சினிமா, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக மட்டும்தான் ஒலிக்க முடியும். அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீரோடு நிற்பவர்களின் சார்பாக மட்டுமே அதனால் பேச முடியும். ஏழைகளின், ஆதரவற்றவர்களின் பக்கத்தில் நின்றபடி அதிகாரப் பீடங்களைக் கேள்வி கேட்பதாகவே ஒட்டுமொத்தமாக சினிமா இருக்கிறது என்பதைக் கவனிக்கலாம்

தொழில்நுட்பப் பாலம்

சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகம். மக்களின் மனதில் கருத்துக்களை விதைக்கும் பிரச்சாரக் கருவியாக அது செயல்பட முடியும் என்பதைச் சென்ற பதிவில் பார்த்தோம். ஒன்றின்மேல் நம்பகத்தையோ அவநம்பிக்கையையோ எளிதில் உண்டாக்கிவிட அதனால் முடியும். சினிமாவில் ‘சொல்லப்படும்’ கருத்துக்கள், வீர வசனங்கள் பற்றி மட்டும் நான் குறிப்பிடவில்லை. பார்வையாளர்கள் உணராமலேயே கூட ஒரு எண்ணத்தை அவர்கள் மனதில் வலுவாகப் பதித்துவிட சினிமாவால் முடியும்.

இயக்குநர்கள் இதை உணராமல் பொறுப்பற்ற விதத்தில் படமெடுத்துவிடக் கூடாது. சினிமாக் கலைஞன் அடிப்படையில் நீதியுணர்வும், சமூக அக்கறையும் கொண்டவனாக இருப்பது அவசியம். தொழில்நுட்பச் சாதனையாளர்களை விடவும், மக்கள் நலன்விரும்பிய கலைஞர்களையே உலகம் விரும்பியிருக்கிறது.

சினிமாவுக்குச் சமூகப் பருப்பெல்லாம் தேவையில்லை என்று அலட்சியமாகச் சொல்பவர்கள் அதிகமும் உதாரணம் காட்டுவது குவெண்டின் டரண்டினோவை. அவர் படங்களில் வன்முறையும் குரூரமும் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கூர்ந்து பார்த்தால், அவரது ஒவ்வொரு படமும் பாதிக்கப்பட்டவர்களின் கதையாக மட்டுமே இருப்பதைக் காணலாம். மையக் கதாபாத்திரம் கோபம்கொள்வதற்கான எல்லாவித நியாயங்களையும் அவர் காட்டாமல் விட்டதே இல்லை.

சினிமா, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக மட்டும்தான் ஒலிக்க முடியும். அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீரோடு நிற்பவர்களின் சார்பாக மட்டுமே அதனால் பேச முடியும். ஏழைகளின், ஆதரவற்றவர்களின் பக்கத்தில் நின்றபடி அதிகாரப் பீடங்களைக் கேள்வி கேட்பதாகவே ஒட்டுமொத்தமாக சினிமா இருக்கிறது என்பதைக் கவனிக்கலாம்.

சுதந்திர இந்தியாவின் ஆரம்பகாலப் படங்களில் மதநல்லிணக்கம், சமத்துவம், ஒற்றுமை, தேசபக்தி போன்றவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். ஆனால் அந்த அளவுக்குத் தீண்டாமை ஒழிப்பு பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது. முக்கியக் காரணம், அப்போது திரையரங்குக்கு வந்து படம்பார்த்தவர்கள் பெரும்பாலும் மேல்சாதிக்காரர்களாக இருந்ததனால், அவர்களைத் திருப்திப்படுத்தும் படங்களையே திரை முதலாளிகள் எடுத்தார்கள்.

சினிமாவுக்குச் செல்வதே ஒரு ஆடம்பரமாக இருந்த நிலைமை மாறி, அனைவரும் பார்க்கும் வகையில் நிறைய திரையரங்குகள் கட்டப்படத் தொடங்கியதும், திரைக்கதையின் பேசுபொருள் மாறியதை அவதானிக்க முடிகிறது. இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வைப் பதிவு செய்வதில் வடநாட்டு வணிக சினிமா தொடர்ந்து ஒரு தீண்டாமையைக் கடைப்பிடித்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் சுதந்திரத்திற்கு முன்பே தீண்டாமைக்கு எதிராக மிகத் துணிச்சலாக ஒரு படம் எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது.

1936யில் ஹிமான்சு ராயின் பாம்பே டாக்கீஸ் தயாரித்து அசோக்குமார் தேவிகா ராணி நடித்த ‘அசுத் கன்யா’ (தீண்டத்தகாத பெண்), தாழ்த்தப்பட்ட கதாபாத்திரத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்ட முதல் இந்திப் படம். ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு வந்து நிறைய படங்களை எடுத்த ஃபிரான்ஸ் ஓஸ்டன் இந்தப் படத்தை இயக்கினார்.

ஓர் உயர்சாதி இளைஞனும் தீண்டத்தகாத பெண்ணும் சிறுவயதுமுதல் காதலிக்கிறார்கள். ஆனால் சமூக நிர்ப்பந்தத்தால் பிரிந்து தங்கள் சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் திருமணத்துக்குப் பின்னும் அவர்களால் முதல் காதலை மறக்க முடியவில்லை. இது இரு குடும்பங்களுக்குள்ளும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ரயில்வேயில் அடிமட்டப் பணியாளனாக இருக்கும் நாயகியின் கணவன், வியாபாரியான அவளது முன்னாள் காதலனைக் கொல்வதற்காக வருகிறான். ரயில்வே கிராஸிங்கில் சண்டை நடக்கிறது, அப்போது ரயில் வர, அவர்களைக் காப்பதற்காக பெண் ரயிலை நிறுத்த முயன்று அதில் மோதி இறக்கிறாள். அந்தத் தியாகத்திற்காக ஊரார் அவளைத் தெய்வமாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள் என்பது கதை.

வணிக சினிமாவில் எப்போதும் சாதிப் பிரச்சனையை வெறும் ஒரு காதல் கதையாகச் சுருக்கிவிடுவார்கள் என்கிற குற்றச்சாட்டு விமர்சகர்களிடம் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள், இன்று பெரும்பாலும் தீண்டாமை இல்லைதான், நகரங்களில் ஒரே தெருவில் பல சாதியினரும் வசிக்கிறார்கள், பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள், அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது? மற்ற சாதியினருள் கூட கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. ஆனால் தாழ்த்தப்பட்ட பையனோ பெண்ணோ வேறு சாதியினரைக் காதலிக்கவோ திருமணம் செய்துகொள்ளவோ முயன்றால் என்ன நடக்கிறது? இரயில்வே தண்டவாளத்தில் சடலமாக அல்லவா கிடக்க நேர்கிறது, ‘அசுத் கன்யா’வின் நாயகியைப் போல? கலப்புத் திருமணங்கள் மட்டும்தானே சாதியை முற்றாக ஒழிக்க முடியும்? அதைத்தானே சினிமா காலங்காலமாக வலியுறுத்திக்கொண்டிருக்கிறது?

மானுடம் பெருவாரியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும் எந்தப் புதிய தொழில்நுட்பமும் ஏதோ ஒருவகையில் மனிதர்களை இணைப்பதற்கானவையாகவே இருக்கின்றன. வண்டிச் சக்கரத்தில் ஆரம்பித்து நவீன காலத்தின் தொலைத்தொடர்பு சாதனங்கள், இணையம் வரையில் இந்தப் பொதுத்தன்மை இருப்பதைப் பார்க்கலாம். சாதி மதம் அரசியல் என்று பிரியவேண்டிய சமூகக் காரணங்களை உருவாக்கும் மானுடம் அதற்கு எதிர் விசையாகத் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்குகிறது என்று நான் நினைப்பதுண்டு. சினிமா என்கிற தொழில்நுட்பம் மானுடத்துக்கு அளித்த பயனும் இந்த இணைப்புத்தான். இதைப் பற்றி காற்றுக்கு வேலி இல்லை என்ற எனது கட்டுரையிலும் நான் எழுதியிருக்கிறேன்.

ஜெயமோகன் ‘செல்லுலாய்ட்’ படம்பற்றி எழுதிய கட்டுரையில், சினிமா என்கிற தொழில்நுட்பம் யதார்த்தத்தை தலைகீழாகப் புரட்டிக் காட்டக்கூடியது என்று குறிப்பிடுகிறார். கேரளத்தின் முதல் படமான ‘விகதகுமாரன்’ஐ தமிழரான டேனியல் 1928யில் எடுத்தபோது, ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை படத்தில் நாயர் பெண்ணாக நடிக்கவைத்தார். சினிமாவின் யதார்த்தம் வெளியிலிருக்கும் யதார்த்தத்துக்கு நேர்மாறக இருக்கலாம் என்பதை அன்று பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருவனந்தபுரத்தின் கேபிட்டல் திரையரங்கில் அது வெளியான தினத்தில் பெரும் கலவரமே வெடித்தது. இந்த வரலாற்றையே ‘செல்லுலாய்ட்’ படத்தில் இயக்குநர் கமல் பதிவுசெய்தார்.

சாதிக்கு எதிரான முக்கியமான இன்னொரு ஆரம்பகாலப் படம் 1959யில் பிமல் ராய் இயக்கிய ‘சுஜாதா’. இந்திய இயக்குநர்களில் முக்கியமான ஒருவரான பிமல் ராய் சமூக அக்கறையுள்ள வணிகப் படங்களை எடுத்த முன்னோடி. இவருடைய ‘மதுமதி’ படத்தைப் பற்றி முந்தைய கட்டுரையில் நாம் பார்த்திருக்கிறோம். ‘தோ பீகா ஜமீன்’ அவருடைய முக்கியமான கலைப் படைப்பு.

‘சுஜாதா’ படத்தின் கதை எளிமையானது. ஒரு தாழ்த்தப்பட்ட அநாதைப் பெண்ணான சுஜாதா உயர்சாதிக் குடும்பத்தின் ஆதரவில் அவர்கள் வீட்டில் வளர்கிறாள். தன் குடும்பமென்றே அதை நினைக்கிறாள். அவள் தன்னை மகளாக உணர்ந்தாளும், வளர்க்கும் அன்னை அவள் சாதியால் தாழ்ந்தவள் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவூட்டிப் பிரித்துவைத்தபடியே இருக்கிறாள். இறுதியில், அந்தத் தாய் விபத்தில் அடிபட, அவளது சிகிச்சைக்குத் தேவையான அரிய வகை ரத்தம் கிடைக்கவில்லை. சுஜாதா ரத்தம் கொடுக்கிறாள். தாயின் சாதி மேட்டிமை எண்ணத்தை அந்த ரத்தம் கழுவிச் சுத்தமாக்குகிறது. சுபம்.

அந்தப் படத்தில் ஒரு புகழ்பெற்ற தொலைபேசிப் பாடல் இருக்கிறது. தொலைபேசியின் ஒரு முனையில் சுஜாதா அழுதபடி இருக்கிறாள். மறுமுனையில் உயர்சாதி நாயகன் சிரித்தபடிப் பாடுகிறான். இருவேறு உலகங்களில் இருக்கும் அவர்களை இணைக்கும் பாலமாகத் தொலைபேசி என்கிற தொழில்நுட்பம் அங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, சினிமா என்கிற தொழில்நுட்பத்தைப் போலவே.