தரமான வணிகம்.

வணிக சினிமா என்று நான் குறிப்பிடுவது மிக அதிகப் பார்வையாளர்களைக் கவரும் நோக்கத்தோடு, அவர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கையும், அதை எடுப்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கும் நோக்கத்தோடு எடுக்கப்படுபவை.

கலைப் படங்கள், அதற்கு நேர்மாறாக, பார்வையாளர்களுக்காக எந்தச் சமரசமும் செய்துகொள்ளாத, கலை நோக்கோடு மட்டும் எடுக்கப்படுபவை.

இடைநிலைப் படங்கள் என்பவை, கலையையும் பொழுதுபோக்கையும் ஒருசேரக் கருத்தில்கொண்டு எடுக்கப்படுபவை.

அப்படியானால் வணிகப் படங்கள் திரைக்கலைக்கு எந்தப் பங்களிப்பையும் செய்வதில்லையா? செய்கின்றன. கலைப் படங்களைச் செய்பவர்கள் வருமானத்திற்காகச் சார்ந்திருப்பது வணிக சினிமாவைத்தான்.

கொஞ்சமும் கலையறிவோ சமூகப் பொறுப்போ இல்லாதவர்கள் கூட, சினிமாவில் வெற்றியடைய முடியும்தான். ஏதேதோ குட்டிக்கரணங்கள் போட்டு, தரமற்ற படங்கள் எடுத்து, அவர்கள் சம்பாதிக்கவும் செய்யலாம். ஆனால் அவர்களின் படங்கள் வெகுசீக்கிரத்திலேயே மறக்கப்பட்டவையாக ஆகின்றன. நல்ல கலைஞர்களால் சிறந்த தரத்தில் உருவாக்கப்பட்ட படங்களே காலத்தைத்தாண்டி நிற்கின்றன. அவற்றை எடுக்கும் படநிறுவனங்களுக்குத்தான் சமூக மதிப்பும் கிடைக்கும். ஆகவே நல்ல இயக்குனர்களுக்கு, நடிகர்களுக்கு, ஒளிப்பதிவாளர்களுக்கு, இசையமைப்பாளர்களுக்குப் படநிறுவனங்கள் மதிப்பளிக்கவே செய்யும்.

வணிகப் படங்களில் வேலைசெய்ததை வைத்துக் கலைஞர்கள் தங்கள் வாழ்கைக்கான வருமானத்தை உண்டாக்கிக்கொள்வது தவறாகாது. கலைப் படங்களை எடுப்பது எப்போதும் சோதனை முயற்சியாகத்தான் இருக்க முடியும். வருமானத்துக்கு உத்திரவாதமில்லை. அதனால் வேறு வருமான வாய்ப்புகள் உள்ளவர்களே அதில் தொடர்ந்து ஈடுபட முடியும். அந்த வருமானத்தை அவர்களுக்குத் தெரிந்த கிராஃப்டை வைத்து உண்டாக்கிக்கொள்வது எப்படி தவறாகும்? வணிகமென்றாலும் அதைத் தரமானதாக அவர்கள் தந்தால் சினிமா உலகுக்கும் நல்லதுதானே?

கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய விருதைப் பெற்ற “தோ பீகா ஜமீன்” என்ற கலைப் படத்தை எடுத்தவர் பிமல் ராய். சத்யஜித் ரேவால் பெரிதும் மதிக்கப்பட்ட, அவருக்கு இணையாகக் கருதப்பட்ட ஒரு இயக்குனர் என்றால் அது ரித்விக் கட்டக் தான். பல வங்காள மலையாளக் கலைப் படங்களுக்கு இசை அமைத்தவர் சலீல் சௌத்திரி. இவர்கள் மூவரும் இணைந்து, மிகப் பெரிய வெற்றிபெற்ற ஒரு வணிகப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

ரித்விக் கட்டக் திரைக்கதை எழுதி, சலீல் சௌத்திரி இசையமைத்து, பிமல் ராய் இயக்கிய அந்தப் படம், “மதுமதி“.

முந்தைய பதிவில் குறிப்பிட்டதுபோல், மறுஜென்மம் பற்றிய இன்னொரு கதைதான் ‘மதுமதி’யும். மறுஜென்மம், ஆவி, இருவர் ஒரேபோல் இருப்பது போன்ற எல்லா வணிகத் திகில் கதை உத்திகளையும் ஒன்றாகக் கலந்து உருவாக்கப்பட்ட படம்தான். ஆனாலும் மிகத் தரமான திரைப்படம் என்று எல்லா மட்டத்துப் பார்வையாளர்களும் விமர்சகர்களும் ஏற்றுக்கொண்ட படம் இது. ஶ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ முதல் ஷாருக்கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ வரை பல வெற்றிப் படங்கள் இந்தப் படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டவைதான்.

திலீப்குமார், வைஜயந்தி மாலா நடித்த இந்தப் படத்திலிருந்து மூன்று பாடல்களின் சுட்டிகளைக் கீழே தருகிறேன்… சலீல் சௌத்திரிக்காகவும், லதா மங்கேஷ்கர்க்காகவும், வைஜயந்தி மாலாவுக்காகவும் மட்டும் அல்ல, ஒளிப்பதிவு மேதை திலிப் குப்தா-வுக்காகவும் தான்… வெளிப்புறக் காட்சிகளை கூடத்தில் எடுத்ததைப் போன்ற ஒளி அமைப்புடனும், கூடத்தில் எடுத்ததை நிஜ வெளிப்புறத்தில் எடுத்தைப்போன்ற நம்பகத் தன்மையோடும் எப்படி எடுத்தார் அவர்?