ராக் ஸ்டார்
வணிக சினிமாவை வெறுப்பவர்கள் முதன்மையாகச் சொல்லும் குற்றச்சாட்டே, நடிகர்களின் பின்னால் வெறிபிடித்து அலையும் இளைஞர்களை, ரசிகர் மன்ற செயல்பாடுகளைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலாவது இந்த மாதிரிப் பைத்தியக்காரத்தனம் உண்டா என்று அவர்கள் கோபமாகக் கேட்கும்போது எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கும். இவர்கள் உலகில் என்ன நடக்கிறதென்று உண்மையிலேயே தெரிந்துவைத்திருக்கிறார்களா இல்லையா? உலகில் வேறு எந்த நாட்டிலும் சினிமா நடிகர்களின் பின்னால் இப்படி ரசிகர்கள் அலைவதில்லை என்பது உண்மைதான். ஆனால் நம் நாட்டைவிடப் பல மடங்கு அதிக வெறிபிடித்த ரசிகர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள்… பாடகர்களுக்கு!

தம் விருப்பப் பாடகர்களைப் பார்ப்பதற்காகப் பல மணிநேரம் காத்துக்கிடந்து, கண்ட மாத்திரத்தில் மகிழ்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மயக்கம்போட்டு விழுகிற, கண்ணீர்விட்டுக் கதறி அழுகிற ரசிகர்கள் இருக்கிறார்கள். தம் விருப்ப நட்சத்திரத்துக்காக ரத்தம் சிந்திய, உயிரை மாய்த்துக்கொண்ட, ஜெயிலுக்குப் போன ரசிகர்கள் மேற்கில் இருக்கிறார்கள். எல்விஸ் பிரஸ்லி, பீட்டில்ஸ் குழுவினர் போன்றவர்களைக் கடவுளுக்கு இணையாகவே கருதிய, அவர்களின் மீதான பிரியத்தாலேயே தம் வாழ்வைத் தொலைத்த ரசிகர்களைப் பற்றி ஏராளமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 80களில் மைக்கேல் ஜாக்ஸன் அமெரிக்க ஜனாதிபதியை விட அதிக மக்கள் செல்வாக்கோடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற ‘ராக் ஸ்டார்’கள் ‘பாப்’ பாடகர்கள் பற்றி மட்டுமே நமக்குத் தெரிகிறது. உண்மையில் மேற்குலகின் ஒவ்வொரு பகுதியிலும் அங்கு மட்டுமே பிரபலமான பல இசை நட்சத்திரங்கள் உண்டு, அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. தனியார் பாதுகாவலர்களும், காவல் துறையினரும், சிலசமயம் ராணுவமும் தகுந்த பாதுகாப்பைக் கொடுக்காவிட்டால் அந்த நட்சத்திரங்களால் வெளியே வரமுடியாத நிலை உள்ளது. சில பிரபலப் பாடகர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது அந்த நாடுகள் ஸ்தம்பித்து நின்றிருக்கின்றன. இப்போதும் நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளை அங்கே இளைஞர்கள் திருவிழா போலக் கொண்டாடிக் கொண்டுதானிருக்கிறார்கள். ரசிகர் கூட்டத்தைக் காவலர்கள் அடித்து விரட்டுவதை, புகைக் குண்டுபோட்டுக் கட்டுப்படுத்துவதை ஏராளமான வீடியோக்களில் நீங்கள் காணலாம்.

நம் ஊரில் கட் அவுட்டுக்குப் பால் ஊற்றுவதும், முதல் ஷோவில் பேப்பர் வீசுவதும் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. மேற்குலக நாடுகளில் ‘ராக் ஸ்டார்’கள் தான் உச்ச நட்சத்திரங்கள், நம் நாட்டில் அந்த இடத்தை ‘ஃபிலிம் ஸ்டார்’கள் பிடித்துக் கொண்டார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.


இது சரி என்று நான் சொல்ல வரவில்லை. எதனால் இப்படி என்றும் எனக்குத் தெரியவில்லை. உளவியல், சமூகவியல் ஆய்வாளர்கள்தான் அதைச் சொல்ல வேண்டும். இதைத் திரைப்படக் கலைஞர்களின் குற்றமாகப் பலரும் நிறுவ முயற்சிக்கிறார்கள். நடிகர்கள் செய்யும் ஒரு ஏமாற்று வேலையாக இதைப் பார்க்கிறார்கள். அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாதென்பதே என் நேரடி அனுபவத்திலிருந்து நான் உணர்ந்தது.

சமீபத்தில்கூட நான் காஷ்மீரில், ஶ்ரீநகரின் தெருக்களில் ஒரு துரத்தல் காட்சியைப் படமெடுத்தபோது, பெரும் கூட்டமாகப் பொதுமக்கள் திரண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை விலக்கிப் படமெடுப்பதற்காக நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். கிடைத்த இடைவெளியிலெல்லாம் அவர்கள் நாயகனைச் சூழந்துகொண்டார்கள். அந்த நடிகனை அவர்கள் யாருக்கும் தெரியாது, மேலும் ஒரு தமிழ்ப்படத்தை அவர்கள் எந்தக் காலத்திலும் பார்க்கப்போவதும் இல்லை. பின்னே எதனால் இப்படி என்று புரியவேயில்லை. அப்போது ஒரு டீன் ஏஜ் பெண், எங்கள் நாயகியை விட அழகாக இருந்தவள், ஓடிவந்து, நடிகரிடம் அவருடைய போன் நம்பரைக் கேட்டுப் பிடிவாதம் செய்தாள். சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த சில பெரிய மனிதர்களின் முகத்தில் தாடியையும் தாண்டி கோபம் வெளியே தெரிந்தது. காஷ்மீரில் பிரச்சனை ஏதுமில்லாமல் ஷூட்டிங்கை முடிக்கவேண்டுமே என்று ஏற்கனவே நான் பயத்தில் இருந்தேன். அதை மறைத்துக்கொண்டு சிரித்தபடி நான் “இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது” என்று வேடிக்கையாகச் சொல்வதுபோலச் சொல்லி அந்தப் பெண்ணை அனுப்பிவைத்தேன். அங்கிருந்த சூழலில் அந்தப் பெண்ணின் துணிச்சல் ஆச்சர்யமான ஒன்றாகவே இருந்தது. அந்த நடிகன் காட்சிக்கேற்ப நடித்ததைத் தவிர வேறு எதுவும் அங்கு செய்யவில்லை. ஆனால் இந்த ஈர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது? அதைப் பலர் முன்னால் வெளிப்படுத்தவும் தயங்காத இளமையின் வேகத்தை என்னவென்பது?

உலகியல் கவலைகளும் பொறுப்பும் இல்லாத வயதில் இளைஞர்களுக்குக் கதாநாயக பிம்பங்களின் மீது ஈர்ப்பு இருப்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த ஈர்ப்பு, குடும்பப் பொறுப்புகள் வந்தபிறகும் கூட அப்படியே தொடர்ந்து, அதே அர்ப்பணிப்புள்ள ரசிகர்களாகவே பலரும் நீடிப்பதையும் பார்க்க முடிகிறதே? இப்போதும் ரஜினி, கமல் படங்கள் வெளியாகும்போது அவர்களின் ரசிகர்கள் இறங்கி வேலைசெய்யத்தானே செய்கிறார்கள்? சமீபத்தில் விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் சிவாஜி, எம்ஜிஆர் ரசிகர்களை வைத்துத் தனித்தனியாக சிறப்பு அத்தியாயங்கள் எடுக்கப்பட்டன. அதில் சிவாஜி நிகழ்வில் நானும் பங்கேற்று, ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் சிவாஜியின் இடம் என்ன என்பதைப் பற்றிப் பேசினேன். அதில் பல 70-80 வயதுக்காரர்கள் இப்போதும் அதே ரசிக மனப்பான்மையோடு தங்கள் ஆதர்ஸ நாயகர்களைப் பற்றிப் பேசியதைப் பார்க்க முடிந்தது. அதில் பலர் ரசிகர் மன்ற செயல்பாடுகளை இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அறிய வியப்பாகவே இருந்தது.

ஆனால், ரசிகர்களின் இந்த மனநிலையை ஏணியாகப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்துக்கு வர நினைக்கும் நட்சத்திரங்களை எந்நிலையிலும் ஆதரிக்க முடியாது. இசைக் கலைஞர்களை எவ்வளவு துதிபாடினாலும் ஆபத்தில்லை, அவர்களால் அதிகபட்ச தீமையைத் தங்களுக்குத் தாங்களேதான் செய்துகொள்ள முடியும். தலைக்கணம் அவர்களைக் குடியிலோ ஆன்மீகத்திலோ தான் கொண்டு மூழ்கடிக்கும். ஆனால் நடிகர்கள் அப்படி அல்ல. ரசிகர்கள் “தலைவா” என்று கத்தினால், உடனே ஒரு தலைவனின் பாத்திரத்தை அவர்கள் நடிக்கத் தொடங்கிவிடும் ஆபத்து இருக்கிறது.


இந்தித் திரை உலகில், நடிகர்கள், ‘ராக் ஸ்டார்’களின் இடத்தைப் பிடித்துக்கொண்டார்கள் என்று சொன்னேன். ஆனால் ஒரு ‘ராக் ஸ்டார்’ மட்டும் தப்பித்திருந்தார்… பாடகர் கிஷோர் குமார்! நாற்பதாண்டுக் காலம் முதல்தரப் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் வெற்றிகரமாக நீடித்தவர் அவர் ஒருவரே. ராஜேஷ்கன்னா, அமிதாப் பச்சன், மிதுன் சக்ரபர்த்தி போன்ற பல உச்ச நட்சத்திரங்களின் வெற்றிக்குத் துணையாக நின்ற பலநூறு ஹிட் பாடல்களைப் பாடியவர். மட்டுமில்லாமல், அவரே நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல வெற்றிப் படங்களை எடுத்தவர். அவரே நடித்துப் பாடிய ‘சல்டி கா நாம் காடி’ படப் பாடலைக் கீழே இணைத்திருக்கிறேன்.

இயல்பிலேயே நகைச்சுவை உணர்வுகொண்ட அவர் படங்களிலும் அவ்வாறே நடித்தார். அவருடைய அண்ணன்களான அசோக் குமார், அனூப் குமார் போல இவருக்கு நடிப்பதில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை, பாடகராவதில் தான் விருப்பம். பாடி நிறைய சம்பாதித்த நிலையில், அவர் வருமான வரியாகப் பெரும்பணம் கட்ட வேண்டி வந்தது. ஆனால் கிஷோர் குமாருக்கு அதற்கு மனமில்லை. ஆகவே சொந்தத் தயாரிப்பாக வேகமாக ஒரு தோல்விப் படம் எடுத்து, அதில் நிறைய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதைப்போல வருமானவரித் துறையினருக்குக் காட்டி ஏமாற்ற நினைத்தார். தானே நாயகனாக நடித்தால், நிச்சயம் படம் தோல்வியடைந்துவிடும் என்று கணக்குப் போட்டார். அவருடைய மூத்த சகோதரர்களும், மதுபாலாவும் சேர்ந்து நடிக்க அப்படி அவர் எடுத்த படம்தான் இந்த ‘சல்டி கா நாம் காடி’.

படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. கிஷோர் குமார் ஏமாற்றமடைந்தார்.

வணிக சினிமாவில் என்ன திட்டம் போட்டு நீங்கள் படமெடுத்தாலும் அதன் வெற்றி மட்டுமல்ல தோல்விகூட உங்கள் கையில் இல்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை?

(தொடரும்)