அழுவாச்சி காவியங்கள் மட்டுமல்ல, எந்த வகையான படத்திலும் ஒரு சோகப் பாட்டாவது இருக்கும். வெறும் சோகமாக இல்லாமல் காவிய சோகமாக அது மாறுமென்றால், தத்துவப் பாடலாகப் பரிணமிக்கும்

கண்ணீரைப் பின்தொடர்தல்.

இந்திய நாவல்களில் அதிகமுறை படமாக்கப்பட்டது எது தெரியுமா? சந்தேகமில்லாமல், ‘தேவதாஸ்‘ தான்.

சரத் சந்திர சட்டோபாத்யாயர் 1917ஆம் ஆண்டு, தன் 17ஆம் வயதில் வங்காள மொழியில் எழுதிய இந்த நாவல், இதுவரை 16 முறைக்குமேல் படமாக்கப்பட்டிருக்கிறது. ‘வாழ்வே மாயம்’ போல கொஞ்சமாகத் தழுவி எடுக்கப்பட்ட படங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.

முதன்முதலில் ‘தேவ்தாஸ்’ 1927யில் மௌனப் படமாக நரேஷ் மித்ரா என்பவரால் எடுக்கப்பட்டது. பிறகு கல்கத்தாவில் படித்த அஸ்ஸாமியரான பி.சி.பருவா அதைப் பேசும் படமாக வங்காளம், இந்தி, அஸ்ஸாமி மொழிகளில் வெவ்வேறு நடிகர்களை வைத்து முறையே 1935, 1936, 1937 ஆகிய ஆண்டுகளில் எடுத்தார்.

1953ஆம் ஆண்டு வேதாந்தம் ராகவய்யாவால் தமிழ், தெலுங்கு இருமொழிப் படமாக ‘தேவதாஸ்/தேவதாசு’ எடுக்கப்பட்டது. நாகேஸ்வரராவ் (தேவதாஸ்), சாவித்திரி(பார்வதி), லலிதா(சந்திரமுகி) ஆகியோரின் சிறந்த நடிப்பும், பி.எஸ்.ரங்காவின் அற்புதமான ஒளிப்பதிவும், அருமையான பாடல்களும் இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றியடைய வைத்தன. அதன் பெரும்பான்மையான பாடல்களுக்கு இசையமைத்த சி.ஆர்.சுப்பராமன் இடையிலேயே காலமானதனால், விஸ்வநாதன் ராமமூர்த்தி பின்னணி இசையையும் மிகப் பிரபலமான ‘உலகே மாயம்’ பாடலையும் செய்து முதன்முதலில் கவனம் பெற்றார்கள்.

இந்தியில் 1936யில் பி.சி.பருவாவால் எடுக்கப்பட்ட ‘தேவ்தாஸ்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிமல் ராய். பிறகு பிமல் ராய் தனியே இயக்குநராகப் பிரபலமடைந்தபின், 1955ஆம் ஆண்டு இந்தியில் மீண்டும் ‘தேவ்தாஸ்’ஐ எடுத்தார்.

திலீப்குமார் தேவதாஸாகவும், வங்காள நடிகையான சுசித்திரா சென் பார்வதியாகவும், தமிழ் நடிகையான வைஜயந்திமாலா சந்திரமுகியாகவும் நடித்திருந்தனர். வங்காள நாட்டுப்புறம் மற்றும் செவ்வியல் இசை பாணிகளை எஸ்.டி.பர்மன் வித்தியாசமாகப் பயன்படுத்தியிருந்தார். கமல் போஸ் ஒளிப்பதிவு செய்தவிதமும் மிகமிக யதார்த்தமானது. எல்லாம் சேர்ந்து அந்தப் படம் இந்தியாவின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்றாக இப்போதும் எல்லோராலும் மதிப்பிடப்படுகிறது.

பிமல் ராய்-யின் ‘தேவ்தாஸ்’ டிரைலர்:

பாகிஸ்தானில் இருமுறை இந்தக் கதை உருது மொழியில் படமாக்கப்பட்டிருக்கிறது. பங்களாதேஷ் நாட்டிலும் படமாக்கியிருக்கிறார்கள். மலையாளத்தில் வந்திருக்கிறது. வங்காளம், தெலுங்கு, இந்தியில் மீண்டும் மீண்டும் படமாக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் முக்கியமான படங்கள் இரண்டு. 2002யில் ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், மாதுரி தீஷித் நடித்து, இஸ்மாயில் தர்பார் இசையமைத்து, பிநோத் பிரதான் ஒளிப்பதிவு செய்து, சஞ்சை லீலா பன்சாலி மிகுந்த அழகுணர்ச்சியோடு பிரம்மாண்டமாக இயக்கிய படம்.

மற்றொன்று, இவை எதுவுமே இல்லாமல் ஆனால் கதை நம் காலத்தில் நடப்பதுபோல் மிகுந்த நுண்ணுணர்வோடு மாற்றப்பட்டு அனுராக் காஷ்யப்பால் 2009யில் உருவாக்கப்பட்ட நவீன தேவதாஸான, ‘தேவ். டி‘.

பிமல் ராய் மற்றும் சஞ்சை லீலா பன்சாலி படங்களின் உச்சக் காட்சிகளை ஒப்பிட்டுத் தொகுக்கப்பட்ட ஒரு வீடியோ :

இந்த சோக காவியம் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டு வணிக வெற்றியையும் பெறுவது எதனால்?

சிறந்த இந்திய நாவல்களைப் பற்றிய தனது கட்டுரைத் தொகுப்புக்கு ஜெயமோகன் இட்ட தலைப்பு ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’. காரணம், சிறந்த எல்லா இந்திய நாவல்களிலும் இருக்கும் பொதுத்தன்மை அதுதான். இந்திய சினிமாவின் பொதுத்தன்மைகூட கண்ணீர்தான் இல்லையா?

சிறுவயதில் நான் என் அம்மாவோடு சேர்ந்து பார்த்த எல்லாப் படங்களும் கண்ணீர்க் காவியங்கள் தான். படம்விட்டு திரையரங்கிலிருந்து வெளியே வருபவர்கள் எல்லாரும் அழுது சிவந்த கண்களோடு மூக்குச் சீந்தியபடி வரும் காட்சிதான் திரையரங்கு பற்றிய என் ஆரம்பகால நினைவுகளாக இருக்கின்றன.

அப்போதெல்லாம் தமிழகத்தின் எந்த ஊரிலும் இந்தக் காட்சியைப் பார்க்கலாம். பக்கத்துத் திரையரங்குகளில் ரஜினியும், கமலும் சண்டையிட்டுக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால், கூட்டமாகப் பெண்கள் குழந்தைகளுடன், பீம் சிங் இயக்கிய ஏதாவது ஒரு ‘ப’வரிசைப் படத்தின் புத்தம்புதிய காபியைப் பார்க்க பகல் காட்சிக்குச் சென்றுகொண்டிருப்பார்கள்.

ஒரு கேஸ்ட் முழுவதும் சோகப் பாடல்களைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த தேவதாஸ்கள் தெருவுக்கு ஒருவர் அப்போது இருந்தார்கள்.

குடும்பச் சித்திரங்கள் என்று அழைக்கப்பட்ட அழுவாச்சி காவியங்கள் மட்டுமல்ல, எந்த வகையான படத்திலும் ஒரு சோகப் பாட்டாவது இருக்கும். வெறும் சோகமாக இல்லாமல் காவிய சோகமாக அது மாறுமென்றால், தத்துவப் பாடலாகப் பரிணமிக்கும்.

இந்தத் தொடர் முழுவதும், இந்திய சினிமாவின் பொற்காலமான 40கள் முதல் 60கள் வரையான காலத்தின் இந்திப் படங்களின் வீடியோ லிங்குகளை இறுதியில் கொடுத்து வந்திருக்கிறேன். இந்தக் கட்டுரையின் இறுதியிலும் இந்திப் படப் பாட்டுத்தான் ஆனால் தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது.

‘அவன்’ என்கிற ராஜ் கபூர், நர்கீஸ் நடித்த இந்தி டப்பிங் படம், ஒருவகையில் தேவதாஸ் பாணியிலான சோக காவியம். ஒரு படத்துக்குள் எத்தனை விதமான சோகப்பாடல்கள் பாருங்கள். ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் பாடிய இந்தப் பாடல்களில், “அன்பே வா”வும் “கல்யாண ஊர்வலம் வரும்”மும் முன்பு வானொலியில் ஒலிக்கக் கேட்டிருக்கலாம்.

இதில் கடைசியாக இருப்பது ஒரு தத்துவப் பாட்டு. பொதுவாகப் பழைய படங்களில் இவ்வகைப் பாடல்களை யாரோ ஒரு வழிப்போக்கர், அல்லது படகோட்டி பாடுவதுபோல் வைப்பார்கள். இதில் ஒரு குதிரை வண்டிக்காரர் பாடுகிறார். இந்தியில் ராஜ்கபூருக்கு வழக்கமாகக் குரல்கொடுக்கும் முகேஷ் இதில் அவரே நடித்துப் பாடியிருக்கிறார். தமிழில் ஏ.எம்.ராஜா அவருக்குக் குரல்கொடுத்திருக்கிறார்.