பேசும் படமா? பாடும் படமா?

இந்தியத் திரை உலகம், இசை உலகையும் சேர்த்துத் தானே விழுங்கிவிட்டது என்று முந்தைய பகுதியில் எழுதியிருந்தேன். அது ஒரு கோணம் மட்டுமே. இன்னொரு கோணத்தில், இசை உலகம் திரை உலகத்தை விழுங்கிவிட்டது என்றும் சொல்லலாம்.

“மௌனப் படங்கள்தான் சினிமாவின் தூய வடிவம்” என்று ஹிட்ச்காக் குறிப்பிட்டார். திரை உலகின் ஆகப் பெரிய சாதனைகள் பல மௌனப்படக் காலத்திலேயே செய்யப்பட்டுவிட்டது. ரஸ்ய ஐசன்ஸ்டைன் எடுத்த “பேட்டில் ஷிப் பொடெம்கின்”, புடோவ்கின் எடுத்த “மதர்”, அமெரிக்க கிரிஃபித் எடுத்த “பெர்த் ஆஃப் எ நேஷன்” “இண்டாலரன்ஸ்”, பஸ்டர் கீடன் எடுத்த “தி ஜெனரல்”, ஜெர்மானிய ராபர்ட் வியன் எடுத்த “கேபினெட் ஆஃப் டாக்டர் காலிகரி”, ஃபிரிட்ஸ் லாங் எடுத்த “மெட்ரோபொலிஸ்”, பிரிட்டனின் ஹிட்ச்காக் எடுத்த “லாட்ஜர்”, ஃபிரஞ்சு கார்ல் டிரேயர் எடுத்த “ஜோன் ஆஃப் ஆர்க்” என்று ஏராளமான மௌனப் படங்கள் கலை உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.

1927யில் முதல் பேசும்படமான “ஜாஸ் ஸிங்கர்” வந்து வெற்றியடைந்த பின்னும், சார்லி சாப்ளின் தன் “சர்க்கஸ்” “சிட்டி லைட்ஸ்” “மாடர்ன் டைம்ஸ்” ஆகியவற்றை மௌனப் படங்களாகவே எடுத்தார். அப்போது வந்த பிற பேசும்படங்கள் சாப்ளினின் தரத்துக்கு அருகில்கூட நிற்கமுடியாதவையாக இருந்தன. அவருடைய படங்களுக்கு மொழி தேவையில்லாததாக இருந்தது, மேலும் மொத்த உலகுக்கும் புரியும்படி இருக்கும் தன் படத்தை ஒரு குறிப்பிட்ட மொழிக்காரர்களுக்கானதாக மாற்ற அவர் தயங்கினார்.

படத்தில் ஒலியைச் சேர்க்கமுடியும் என்று தெரிந்ததுமே, இயல்பாகவே பாடல்களைப் பதிவுசெய்யத்தான் மேற்கிலும் முற்பட்டார்கள். ரசிகர்களுக்கு அது பிடிக்குமென்று தெரியும். “ஜாஸ் ஸிங்கர்” ஒரு மியூஸிக்கல்தான். அதன் முதல் திரையிடல் முடிந்ததும், அதில் பேசியும், ஏழு பாடல்களைப் பாடியும் நடித்த ஜோல்சனின் பெயரைச் சொல்லி பார்வையாளர்கள் கூச்சலிட்டார்கள், கட்டுப்படுத்த முடியாத கும்பலாகத் திரண்டார்கள். படம் பெரிய வெற்றியடைந்தது. இனி சினிமா இப்படித்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கே திரைப்பட முதலாளிகள் வந்தார்கள்.

ஆனால் மேற்கில் மௌனப் படக் காலத்திலேயே, திரைக்கலையின் அனைத்துக் காட்சி நுட்பங்களும், கதைசொல்லும் உத்திகளும், பலவித கதை வகைகளும் எல்லாம் உருவாகிவிட்டிருந்தன. சிறந்த இயக்குனர்கள், அற்புதமான நடிகர்கள் மட்டுமல்ல நல்ல திரைப்பட ரசனை கொண்ட பார்வையாளர்களையும் உருவாக்கியிருந்தன மௌனப் படங்கள். அதனால்தான் பேசும்படமாக மாறிய பிறகும், அங்கே திரைமொழி திசை மாறாமல் பயணம்செய்ய முடிந்தது.

ஆனால் இந்தியாவில் மௌனப் படக் காலகட்டம் ஆரம்பித்ததே பத்து வருடங்களுக்குப் பிறகுதான். அதிலும் குறிப்பிடத்தக்க கலை முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. எல்லாருக்கும் தெரிந்த புராணக் கதைகளையும், சில காதல் கதைகளையும் தாண்டி எதுவும் நடக்கவில்லை. குறிப்பிடத் தகுந்த கலைஞர்கள் உருவாகவில்லை. ரசனையான பார்வையாளர்களும் உருவாகவில்லை. அதற்குள் பேசும்படக் காலகட்டம் ஆரம்பித்துவிட்டது.

இந்தியாவின் முதல் பேசும் படமான “ஆலம் ஆரா” வெளியானபோதுதான் முதன்முறையாக தியேட்டரில் போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தும்படியாகக் கூட்டம் கூடியது. அந்தப் படத்தைப் பற்றி ஷியாம் பெனகல், “அது முதல் பேசும் படமல்ல முதல் பாடும் படம்” என்றே கசப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அளவுக்கு அதில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. அதை எடுத்த அர்தேஷிர் இராணி தான் இந்தியாவின் முதல் வெற்றிகரமான பட அதிபர். ஏராளமான நடிகர்களையும் இயக்குனர்களையும் அவருடைய நிறுவனமே ஆரம்பத்தில் உருவாக்கியது. மொத்தம் நூற்றி ஐம்பத்தெட்டு படங்களை அவர் இயக்கினார்.

அவருடைய தயாரிப்பில், அவரது உதவியாளர் ஹெச்.எம். ரெட்டி இயக்கி, ‘ஆலம் ஆரா’-வுக்குப் போடப்பட்ட அதே செட்டில் உருவானதுதான் தென்னிந்தியாவின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’. அதில் தமிழ் நடிகர்கள் தமிழிலும் தெலுங்கு நடிகர்கள் தெலுங்கிலும், சிலர் இந்தியிலும் பேசினார்கள். இது சரியல்ல என்று அவர்களுக்குத் தெரியவில்லையா என்று யோசிக்கிறீர்களா? வெறும் எட்டு நாளில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள். நடிகர்களே பாடி நடிக்க வேண்டும். படத்தில் ஐம்பது பாடல்கள். அப்படியானால் ஒருநாளுக்கு ஆறு பாடல்களுக்குமேல் படமாக்கியிருக்கிறார்கள். பிறகு வசனத்தைப் பற்றியெல்லாம் கவலைப்பட இயக்குனருக்கு எப்படி நேரமிருந்திருக்கும்? ‘இந்திர சபா’ என்ற படம் அதற்கு அடுத்த வருடம் வந்தது. அதில் எழுபது பாடல்கள்.

இந்திய மக்கள் அப்போது இசையை ரசிக்கத் தெரிந்த அளவுக்கு திரைக்கலையை ரசிக்கப் பழகியிருக்கவில்லை. நல்ல பாடல்கள் இருந்தால் அது நல்ல படம் என்று நினைத்தார்கள். மக்களுக்கான இசையை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் வாகனமாகத்தான் சினிமாவை முதலாளிகளும் கருதினார்கள். ஆரம்பமே இப்படித் தவறாகப் போனதனால் பிறகு எப்போதும் மாற்றமுடியாததாகவே அது ஆகிவிட்டது.

பிறகு உருவான நல்ல இயக்குனர்கள் கூட, மக்கள் வரவேற்பைக் கருத்தில் கொண்டு பாடல்களைச் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். சந்தைதான் பொருளின் தயாரிப்பை முடிவுசெய்யும் என்கிற பொதுவிதியை வணிக சினிமா எப்படி மீற முடியும்?

வணிக நோக்கத்திற்காக மட்டும் இல்லாமல், சமூக அக்கறையுடன் படங்களை எடுத்த வி.சாந்தாராம், கலையுணர்வுடன் அற்புதமான படங்களைத் தந்த குருதத் போன்றவர்களும் கூட இயல்பிலேயே இசைப் பிரியர்களாகவும், பாடல்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திக் கதை சொல்வதில் விருப்பம்கொண்டவர்களுமாகவே அமைந்துவிட்டார்கள்.

திரையுலகைத் தொற்றிப் படர்ந்த கொடியாக இசையுலகம் இருந்தாலும், ஒரு கட்டத்தில் அதை முழுக்க மறைத்து மூடி மேலெழுந்து வெற்றிக் கொடியாகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டது இசை. எனது நண்பர் கவிஞர் மகுடேசுவரன் ஒருமுறை “திரைப்படங்கள் இறுதியில் பாடல்களாகத்தான் எஞ்சுகின்றன” என்று சொன்னார். அது உண்மைதானே? பழைய படங்கள் எல்லாம் இன்று வெறும் பாடல்களாகத்தான் நம் நினைவில் நிற்கின்றன அல்லவா?

இந்திய சினிமாவின் தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாகவே பாடல்கள் மாறிவிட்டன. குரு தத்தின் ‘பியாஸா’ படத்தின் உச்சக் காட்சியில் வரும் இந்தப் பாடலைத் துண்டித்துவிட்டால் கதையே இல்லாமலாகிவிடும் அல்லவா?