மறுஜென்மமும், பேய் பங்களாவும்

மேற்குலகில், 1818யில் மேரி ஷெல்லி எழுதிய அறிவியல் புனைவான ‘ஃபிராங்கன்ஸ்டைன்’ மற்றும் 1897யில் பிராம் ஸ்டோகர் எழுதிய பேய்க்கதையான ‘டிராகுலா’ ஆகிய நாவல்களைப் பின்பற்றி இதுவரை எத்தனைப் படங்கள் வந்திருக்கின்றன என்பதற்குக் கணக்கே இல்லை. போரிஸ் கர்லாஃப், கிறிஸ்டோபர் லீ போன்ற நடிகர்கள் அந்தக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெரும்புகழ் பெற்றிருக்கிறார்கள்.

நான் பார்த்த மிகச் சிறந்த வணிகப் படங்களின் பட்டியலில், ஜேம்ஸ் வேல் இயக்கிய “தி பிரைட் ஆஃப் ஃபிராங்கென்ஸ்டெய்ன்” எப்போதும் இருக்கும். எஃப்.டபிள்யூ.முர்னோ, வெர்னர் ஹெர்ஸாக், ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா போன்ற மிக முக்கியமான இயக்குனர்கள் எல்லாம்கூட ‘டிராகுலா’வை மிகச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

அவற்றை நாம் ரசிக்கலாம், ஆனால், அதே பின்புலத்தில் நாம் படமெடுக்கும் போது ஜெய்சங்கரின் கௌபாய் வேஷம்போல ஒட்டாமலே தானே இருக்கும்? காரணம் அந்தக் கதைகள் மேற்குலகின் மிகப் புராதனமான ஒரு நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதைப் புரிந்துகொள்ளாதவர்களே நம் நாட்டுக்கு அவற்றைப் பிரதிசெய்ய முயற்சித்துக் கேலிக்குள்ளாகிறார்கள்.

‘மரணத்தைக் கடந்து வாழவேண்டும்’ என்ற மேற்குலகின் ரகசிய ஆசையே இந்தக் கதைகளின் அடியாழத்தில் இருக்கிறது. அந்த ஆசைதான் அவர்களின் ‘ஹோலி கிரெயில்’ பற்றிய நம்பிக்கையாகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலாகவும், ‘புரொமெதியஸ்’ என்கிற புராணமாகவும் மிகமிகப் பழங்காலத்திலிருந்தே அங்கே இருக்கிறது.

அதேபோன்று நம் நாட்டில் இருக்கும் மறுஜென்மம் பற்றிய நம்பிக்கை, நம் புராணங்களை விடவும் புராதனமானது. ஊழ்வினை பற்றிப் பேசாத காவியங்களே இங்கு இல்லை. இந்திய சராசரிக் குடிமகன் தான் வாழ்வதின் அர்த்தமாக எதைக் காண்கிறான் என்பதை யாரும் ஆராய்ந்தால், மறுஜென்மம் பற்றிய அவனது நம்பிக்கையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆய்வாளர்களுக்கு மக்களுக்கு அறிவுரை சொல்வதற்குத்தான் நிறைய இருக்கிறது, அவர்களின் ஆழ்மனம், கூட்டுமனம் பற்றித் தெரிந்துகொள்ள எதுவும் இல்லை.

ஆனால் வணிக சினிமாக்காரர்கள் அதை நன்றாகப் புரிந்துகொண்டு, மீண்டும் மீண்டும் மறுஜென்மத்தைத் தொட்டு வெற்றியை எட்டியிருக்கிறார்கள். குறிப்பாக இந்தியில் இப்போதுவரை வருடந்தோறும் மறுஜென்மப் படங்கள் வந்தபடியேதான் இருக்கின்றன. அதை ஆரம்பித்துவைத்த பெருமை, 1949யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘மஹால்’ என்ற அசோக்குமார், மதுபாலா நடித்த படத்தையே சாரும். இந்திய சினிமாவின் முதல் பேய் பங்களாவும் அதில்தான் வருகிறது.

அதில் இடம்பெறும் “ஆயேகா” என்ற இந்தப் பாடல் முதன்முறையாக ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டபோது, அந்தப் பாடகி யார் என்று கேட்டு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தனவாம். ரேடியோக்காரர்களுக்கும் அது தெரியவில்லை. காரணம், இசைத் தட்டிலும் பெயர் இடம்பெறவில்லை. பிறகு அவர்கள் விசாரித்துத் தெரிந்துகொண்டு பெயரை அறிவித்தார்கள். அதன் பிறகு இன்றுவரை அந்தப் பெயர் வானொலியில் அறிவிக்கப்படாத நாளே இல்லை. அந்தப் பாடகி, லதா மங்கேஷ்கர்.