பொழுதுபோக்கின் பொதுப்போக்கு

இந்திய சினிமாவின் பொற்காலமான 1940கள் முதல் 1960கள் வரையான காலகட்டத்தில் வெளிவந்த இந்திப் படங்களின் முக்கியமான காட்சிகளை முன்வைத்து, வணிக சினிமாவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தேன். இந்தி சினிமாவை ஏன் ஆராய வேண்டும்? ஏனென்றால் அதன் போக்கைப் பின்பற்றித்தான் தமிழ் சினிமாவின் அடிப்படைகள் உருவாகிவந்தன.

நம்பிக்கையில்லாதவர்கள், 40-50கள், 60-70கள், 80கள், 90கள் என்று காலகட்டங்களாகப் பிரித்துக்கொண்டு, அந்தந்த காலங்களில் வந்த தமிழ் மற்றும் இந்திப் படங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். தமிழ் சினிமா இந்தியின் போக்கைப் பின்பற்றிய அதேசமயத்தில், தனது தனித்த கலாச்சார அடையாளங்களையும் தக்கவைத்துக்கொண்டது என்பதை நாம் அறிவோம்.

அதுபோலவே, இந்தி சினிமா, ஐரோப்பிய அமெரிக்க சினிமாவின் போக்குகளைப் பின்பற்றியிருக்கிறது, அதேசமயம் தனக்கான கலாச்சாரத் தனித்தன்மைகளையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. மேற்கு உலக சினிமாக்களும் அப்படியே. உலக நாடுகளின் பலவிதத் தன்மைகளிலிருந்து எதுவெல்லாம் மையநீரோட்டத்துக்கு வர முடியுமோ அதையெல்லாம் சேர்த்துக்கொண்டபடியே தனது தனித்தன்மைகளையும் தக்கவைத்திருக்கிறது. உலகின் பலவித ஊற்றுக்களிலிருந்து புறப்பட்ட நீரோட்டங்கள் ஒரு மையநீரோட்டத்தில் கலந்து ஓடுவதாக நாம் கற்பனை செய்துகொள்ளலாம். எதெல்லாம் உலகம் முழுமைக்குமான பொது ரசனைக்குப் பிடிக்கும்படி இருக்குமோ அது ஒரு பொதுப்போக்காக மாறி நீடிக்கிறது.

சீனா நமக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதன் தற்காப்புக் கலைகளை அமெரிக்க சினிமாவின் சண்டைக் காட்சிகளில் பார்த்த பின்னர்தானே நாமும் பயன்படுத்த ஆரம்பித்தோம்? அமெரிக்க கௌபாய் படங்களின் தாக்கத்தினால்தான் அகிரா குரசாவா தன் முதல் படமான ‘சஞ்சிரோ சுகாட்டா’ முதல் பல சாமுராய் படங்களைச் செய்தார். பிறகு அவருடைய செவன் சாமுராய், யோஜிம்போ போன்ற படங்கள் அப்படியே கௌபாய் படங்களாக மீண்டும் எடுக்கப்பட்டன. இப்படி ஏராளமான உதாரணங்களை அடுக்க முடியும். ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ படம் உலகமெங்கும் பாதிப்பைச் செலுத்தி, அரைகுறைப் புரிதலோடு எல்லா மொழிகளிலும் சைக்கோக்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.

இது ஏதோ சினிமாவுக்கு மட்டுமே உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள். எல்லாக் கலை வடிவங்களுக்கும் பொருந்தும். பாப் மியூஸிக், அதாவது, பாப்புலர் மியூஸிக், அதாவது, பெருவாரியான மக்களால் ரசிக்கப்படும் இசை – அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகள் அனைத்தின் இசைக்கூறுகளையும் ஒரு கயிற்றால் கட்டி உருவான ஒரு பொதுப்போக்கு அது. பிறகு அது உலகின் பொது இசையாகவும் ஆனது அல்லவா? நடனம் போன்ற நிகழ்கலைகளில் மட்டுமல்ல இலக்கியத்திலும் இதேதான். உலகெங்கும் எழுதப்பட்ட சிறுகதைகள் நாவல்களில் பொதுப்போக்குகளைப் பார்க்க முடியும். மிகப் பழமையான தமிழ்க் கவிதை மரபையே, பாரதி மேலைநாட்டுக் கவிதைகளின் தாக்கத்தால் மாற்றியமைத்தார் அல்லவா? ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, ஆடை வடிவமைப்பு போன்ற எல்லாக் கலை வடிவங்களுக்கும் உலகம் தழுவிய பொதுப் போக்குகள் உண்டு.

1960யில் தேவ் ஆனந்தும் அவருடைய சகோதரர்களும் சேர்ந்து எடுத்த ‘காளா பஸார்’ (கள்ளச் சந்தை) படத்தின் ஒரு ரீல் வீடியோவைக் கீழே இணைத்திருக்கிறேன். அதில், தேவ் ஆனந்த் தான் ஒரு அமெரிக்க-ஐரோப்பிய படத்தில் நடித்துக்கொண்டிருப்பதாக நினைத்தே செய்திருப்பாரோ எனும் அளவுக்கு அவரது உடையும், உடல்மொழியும் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

சண்டைக் காட்சிகளில் தேவைக்கு அதிகமாக ஒரு அடிகூட அடிக்கப்படுவதில்லை. அப்போதுவரை உலகெங்குமே சினிமா சண்டைகள் அப்படித்தானே இருந்திருக்கிறன? அந்தப் பொதுப்போக்கின்படியே மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்ட காட்சிகளுக்கு அடுத்து, தடாலடியாகத் திரைப்படம் இந்தியத் தன்மைக்குத் தாவுவதைப் பார்க்கலாம்.

வீட்டில் பஜனைப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் தாயின் உருவில் அங்கே அமர்ந்திருப்பது இந்தியக் கலாச்சாரம் அல்லாமல் வேறென்ன?

அதன்பிறகு வரும் திரையரங்கக் காட்சியில், ஹிட்ச்காக்குக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆள் அளவுக்கான கட் அவுட், சினிமா உலகின் பொதுப்போக்கைப் பறைசாற்றியபடி நிற்பதாகவே நான் நினைக்கிறேன்.

ஹிட்ச்காக் பற்றிப் படித்தவர்களுக்கு அது என்ன கட் அவுட் என்பது தெரிந்திருக்கும். அவர் தன் கைக்கடிகாரத்தைக் காட்டி ‘நேரத்துக்கு வரவேண்டும்’ என்று சொல்வதுபோல் அமைக்கப்பட்டது அது. அவருடைய சைக்கோ படம் வெளியான எல்லா தியேட்டர்களிலும் ‘படம் ஆரம்பித்த பிறகு கண்டிப்பாக யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்ற அறிவிப்போடு அந்தக் கட் அவுட் வைக்கப்பட்டது, கண்டிப்பான விதியாகவும் அது கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால் காளா பஸார் திரைப்படத்தில் காட்டப்படும் கட் அவுட்டுக்கு அடியில் ‘நார்த் பை நார்த் வெஸ்ட்’ என்ற ‘சைக்கோ’வுக்கு முந்தைய ஹிட்ச்காக்கின் படப்பெயர் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமான புதுத் தகவலாக இருக்கிறது. சினிமா பொழுதுபோக்குக்கானது மட்டுமல்ல, தன் இயல்பிலேயே ஆவணப்படுத்தும் தன்மை கொண்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.