கிளப் டான்ஸ்.

வெகுமக்கள் இசை, இந்தியாவில் திரை இசையாக மட்டும் இயங்குவது போலவே, வெகுமக்கள் நடனம் என்பதும் திரை நடனம் மட்டும்தான். மரபு நடனங்கள், நாட்டுப்புற நடனங்கள் தவிர்த்து வெகுஜனத்துக்கான ஒரு பொது நடனப்போக்கு இந்தியாவில் திரைப்படங்களில் மட்டுமே இருக்கிறது.

திரைப்படம் என்பதே அசைவுகளின் அழகியல்தானே? கட்டக்கடைசியில் திரைக்கலை பதிவுசெய்வது எதை? இயற்கையின் அசைவுகள், வாகன அசைவுகள், உடல்களின் அசைவுகள், முகபாவங்களின் அசைவுகள் போன்றவற்றின் தொகுப்புத்தானே எந்த ஒரு திரைப்படமும்? ‘மூவி’ என்று அதனால்தானே சொல்கிறோம்? அலைகளையும், மரங்களின் தலையாட்டங்களையும், கதிர்களின்மேல் அலையடிக்கும் காற்றையும், மேகங்களையும், ஆற்றையும், நீர்வீழ்ச்சியையும், படகு – ரயில் முதலான வண்டிகள் – காளைகள், குதிரைகளின் ஓட்டங்களையும், பறவைகளின் சிறகடிப்பையும் எத்தனை எத்தனைத் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்? அவையெல்லாமே ஒருவகையில் நடன அசைவுகள்தான் இல்லையா? எந்த ஒரு அழகிய அசைவும் ஒரு நடனம்தானே?

அசைவின் கலையான சினிமாவிற்கு அசைவின் உச்சமான நடனம் எப்போதும் அழகூட்டவே செய்யும். பொழுதுபோக்கு அம்சங்கள் எதையும் விடாமல் தக்கவைக்கும் தன்மைகொண்ட இந்திய வணிக சினிமா, ஆரம்பத்திலிருந்தே நடனத்துக்கு முக்கிய இடத்தைக் கொடுத்திருந்தது. பழங்குடிச் சமூகங்களாக இருந்த காலத்திலிருந்தே இங்கே நடனம் உண்டென்பதால், சினிமாவில் அது பெற்றிருக்கும் இடத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கிளப் டான்ஸ் அல்லது காபெரே டான்ஸ்க்குப் பழைய படங்களில் இருக்கும் முக்கியத்துவத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

நம் நாட்டு ஆண்களின் செக்ஸ் வறட்சிக்குத் தீனியாகத்தான் இப்பாடல்கள் சினிமாவில் வைக்கப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அத்தகைய பாடல்களுக்காகவே ஒரு பெரும் ஆண்கூட்டம் தியேட்டருக்கு வரும். தியேட்டர் ஊழியர்களும், விநியோகஸ்தர்களும் இதை நேரடியாக அறிவார்கள் என்பதால், எந்தப் படத்திலும் அப்படி ஒரு பாடலாவது இருக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்துவது உண்டு. விநியோகஸ்தர்களால் ஒட்டப்படும் உள்ளூர் போஸ்டர்களைக் கவணித்தால் தெரியும். இந்தப் படத்தில் காபரே கிளப் நடனம் இடம்பெற்றிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுச் சொல்வதுபோல் போஸ்டரின் ஓரத்திலாவது அந்த நடனத்தின் படத்தைப் போட்டிருப்பார்கள்.

ஆங்கிலேயர் காலத்திலிருந்தே பெருநகரங்களில் காபரேக்கள் இயங்கிவந்தன. அங்கே ஒருமுறையாகிலும் செல்லவேண்டும் என்கிற எண்ணம் பெருநகருக்குள் நுழையும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும். பிறகு அதை ரெக்கார்ட் டான்ஸ் என்ற பெயரில் சிறு கிராமங்களுக்கும் கூட கொண்டுசென்றுவிட்டார்கள். இப்போது காபெரேக்கள் அநேகமாக அழிந்துவிட்டமையால் சினிமாவிலிருந்தும் அது விலகத் தொடங்கிவிட்டது. ஆனால் இப்போதும் திருவிழா நாட்களில் கிராமங்களில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கிறது. எல்லா நாட்களிலும் அதைப் பார்ப்பதற்கு இல்லை என்பதாலும், எல்லாராலும் கூச்சத்தை விட்டு அங்கு செல்லமுடியாது என்பதாலும், அவர்களின் தேவையைத் திரைப்படங்களே நிறைவுசெய்கின்றன.

பழைய படங்களில் வழக்கமாக, நாயகன் துப்பறிவதற்காக ஒரு கிளப்புக்குச் செல்வான் அங்கே அப்போது ஒரு நடனம் நடந்துகொண்டிருப்பதாகக் காட்டுவார்கள். பல காலமாகவே சினிமா வில்லன்கள் காபெரே கிளப்பில் அமர்ந்து திட்டமிடுவது எதற்காக? அங்கே ஒரு நடனப் பாட்டை வைக்கும் வசதிக்காகத்தானே? பிறகு அந்த லாஜிக்குக்கும் அவசியமில்லாமலாகி, வில்லன் எந்தப் பாழடைந்த குகைக்குள் இருந்தாலும், அவன் கைதட்டியவுடன் ஒரு பெண் வந்து ஆட ஆரம்பித்தாள். மக்களும் பழக்கதோஷத்தில் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

இது எல்லாவற்றுக்கும் முன்னோடி ஹாலிவுட் படங்கள்தான். ஆனால் அங்கே அது ஸ்டிரிப் டீஸ், போல் டான்ஸ் என்று ஆடை அவிழ்க்கும் நடனமாக இருக்கும். நாயகன் அங்கே துப்பறியச் செல்வான் அல்லது வில்லன் தன் குழுவுடன் திட்டமிடச் செல்வான். ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கான உண்மையான நோக்கம், பார்வையாளர்களைத் தங்களோடு அழைத்துச் செல்வதுதானே? ஆடையை, ஹாலிவுட்டில் முழுக்க அவிழ்த்துவிடுவார்கள், ஆனால் நம் நாட்டில் அது எப்போது வேண்டுமானாலும் அவிழ்ந்துவிடும் என்பதுபோல ஆபத்தின் விளிம்பிலேயே ஆடிக்கொண்டிருக்கும். இதுதான் வித்தியாசம்.

தென்னிந்தியாவின் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா எல்லாருக்கும் முன்னோடியாக இந்தியில் ஒருவர் இருந்தார். ஹெலன். அற்புதமான நடனக் கலைஞர். ஆங்கிலோ இந்தியத் தந்தைக்கும் பர்மியத் தாய்க்கும் பிறந்தவர்.

தந்தை இறந்தபின்பு, சிறுமி ஹெலன் தன் குடும்பத்தோடு அகதியாக பர்மாவிலிருந்து நடந்தே இந்தியாவுக்குள் நுழைந்தார். அவர்களோடு வந்த கூட்டத்தினரில் பாதிப்பேர் பாதி வழியிலேயே இறந்துபோனார்கள். பசியில் வாடி எலும்பும் தோலுமாக உயிரைக் காத்து வந்துசேர்ந்தார். குடும்பத்துக்காக படிப்பைக் கைவிட்டு, துணை நடிகையாகவும், குழுவில் ஆடும் பெண்ணாகவும் சினிமாவில் சேர்ந்தார். அவரது நடனத் திறமையால் தனியாகப் பாடலுக்கு ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.

1958யில் வந்த ‘ஹவ்ரா பிரிட்ஜ்’ படத்தின் “மேரா நாம் சிம் சிம் சூ” பாடல்தான் முதல் பெரும் வெற்றியைக் கொடுத்தது. அதன் பிறகு முப்பது ஆண்டுகள் இந்தி வணிக சினிமாவின் பிரதானமான நடன நடிகையாக அவர் இருந்தார். “ஷோலே” “டான்” படங்களில் அவரது நடனத்தை யாரும் மறந்துவிட முடியாது. அந்தப் படங்கள் மீண்டும் எடுக்கப்பட்டபோது, ஊர்மிளா மடோன்கர், கரீனா கபூர் ஆகிய முன்னணி நடிகைகளே அந்த நடனப் பாடல்களில் ஆடினார்கள். அப்போதும் எல்லா விமர்சகர்களும் ஹெலனுக்கு இணையாக அவர்களின் நடனம் இல்லையென்றே சொன்னார்கள்.

‘ஹவ்ரா பிரிட்ஜ்’-யை இயக்கியவர், இந்தி சினிமாவின் மிகப் பெரிய வணிக இயக்குனரான ஷக்தி சமந்தா. அசோக் குமார், ஷம்மி கபூர், ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன் என்று பல தலைமுறை நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை எடுத்தவர் அவர்.

இந்தி சினிமாவின் மைல்கல்களில் ஒன்றான, ஹவ்ரா பிரிட்ஜ், துப்பறியும் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இருவிதமான கிளப் நடனப் பாடல்கள் அந்தப் படத்தில் உண்டு. இரண்டாவது விதத்தைப் பார்ப்பதற்கு முன், ஹெலனுக்கு முதல் வெற்றியைத் தந்த அந்தப் பாடலைப் பார்த்துவிடலாம். பின்னாளில் சந்தையின் தேவைக்கேற்ப வெகுவாக ஆடைக் குறைப்புச் செய்த ஹெலன் இதில் முழு உடையுடன் வருகிறார். ஆனாலும் வசீகரிக்கவே செய்கிறார்.

கதைக்குச் சம்பந்தமில்லாத ஒரு நடனப் பெண் வந்து பாடி ஆடுவது ஒரு வகை என்றால், கிளப் பாடல்களில் இன்னொரு வகை, கதாநாயகியே பாடி ஆடுவது. அதற்கு வசதியாக திரைக்கதைப்படி அவள் பாத்திரத்தையே கிளப் பாடகியாக அமைத்துவிடுவார்கள். ‘ஹவ்ரா பிரிட்ஜ்’ படத்தின் நாயகியையும் அப்படியே உருவாக்கியிருந்தார் ஷக்தி சமந்தா.

அற்புதமான நடிகையான மதுபாலா தன் முகபாவங்களின் வழியாகவே பாடலைப் பூர்த்திசெய்துவிடுகிறார். கண்களின் வழியாகவே கவர்ச்சியைக் காட்டிவிடுகிறார். கதாநாயக நடிகர்கள் நடனக்காரர்களைப் போல் அதிகமாக உடல்வளைத்து ஆடவேண்டியதில்லை, தேவையான முகபாவங்களைக் காட்டினாலே போதுமானது என்பதை நிரூபிக்கும் பாடல் இது. முந்தைய கிளப் நடனப் பாடலை விடவும் இந்தப் பாடலே அதிகம்பேரை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.