(ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்!’ கட்டுரையின் மூல வடிவம்)

ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு “ஹேட்ஃபுள் எயிட்” படத்துக்காகப் பெற்றிருக்கிறார், 87 வயது இத்தாலிய இசைமேதை எனியோ மோரிகோனி. 50 வருடங்களாக 500 படங்களுக்கும் மேலாக இசையமைத்து, உலகெங்கும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர் அவர். ஹாலிவுட் படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக்கொண்டிருந்த காலத்தில்கூட தன் சொந்த நாட்டையும் பிறந்த ஊரான ரோம்-ஐயும் விட்டு வெளியேறாத எனியோ மோரிகோனிக்கு இப்போதும் ஆங்கிலம் பேசத் தெரியாது.

இதற்குமுன் 6 படங்களுக்காக பரிசீலனைப் பட்டியலில் இருந்தும் ஆஸ்கார் அவர் கைக்கு எட்டவில்லை. ஆனால் இது அவர் வாங்கும் முதல் ஆஸ்கர் அல்ல. 2007ஆம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அவர் இசையமைத்த படங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நடிகரும் இயக்குநருமான கிளின்ட் ஈஸ்ட்வுட்தான் அன்று விருதை வழங்கி அவரது உரையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். எனியோ மோரிகோனி அந்த மேடையில் சொன்னார், “நான் ஓய்வு பெறப்போவதில்லை மேலும் ஊக்கத்துடன் என் பணிகளைத் தொடர்வேன்”. எல்லாரும் வழக்கமாகச் சொல்வதுதான். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது ஒரு தனிப் படத்தின் இசையமைப்புக்காக இந்த ஆஸ்கர் விருதைப் பெற்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

திரைப்படம் ஒரு காட்சிக் கலை. கதை வசனங்கள் எல்லாம் விசுவலுக்குப் பின்னால்தான். அப்படியானால் இசையின் இடம் என்ன? பின்னணி இசை ஒரு படத்தை வேறு உயரத்துக்குத் தூக்கிச்சென்றுவிட முடியும் என்பதைப் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் எனியோ மோரிகோனி.

“த குட், த பேட், அண்ட் தி அக்லி” படத்தில் ஒரு விசுவல் கவிதை போல, ஒரு மயானக் காட்சி உண்டு. ‘அசிங்கமானவ’னாக வரும் கதாபாத்திரம், நூற்றுக்கணக்கான கல்லறைகளுள் எதிலோ ஒன்றில் புதைக்கப்பட்டிருக்கும் தங்கத்தைத் தேடி ஓடும் வசனமில்லாத காட்சி அது. அவனது கண்களில் தெரியும் பேராசை மெல்லமெல்ல அதிகரித்து வெறியாகவே மாற அவன் ஓடுகிறான். அவனைச் சுற்றி இருப்பவைகளோ இறந்த மனிதர்களின் கல்லறைகள், வாழ்க்கை நிலையில்லாதது என்பதை அறிவிக்கும் சாட்சியங்கள். ஆனால் புதையலைத் தேடி அலைபவனின் கண்களில் மட்டும் ஆசை குறையவேயில்லை. மெல்ல மெல்ல வேகம் அதிகரித்து, இறுதியில் காட்சிச் சட்டத்துக்குள் அவன் ஓரிடத்திலிருக்க, அவனைச் சுற்றி உலகம் சுற்றுவது போலத் தெரியும் கட்டம் அற்புதமானது. இயக்குநர் செர்ஜியோ லியோனி வெறும் ‘கௌபாய்’ சண்டைப்படம் எடுப்பவராக அல்லாமல், திரைக்கலையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுவதற்கு, இத்தகைய காட்சிகளை அவர் உருவாக்கியதே காரணம். நடிப்பும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இணைந்து உருவாக்கிய இந்தக் காட்சிக்கு உயிரூட்டுவது உண்மையில் இசைதான். எனியோ மோரிகோனி இந்தக் காட்சிக்காக அமைத்த பின்னணி இசைக்கோர்வைக்குப் பெயர் “தங்கத்தின் பேரானந்தம்”.

செர்ஜியோ லியோனி எப்போதும் முக்கியமான காட்சித்தொடர்களைப் படம் பிடிப்பதற்கு முன், தனது முன்னாள் பள்ளித் தோழரும் இசையமைப்பாளருமான எனியோ மோரிகோனியிடம் அந்தக் காட்சியை விளக்கி, பின்னணி இசையைப் பதிவுசெய்து வாங்கிக்கொள்வார். பிறகு அந்த இசையைப் படப்பிடிப்புத் தளத்தில் ஒலிக்கச் செய்து, அதற்கேற்பப் படம்பிடிப்பார். இதனாலேயே அவர் படங்களில் வரும் பல காட்சிகள், பாடலைப் படமாக்கியது போல இருக்கும். அந்தக் கல்லறைக் காட்சியும் அதன் தொடர்ச்சியாக வரும் உச்சக் காட்சியில் மூன்றுபேருக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதலும், இதேபோல இசைக்குத் தக்கபடி படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டதுதான்.

லியோனி தனது ஆரம்பகாலப் படங்களை இத்தாலிய மொழியிலேயே எடுத்தார், செலவைக் குறைப்பதற்காக ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்தினார், ஆனால் கதைகளோ அமெரிக்கக் கௌபாய்களைப் பற்றியன. இந்த விநோதக் கலவை காரணமாக, அந்தப் படங்கள் “ஸ்பாகட்டி வெஸ்டர்ன்” (Spaghetti Western) என்ற தனிப் பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றன. அந்தப் படங்களுக்கு இசையமைத்ததின் மூலம்தான் எனியோ மோரிகோனி முதன்முதலில் வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தார்.

பெரிய இசைக் குழுவை வைத்து ஒலிப்பதிவு செய்வதற்கான பட்ஜெட் இல்லாததனால் புதுமையாக, துப்பாக்கி வெடிக்கும் சத்தம், சாட்டையின் சத்தம், விசில், குரல் ஒலிகள், மவுத் ஆர்கன் மற்றும் மோர்சிங் போன்ற சிறுகருவி இசைகளைப் பயன்படுத்தி அவர் அந்தப் படங்களுக்கு இசைகோர்த்தார். அந்தப் புதிய இசைவடிவம் “ஸ்பாகட்டி வெஸ்டர்ன் மியூஸிக்” என்று உலகெங்கும் இன்று தனித்த இசை வடிவமாக அறியப்படுகிறது. “எ ஃபிஸ்ட்ஃபுள் ஆஃப் டாலர்ஸ்” “ஃபார் எ ஃபியூ டாலர்ஸ் மோர்” “த குட், த பேட் அண்ட் தி அக்லி”, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் த வெஸ்ட்’, ‘எ ஃபிஸ்ட்ஃபுள் ஆஃப் டைனமைட்’ ஆகிய லியோனியின் படங்களுக்கு அவர் அமைத்த பின்னணி இசை, தனித் தொகுப்புகளாக ஆடியோ சந்தையில் பெரும் விற்பனைச் சாதனைகளைச் செய்திருக்கின்றன.

இயக்குநர் லியோனி, ஸ்பாகட்டி வெஸ்டர்ன் வகையிலிருந்து வெளிவந்து அமெரிக்கத் தயாரிப்பாளர்களுக்காக இயக்கிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா’, உலகின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குவதற்கு மோரிகோனி அமைத்த மென்மையான இசையும் காரணம். புல்லாங்குழல் இழையோடும் டைட்டில் இசை நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தக்கூடியது. கதாநாயகிக் கதாபாத்திரத்துக்கான தீம் இசையும் மிகப் பிரபலமானது. ஆனால் அந்தப் படத்துக்காக அவருக்கு ஆஸ்கார் நாமினேஷன்கூட கிடைக்கவில்லை.

ரோலண்ட் ஜோஃபே இயக்கிய ‘த மிஷன்’ படத்துக்கு அவர் அமைத்த இசை, தெய்வீகம்! வேறு எப்படியும் அதை விவரிக்க முடியாது. ‘ஓபோ’ என்கிற மரத்தாலான குழல் இசைக் கருவியுடன் எளிமையாக ஆரம்பித்து விரிந்து நிறையும் அதன் தீம் இசையைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நம் கண்கள் பனிக்கும். பின்னணி இசை ஒரு படத்துக்கு எத்தனை ஆழத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இப்போதும் சொல்லப்படும் படம் அது. அந்த இசைக்கு ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்தது, ஆனால் விருது கிடைக்கவில்லை. ஆஸ்கார் விருதுகளின்மேல் நம்பிக்கையை இழக்கவைக்கும் நிகழ்வுகளில் ஒன்று அது.

பிரையான் டி பால்மா இயக்கிய ‘தி அன்டச்சபிள்ஸ்’, பேரி லெவின்ஸ்டனின் ‘டிஸ்குளோசர்’, வுல்ஃப்கேங் பீட்டர்சனின் ‘இன் த லைன் ஆஃப் ஃபயர்’, மைக் நிக்கோலஸின் ‘வுல்ஃப்’ போன்ற பல ஹாலிவுட் வெற்றிப் படங்களையும், பல ஃபிரஞ்சுப் படங்களையும் செய்தபடியே, தன் நாடான இத்தாலியிலும் தொடர்ந்து பணியாற்றினார் அவர். கெஸெபி டோர்னேடோரியின் ‘சினிமா பாரடிஸோ’, ‘மெலினா’, ‘ஸ்டார் மேக்கர்’ ‘லெஜண்ட் ஆஃப் 1900’, ‘பாரியா’ போன்ற உலகப் புகழ்பெற்ற இத்தாலிப் படங்களில் அவருடைய அற்புதமான இசையைக் கேட்கலாம்.

குவெண்டின் டரண்டினோ தன் படங்களுக்கென்று தனியாக இசையமைப்பாளரை வைத்துக்கொள்பவர் அல்ல. காட்சிகளுக்குப் பொருத்தமான இசையை வெவ்வேறு இசைக் கலைஞர்களின் ஆல்பங்களிலிருந்து தேர்ந்தெடுத்து அவற்றுக்கான உரிமத்தைப் பெற்றுப் பயன்படுத்திக்கொள்வார். அப்படி அவர் தன்னுடைய பல படங்களுக்குத் தன் ஆதர்ஸமான எனியோ மோரிகோனியின் இசைத் தொகுதிகளைத் தொடர்ந்து பயன்படுத்தியபடியேதான் இருந்தார். இப்போது ‘ஹேட்ஃபுள் எயிட்’ படத்துக்கு அவரையே முழுமையாக இசையமைக்கவைத்திருக்கிறார். எனியோ மோரிகோனியின் திரை இசைப் பயணம் முழு வட்டத்தை அடைந்ததுபோல, அவருக்கு ஆரம்பத்தில் புகழ் சேர்த்த ஸ்பாகட்டி வெஸ்டர்ன் பாணியிலேயே மிகச் சிறப்பாக இந்தப் படத்துக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

அதற்கு கோல்டன் குளோப் விருது அளிக்கப்பட்டபோது, மோரிகோனியின் சார்பாக டரண்டினோ பெற்றுக்கொண்டார். அப்போது அவர், “எனியோ மோரிகோனி என் விருப்பத்துக்குரிய இசையமைப்பாளர், நான் இசையமைப்பாளர் என்று சொல்லுவது, திரைப்பட இசையமைப்பைப் பற்றி அல்ல, அது ஒரு குப்பை, நான் பேசுவது மொஸார்ட், பீத்தோவன் போன்றவர்களைப் பற்றி” என்றார். பெரும் இசைமேதைகளின் வரிசையில் வைக்கவேண்டிய எனியோ மோரிகோனியை, இந்தத் திரைப்பட விருதுகளை வைத்து அளவிடக் கூடாது என்பதை டரண்டினோ தன் பாணியில் பொட்டில் அறைந்ததுபோல் சொல்லிவிட்டார்.