மக்கள் இசை
வெளிநாட்டினர், இந்திய வணிக சினிமா அல்லது பாலிவுட் சினிமா என்றாலே, அதில் பாடல்கள் இருக்கும் என்பதைத்தான் தனித்துவமாகச் சொல்வார்கள். இந்திய சினிமாக்கள் எல்லாமே இசைப் படங்கள் (மியூஸிக்கல்) என்றே அவர்கள் வகைப்படுத்துவார்கள். பாடல் ஆடல் கொண்ட படங்கள் அங்கு மியூஸிக்கல் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தனி வகையாக மட்டுமே இருக்க, பெரும்பான்மையான படங்களில் பாடல் இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும்.

மேற்கத்திய நாடுகளில் திரைப்பட உலகமும், இசை உலகமும் தனித்தனியாகவே இருக்கின்றன. மரபு இசை என்பது நம்நாட்டைப் போலவே அங்கும் அதற்கான கலைஞர்களால், அதற்கான ரசிகர்களுக்காகவே இயங்குகிறது. ஆனால் வெகுஜன இசை என்பது ஜாஸ், ராக் எண்ட் ரோல், பாப், ராப், ஹிப் ஹாப் என்று எத்தனையோ வகைகளாகவும், கண்ட்ரி மியூஸிக் எனப்படும் நாட்டுப்புற இசையாகவும், ஃபியூஸன் எனப்படும் கலப்பின வடிவிலும் அங்கே பல்கிப்பெருகியிருக்கிறது. அவற்றைச் சார்ந்த பாடகர்கள், இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று ஏராளமானவர்கள் இயங்கும் ஒரு தனி இண்டஸ்ட்டிரியாக இருக்கிறது. பதிவுக் கலையாகவும் (ஒலிப்பதிவு செய்த வடிவில்), நிகழ்த்துக் கலையாகவும் (நேரடிக் கச்சேரிகள்) ஒரே சமயத்தில் அது இயங்குகிறது.

ஆனால் இந்தியாவில் அப்படி ஒன்றே அநேகமாக இல்லை. சினிமாப் பாடல்கள்தான் இங்கே வெகுஜன இசையாகவும் இருக்கின்றன. ஒருவகையில் இசை உலகையும் சேர்த்து கபளீகரம் செய்துவிட்டது திரையுலகம்.
திரை இசையை வேண்டாமென்று ஒதுக்கிய இசைக் கலைஞர்கள், பாடகர்கள் பொதுமக்களால் அறியப்படாதவர்களாக, அறியப்பட்டாலும் நாளடைவில் மறக்கப்பட்டவர்களாக ஆகவேண்டிய நிலையே இங்குள்ளது. திரையிசையோடு சம்பந்தப்பட்டவர்கள் செய்யும் கச்சேரிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு மற்றவர்களுக்குக் கிடைப்பதில்லை.

மக்கள் இசை என்பது, ஒன்று, மரபு இசையிலிருந்து கொஞ்சம் வெகுசனத்துக்காக எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும். இரண்டு, நாட்டுப்புற இசையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாக இருக்கும். மூன்று, மேலைநாட்டு இசைவடிவங்களைப் பின்பற்றியதாக இருக்கும். இவை எல்லாமே திரை இசையாக வெளிப்பட்டால் மட்டுமே மக்களைப்போய்ச் சேர முடியும் என்கிற நிலை இங்கே இருக்கிறது.

ஆகவே மக்கள் இசையில் ஈடுபடுகிறவர்கள் எல்லாரும் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள திரைப்படத்தில் வேலைசெய்தாகவேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. இது அவர்களுக்கு நலிவுதான்.

இந்தியாவில் திரை உலகம், இசை உலகையும் சேர்த்துக்கொண்டு ஒரு அர்த்த நாரீஸ்வர வடிவத்தை எடுத்து நிற்கிறது என்று சொல்லலாம்.

மரபு இசையின் மாமேதைகள் சினிமாவில் இசையமைத்துத் தரத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். கிராமிய இசையின் எல்லா அழகிய வடிவங்களும் சினிமாவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. போலவே மேலை நாட்டின் இசைவடிவங்களை ஒன்றுவிடாமல் இங்கே சோதித்துப் பார்த்த புதுமை விரும்பிகளும் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் ‘ராக் எண்ட் ரோல்’ வகைப் பாடலான “ஈனா மீனா டீகா”-வை பம்பாய் இசையமைப்பாளரும், கோவாவைச் சேர்ந்த அரேஞ்சரும், இசையமைப்பாளரின் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களும் சேர்ந்து உருவாக்கினார்கள் என்பதில் ஒரு குறியீட்டு அர்த்தம் இருக்கிறதல்லவா?

ஐம்பது வருடங்கள் கழித்து, இந்தப் பாடல், இந்திய வம்சாவழி இசைக் கலைஞர்கள் மூலமாக, மேற்கத்திய இசை உலகிற்குள் நுழைந்து பல அவதாரங்களை எடுத்து இப்போது புகழ்பெற்றிருப்பதிலும் ஒரு குறியீட்டு அர்த்தம் இருக்கத்தானே செய்கிறது?
“ஈனா மீனா டீகா”-வின் சில நவீன வடிவங்கள் கீழே…