருக்கிறது.


ஆதார உணர்ச்சி

இந்திய வணிக சினிமா உணர்ச்சிகரமானதுதான், சரி, அதில் எந்த உணர்ச்சி மிகமிக முக்கியமானதாக இருக்கிறது? எல்லாவற்றிற்கும் ஆதாரமானதாக, எல்லாவற்றையும் விட மேலானதாக எது இருக்கிறது?…

தாய்ப் பாசம்..? சகோதர பாசம்..? நீதியுணர்ச்சி..? அநீதியின் மேல் கோபம்..? வீரம்..? பழிக்குப் பழி..? தெய்வபக்தி..? தேசபக்தி..? ஏழை படும்பாடு..? பணக்காரர்கள் மீதான வெறுப்பு..? நட்பு..? …எது? இதெல்லாவற்றுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஆனால் இதெல்லாமே இன்னொரு ஆதாரமான உணர்வுடன் ஏதாவதொரு விகிதத்தில் கலந்துதான் வந்தாக வேண்டும் என்பது இந்திய சினிமாவின் மாற்ற முடியாத விதி. அந்த ஆதார உணர்வு… காதல்.

இதுவரை வந்தவற்றில் காதல் பாடலோ காதல் காட்சிகளோ இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காதல் காட்சிகளைச் சிறப்பாக எடுக்கத் தெரிந்தவர்கள்தான் முதல்தர இயக்குனர்களாக எப்போதும் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாற்று சினிமா ஆர்வமுள்ள இயக்குநர்களின் படங்களில் கூட- தங்கர்பச்சானின் ‘அழகி’, பாலாஜி சக்திவேலின் ‘காதல்’, சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ அளவுக்கு அதே இயக்குனர்களின் பிற படங்கள் வணிக வெற்றி பெறவில்லை என்பதைக் கவணிக்கலாம்.

Director K. Asif

சினிமாவில் எல்லாவற்றையும் விட முக்கியமானதாக அதிதூய்மையானதாகக் காதல் ஏன் இருக்கிறது என்று விளங்கிக்கொள்ள பலகாலம் முயன்றிருக்கிறேன். இந்திய சமூகம் அப்படி ஒன்றும் ரொமாண்டிக்கானது அல்ல. ஒருவேளை அந்தப் போதாமையை, சங்க காலத்தின் அகப்பாடல்கள் முதல் தற்காலத்தின் சினிமா வரை பயன்படுத்தித் தீர்த்துக்கொள்கிறதா இந்தச் சமூகம்?

மிக நீண்டகாலப் பண்பாடும் கலாச்சாரமும் உண்டாக்கி வைத்திருக்கும் சுவர்கள், சாதிக்குள் உறவுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயங்கள் ஆகியவற்றை மீற முடியாதவர்கள், சினிமாவில் அந்த மீறலை ரசிக்கிறார்களா? இந்தியாவின் பழமை என்கிற பாறையின் மீது ஓயாது மோதிக்கொண்டிருக்கும் அலைகளாகத்தான் இத்தனை இத்தனைக் காதல் பாட்டுக்கள் உருவாகி வந்துகொண்டே இருக்கின்றனவா?

இந்திய சினிமாவில் மிகப் பிரம்மாண்டமும் கலையமைதியும் ஒருங்கே அமைந்த படங்களில் ஒன்று “மொகல்-ஏ-ஆஸம்” அதை இயக்கிய ஆஸிஃப் மொத்தமாய் மூன்று படங்கள் கூட முடிக்காமல் செத்துப்போனார் என்பது இந்திய சினிமாவுக்குப் பேரிழப்பு. இந்தியாவின் ஆகச் சிறந்த நடிப்பு இணையான திலிப் குமாரும் மதுபாலாவும் நடித்த அந்தப் படத்தில், பேரரசர் அக்பராக பிருத்விராஜ் கபூர் (ராஜ்கபூரின் அப்பா) தோன்றினார். அவர் அளவுக்கு நிஜ அக்பர்கூட கம்பீரமாக இருந்திருப்பாரா தெரியாது.

அசைக்க முடியாத பாறைபோல அவர் அவையில் அமர்ந்திருக்க, அவரது மகன் இளவரசன் சலீமைக் காதலிக்கும் நடனமங்கையான அனார்கலி “பியார் கியா தோ டர்னா கியா” என்ற பாடலைப் பாடுவாள். அதைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு பெரும் பாறையில் மோதிச் சிதறுவதற்காகவே சுழித்து நுரைத்துப் பொங்கி வரும் அலையாகத்தான் மதுபாலா எனக்குத் தோன்றுவார்.

பழமையான கலாச்சார அமைப்பை நோக்கி சினிமா ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியை அவள் கேட்கிறாள் “காதலிக்கிறேன்… அதற்கு ஏன் பயப்பட வேண்டும்? காதல்தானே செய்தேன்.. எதையும் திருடிவிடவில்லையே? பிறகு எதற்கு பயந்து ஒளியவேண்டும்?”

பாடலின் இறுதியில் பேரரசரின் தலைக்குமேல் நூற்றுக்கணக்கான பிம்பங்களாக அந்தப் பெண் சுழலும்போது, காட்சி கவித்துவ உச்சத்தைத் தொடுகிறது. பாருங்கள்…

(தொடரும்)