image

சாலை

நான் இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சாலை‘. முழுவதும் காஷ்மீரில் படம்பிடிக்கப்பட்டது. சாலைப் பயணம் – உளவியல் திகில் – அறிவியல் புனைவு என்று தொட்டுச் செல்லும் திரைக்கதையின் மையம், இன்றைய இளைஞனுக்கு சமூகத்தின் மீதிருக்கும் விமர்சனங்களும் கேள்விகளும்தான். படத்தின் பணிகள் இன்னும் முடியாததால் மேலதிகத் தகவல்கள் பின்பு வெளியிடப்படும்.

.

அழகு குட்டி செல்லம்

நான் இயக்கி, இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம்,  ‘அழகு குட்டி செல்லம்‘. இந்த உலகம் குழந்தைகளுக்கு உரியது என்பதை மையமாகக் கொண்டது. இங்கு எல்லாமே நம் சந்ததியை மனதில் வைத்தே செய்யப்படுகிறது என்பதையும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய நம்பிக்கையை பூமிக்குக் கொண்டுவருகிறது என்பதையும், பலரது வாழ்க்கைகளின் வழியே விவரிக்கும் திரைக்கதை. விஜய் டிவி ‘நீயா நானா‘ நிகழ்ச்சியின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இசை வேத் சங்கர் சுகவனம், பாடல்கள் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவு விஜய் ஆர்ம்ஸ்ட்ராங், படத்தொகுப்பு பிரவீன் பாஸ்கர், ஒலி வடிவமைப்பு உதயகுமார்.

.

“என் விகடன்” – Theme Song

ஆனந்த விகடன் பத்திரிகை நிறுவனத்துக்காக 5 “தீம் பாடல்களை” இயக்கினேன். கோவை, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய ஐந்து பகுதிகளுக்கும் தனித்தனியாக வரும் ‘என் விகடன்’ இணைப்புப் புத்தகத்தைப் பற்றிய இந்தப் பாடலுக்கு ரமேஷ் விநாயகம் இசையமைத்தார். 5 பாடல்களிலும் பல்லவி ஒன்றாகவே இருக்க, சரணங்கள் மட்டும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மாறும். பொதுப் பல்லவியையும் சென்னைக்கான சரணங்களையும் நா.முத்துக்குமார் எழுதினார். கோவை : தாமரை, திருச்சி : யுகபாரதி, மதுரை : நெல்லை ஜெயந்தா, புதுச்சேரி : கபிலன். ஆனந்த விகடனின் 86ஆம் ஆண்டைக் கொண்டாடவும், அந்தந்தப் பகுதிக்கான ‘என் விகடன்’ இணைப்பின் துவக்கத்தையும் குறிக்கும் விதத்திலும் கோவை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் பிப்ரவரி-மார்ச் 2011 நடந்த விழாக்களில் இந்தப் பாடல்கள் திரையிடப்பட்டன, பிறகு உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாயின.

.

நஞ்சு புரம் – திரைப்படம்

நான் எழுதி, இயக்கி, நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றிய திரைப்படம். பாம்புகளை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி, ஜாதீய ஒடுக்குமுறை என்னும் சமூகத்தீங்கை விமர்சிக்கும் இந்தப் படத்தில், ராகவ், மோனிகா, தம்பி ராமையா, நரேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ஐந்து ஆண்டுகள் கழித்து 2011 ஏப்ரல் 1ஆம் தேதி, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் (இராம. நாராயணன்) மூலமாக வெளியிடப்பட்டது. தேர்வுகள், தேர்தல், உலகக்கோப்பை மற்றும் IPL கிரிக்கெட் போன்ற நெருக்கடிகளுக்கு நடுவில் வெளிவந்திருந்த போதிலும், அனைவருக்கும் வணிகரீதியில் லாபகரமாகவே அமைந்தது என்பது ஆச்சர்யமே. பணியாற்றியவர்களுக்கும் பொதுவாக நல்ல பெயரே கிடைத்தது. குமுதம், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இதழ்களும் பாராட்டின.

.

ரோஜாக் கூட்டம்

நான் இயக்கிய தினசரித் தொடர். ஒரு தனிக் கிராமம் என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான வீடுகளை ஒரே வளாகத்துக்குள் அமைத்துக் கட்டப்படும், ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்புகள், நவீன சென்னையின் புதிய முகமாகவே மாறிவருகின்றன. அத்தகைய குடியிருப்பு ஒன்றில் வாழும் வெவ்வேறு விதமான ஐந்து பெண்களின் வாழ்க்கை, அவர்களுக்குள் இருக்கும் அழகான நட்பைப் பற்றிய கதைதான் ரோஜாகூட்டம். 2009ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது, மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு.

.

இசைக் குடும்பம்

நான் இயக்குனராகப் பணியாற்றிய இசைப் போட்டி நிகழ்ச்சி. இதில் போட்டியாளர்களாகவும் நடுவர்களாகவும், திரைத்துறையைச் சேர்ந்த வளர்ந்த மற்றும் வளர்ந்துகொண்டிருக்கும் பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். சூப்பர் சிங்கர் உள்ளிட்ட மற்ற போட்டிகளைப் போல சீரியஸாக இல்லாமல் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் கேளிக்கைக்காக மட்டுமே நடத்தப்பட்ட திரையிசை நிகழ்ச்சி. 2008ஆம் ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.

.

சவால்

ஃபேஷன் துறையினரையும் திரைத் துறையினரையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் நான் இயக்குனராகப் பணியாற்றினேன். சிங்கப்பூரின் ஃபேஷன் மாணவர்கள், சென்னையில் கேமராக்கள் பொறுத்தப்பட்ட அறைகளில் தங்கி ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆடை வடிவமைத்தார்கள். படத்தின் இயக்குனர் சொன்ன காட்சிச் சூழலுக்குப் பொறுத்தமாகவும் பட்ஜட்டுக்குள்ளும் துணி அணிகளைத் தேடி சந்தைகளில் அவர்கள் அலைந்ததை, புகழ்பெற்ற சினிமா இயக்குனர்களிடமும் ஃபேஷன் டிசைனர்களிடமும் நுணுக்கங்களைக் கற்றதை, உடை தைத்து நடிகர்களுக்குப் போட்டுப்பார்த்ததை, தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டதை என எல்லாவற்றையும் பல கேமரா யூனிட்டுகளாகப் பிரித்துப் படமெடுத்தேன். 2007-08யில் சிங்கப்பூரின் தொலைக்காட்சியான மீடியாகார்ப் டிவி12 சேனலுக்காக இதைத் தயாரித்தவர்கள் ஹம்மிங்பேர்ட் ஃப்லிம்ஸ் நிறுவனத்தார்.

.

ஜில்லுனு ஒரு சேலஞ்

பொது இடங்களில் தேடியலைவதையே போட்டியாகக் கொண்ட இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் 3 தம்பதிகள் கலந்துகொண்டார்கள். 2007யில் விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த வாராந்திர நிகழ்ச்சியை நான் தயாரித்து இயக்கினேன்.

.

மென்பொருள்

சென்னையின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பெருமளவு மாற்றியமைத்த தகவல் தொழில்நுட்பத் துறையைப் பின்னணியாகக் கொண்ட கதை. நான் இயக்கிய இந்தக் குறுந்தொடர் 2007யில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.

.

என் தோழி, என் காதலி, என் மனைவி

தமிழ்த் தொலைக்காட்சியின் முன்னணி நடிகர்களான வேணு அர்விந்த், சேத்தன் போன்றவர்கள் நடித்து நான் இயக்கிய இந்த தினசரித் தொடரை திரைப்பட இயக்குனர் வஸந்த் தயாரித்தார். 2005-06யில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.

.

காத்து கருப்பு

ஒரு இயக்குனராக எனக்கு மிக நல்ல பெயரை உருவாக்கித் தந்த இந்த தினசரித் தொடரில் வாரம்தோறும் ஒரு பேய்க்கதை ஒளிபரப்பாகியது. 2004-05யில் விஜய் டிவிக்காக இதைத் தயாரித்தவர்கள் டைம் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தார்.

.

2000 – 2004

தனியாகப் படம் இயக்கும் பெரும் கனவோடு அலைந்து திரிந்த ஆண்டுகள் இவை. அவ்வப்போது சில உருப்படி இல்லாத, சில உருப்படியான வேலைகளையும் மாறிமாறிச் செய்துகொண்டிருந்தேன். திரு.ரமேஷ் கிருஷ்ணன் இயக்கி, விஸ்வாஸ் ஃப்ளிம்ஸ் தயாரித்து, சினேகா நடித்த, “அது” (2003) என்னும் பேய்ப் படத்தில் நான் துணை இயக்குனராகப் பணியாற்றினேன். ராடண் நிறுவனம் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற “ருத்ர வீணை”, “சிவ மயம்” (2002) ஆகிய தொடர்களில் எபிசோட் டைரக்டராக (தொடருக்குப் பொதுவான இயக்குனர் ஒருவர் இருக்க சில எபிசோடுகளை மட்டும் இயக்குபவராக) பணியாற்றியிருக்கிறேன். அதே ராடாண் நிறுவனம் தெலுங்கில் தயாரித்த ஒரு தொடருக்கு திரைக்கதை எழுதியிருக்கிறேன். ஜெயா டிவியில் ஒரு மாயாஜாலத் தொடருக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். நிம்பஸ் நிறுவனம் தயாரித்த ஒரு வெளிவராத தொடரின் ஆரம்ப 20 அத்தியாயங்களை இயக்கி இருக்கிறேன்.

.

பட்டர்ஃப்ளைஸ்

நான் முதன்முதலில் இயக்கிய தொலைக்காட்சித் தொடர். முழுக்க முழுக்க ஒரு கல்லூரி வளாகத்துக்குள், அங்குள்ள நட்பு, பகை, காதலைச் சுற்றி நடக்கும் கதை. இந்த வாராந்திர தொடரை 1999-2000யில் விஜய் டிவிக்காக யு.டி.வி நிறுவனம் தயாரித்தது.

.

துண்டிக்கப்பட்ட குரல்கள்

நானே சொந்த செலவில் தயாரித்து எழுதி இயக்கிய அரை மணி நேர குறும்படம். மகாபாரத ஏகலைவன் கதையைப் புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி. எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தில் ஏகலைவன் பற்றி வரும் பகுதி என்னை மிகவும் கவர்ந்திருந்ததால் அந்தப் பாதிப்பில் உருவாக்கியது. வழக்கமாக புராணப் படங்களில் வருவது போன்று தங்க அணிகலன்களும் பட்டாடைகளும் இல்லாமல் யதார்த்தமான உடைகளும் ஆயுதங்களும் வடிவமைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டது. இதில் இடம்பெற்ற விரல் துண்டாகும் கிராஃபிக்ஸ் காட்சியும், அர்ஜுனனாக வரும் ராகவ், ஏகலைவனாக வரும் அஜித்குமார் மற்றும் தி.சு.சதாசிவம் ஆகியோரின் நடிப்பும் நிறைய பாராட்டுகளைப் பெற்றது.

.

ஜீ பூம் பா

நான் திரைக்கதை எழுதி இணை இயக்குனனாகவும் பணியாற்றிய குழந்தைகளுக்கான தொடர். ஒரு சிறுவனிடம் இருக்கும் மேஜிக் பென்சிலால் எதை வரைந்தாலும் அது அப்படியே நிஜத்தில் உருவாகி வந்துவிடும் என்பதைக் கருவாகக் கொண்டது. 1999யில் விஜய் டிவிக்காக யு.டி.வி. நிறுவனம் தயாரித்தது. இது தமிழில் அடைந்த வெற்றி மற்றும் கதையம்சம் காரணமாக, யு.டி.வி. நிறுவனம் எனது திரைகதையில் வடநாட்டுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து இந்தியில் “ஷக்கலக்க பூம் பூம்” என்ற பெயரில் மீண்டும் எடுத்தார்கள், இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

.

அகதி

தமிழ் நாடு அரசு திரைப்படக் கல்லூரியில், என் படிப்பின் (1995-97) ஒரு பகுதியாக மூன்றாம் ஆண்டில் நான் எழுதி இயக்கிய குறும்படம். இலங்கைத் தமிழ் அகதிகளின் அவலத்தைப் பின்னணியாகக் கொண்ட இப்படம், ஆயுதத்தால் மேலும் அழிவே ஏற்படும் என்றும் அரசியல் தீர்வே ஒரே வழி என்றும் காட்டியது. சாகித்திய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளரான தி.சு.சதாசிவம், இப்போது தெலுங்கில் இயக்குனராக இருக்கும் என் நண்பன் ஆனந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 1998ஆம் ஆண்டு கேரளாவின் உலகத் திரைப்பட விழாவில் இக்குறும்படம் காட்டப்பட்டது.

.