தாய்ப்பாசம் போல ஒரு இயல்பான மனித உணர்ச்சிதான் நமக்கு தேசபக்தியும். ஆகவே எந்தக் கதையாக இருந்தாலும், அதற்குள் தங்கச்சி செண்டிமெண்டைப் போல தேசபக்திக்கும் ஒரு இடத்தைக் கொடுத்துவிட முடியும்

தேசத்தின் குரல்

இந்திய சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்படும் 40கள் முதல் 60கள் வரையான காலகட்டம் மிக முக்கியமானது. சுதந்திரம் பெற்ற இந்தியா தன்னை ஒரு தேசமாகக் கட்டமைத்துக்கொண்ட காலகட்டம் அது. நேருவின் தலைமையில் பிரிவினைக்கு எதிராகவும் பஞ்சத்துக்கு எதிராகவும் போராடியபடியே வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளங்களை அமைத்துக்கொண்ட காலம்.

இந்தியா விரைவிலேயே உடைந்து சிதறும் என்று உலகமே எதிர்பார்த்திருக்க, அதைப் பொய்ப்பிக்கும் விதமாக, இந்த தேசம் தன்னை ஒரு சுதந்திர ஜனநாயகக் குடியரசாகக் கட்டியெழுப்பிக்கொண்டது. ஒருங்கிணைந்த வலுவான தேசத்தின் பிரதிநிதிகள் என்ற நம்பிக்கையையும், சமூகப் பொறுப்பையும் மக்கள் மனதில் விதைத்ததில் சினிமாவுக்கும் ஒரு பங்கிருக்கிறது.

இரண்டாம் உலகப்போர்க் காலகட்டத்திலேயே சினிமா ஒரு அற்புதமான பிரச்சாரக் கருவி என்பதை உலகெங்கிலும் ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் ஆரம்பித்திருந்தார்கள். ஹிட்லர், ஸ்டாலின் இதில் எத்தர்கள். அவர்களின் நிதியுதவியோடு எடுக்கப்பட்ட படங்களை இன்று பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. அக்காலத்தின் ஆகச் சிறந்த திரைக் கலைஞர்களால் அற்புதமான தரத்தோடு எடுக்கப்பட்டவை அவை. ஆனாலும் அவற்றிலிருக்கும் பிரச்சார நெடி ஒவ்வாமையையே அளிக்கிறது. அந்தக் கலைஞர்கள் தங்கள் ஆன்மாவை அடகுவைத்துவிட்டார்களே என்கிற வருத்தம் ஏற்படுகிறது.

நல்லவேளையாக அப்படி ஒரு நெருக்கடியான நிலைமையை இந்தியத் திரைக் கலைஞர்கள் மீது நேருவும் பட்டேலும் திணித்துவிடவில்லை.

இருந்தபோதும் ‘தேச பக்தி’க்கு ஒரு முக்கியமான இடம் சினிமாவில் இருக்கவே செய்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே கலைஞர்கள் பெரும்பாலும் தேசபக்தர்களாகவே இருந்திருக்கிறார்கள். சுதந்திர வேட்கையை மக்களிடம் கொண்டுசேர்த்ததில் நாடகக் கலைஞர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. பிறகு அது சினிமாவிலும் தொடர்ந்தது. சுதந்திரத்துக்குப் பிறகும் கலைஞர்கள் அந்தப் பிரச்சாரத்தை சிறிய மாற்றத்தோடு தொடர்ந்து செய்யவே செய்கிறார்கள்

வேற்றுமைகள் நிறைந்த இந்த நாட்டில் ஒற்றுமை அவசியமானது என்பதையும், சமத்துவத்தின் தேவையையும் மக்களிடம் பரப்பிக்கொண்டே இருக்கிறது சினிமா. கொஞ்சம் உற்றுக் கவணித்தால் தெரியும், யாரும் ஸ்பான்சர் செய்யாமலேயே ஒரு பெரும் பிரச்சாரத்தைப் பலநூறு கலைஞர்கள் சேர்ந்து நாட்டு நலனுக்காகத் தலைமுறை தலைமுறையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட கட்சி, கொள்கை, தலைவர்களை முன்னிறுத்தாத தேசபக்திப் படங்களை எப்போதும் மக்கள் பிரச்சாரமாகப் பார்ப்பதில்லை. தாய்ப்பாசம் போல ஒரு இயல்பான மனித உணர்ச்சிதான் நமக்கு தேசபக்தியும். ஆகவே எந்தக் கதையாக இருந்தாலும், அதற்குள் தங்கச்சி செண்டிமெண்டைப் போல தேசபக்திக்கும் ஒரு இடத்தைக் கொடுத்துவிட முடியும்.

‘வந்தே மாதரம்’ பாடலை பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் தன்னுடைய ‘ஆனந்த் மத்’ நாவலில்தான் எழுதியிருந்தார். அந்த நாவல் அதே பெயரில் 1952யில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில், வந்தே மாதரத்துக்கு ஹேமந்த் குமார் என்கிற வங்காள இசையமைப்பாளர் அமைத்த மெட்டும், அதை லதா மங்கேஷ்கர் பாடிய விதமும் எத்தனை உணர்ச்சிகரமாக இருக்கிறது பாருங்கள்…

1957யில் வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான ‘மதர் இந்தியா’ நேரடியாக தேசபக்திப் படமல்ல. ஆனாலும் அது முழுக்க முழுக்க தேசக் கட்டுமானத்தைப் பற்றித்தான் பேசுகிறது. கேத்தரின் மாயோ என்கிற அமெரிக்கப் பெண்மணியால் இந்தியாவை மிகவும் தரக்குறைவாகச் சித்தரித்து 1927யில் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூலின் பெயர்தான் ‘மதர் இந்தியா’. அந்தக் களங்கத்தைத் துடைக்கும் நோக்கில் அந்தப் பெயர் படத்துக்குக் கொடுக்கப்பட்டது.

படத்தில் காட்டப்படுகிற கிராமம், உண்மையில் இந்திய தேசம்தான். இந்தப் பாடலின் இறுதியில், இந்திய வரைபட வடிவிலிருக்கும் விவசாய நிலத்துக்குள் கிராம மக்கள் எல்லாரும் நிற்பதுபோல் காட்டப்படுவதும் இதைத்தானே உறுதிப்படுத்துகிறது?

அதே ஆண்டு பி.ஆர்.சோப்ரா இயக்கி வெளிவந்த ‘நயா தோர்'(1957) இன்னொரு பெரும் வெற்றிப் படம். இதுவும் தேசக் கட்டுமானத்தைப் பற்றியதுதான். குதிரை வண்டிக்காரர்கள், அந்த ஊருக்குப் புதிதாக வந்த தனியார் பேருந்துக்காரர்களோடு போட்டிபோட்டு வெல்லும் கதை. எந்திரமயமாக்கலுக்கு எதிராகவும் மகாத்மா காந்தியின் கிராமத் தன்னிறைவுக் கொள்கைக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்ட படம்.

அந்தப் படத்தில் வரும் உற்சாகமான இந்த தேசபக்திப் பாடலைப் போடாமல் தூர்தர்ஷனோ ஆகாஷ்வாணியோ இதுவரை சுதந்திர தினத்தைக் கொண்டாடியதே இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்

ஆஸ்கார் நாமிநேஷன் வரை சென்ற ‘லகான்’ படத்துக்குப் பலவகையிலும் இன்ஸ்பிரேஷனாக அமைந்தது இந்த ‘நயா தோர்’. இறுதியில் நாயகனின் குதிரை வண்டிக்கும் பேருந்துக்கும் இடையே பந்தயம் வைக்கப்படுகிறது. பந்தயத்துக்கு முன், நாயகன் ஒரு குறுக்குப் பாதையை உண்டாக்குவதற்குத் தனியாக உழைக்கிறான். பிறகு மற்ற குதிரைவண்டிக்காரர்களும் மனம்திருந்தி குடும்பத்தோடுவந்து அவனுக்கு உதவுகிறார்கள். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதே இந்த வகையான படங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கருத்தாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்கலாம்.

சுதந்திர இந்தியா சந்தித்த முதல் பிரச்சனையே தேசப் பிரிவினையின்போது நடந்த இந்து முஸ்லிம் மதக் கலவரங்கள்தான். ஆகவே மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகக் கதையின் துணைக் கதாபாத்திரங்களை மாற்று மதத்தினராக வைக்கும் வழக்கம் சினிமாவில் எப்போதும் உண்டு.
1960யில் வெளிவந்த ‘மொஹல் ஏ ஆஸம்’ என்னதான் மொகலாய காலத்துக் காதல் கதையாக இருந்தபோதும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு அதில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். பேரரசர் அக்பரின் மனைவி, ஜோதாபாய் அறிமுகமாகும் காட்சியில் ஒரு முழுநீள இந்து பக்திப் பாடலையே வைத்திருப்பார்கள். இஸ்லாமிய அரசன் தன் அரண்மனைக்குள், தன்னுடைய இந்து மனைவி வழிபடுவதற்காக ஒரு கோயிலையே கட்டிக்கொடுத்திருந்தான் என்கிற வரலாற்று உண்மையை சாதாரண மக்களும் அறியும்படிச் செய்தது அந்தப் படம்.

அதே ஆண்டு வெளிவந்த மேலும் இரண்டு படங்கள் தலைப்பிலேயே தேசத்தைக் கொண்டவை.

ஒன்று, ஒளிப்பதிவாளர் ராது கர்மாகர் முதன்முறையாக இயக்குநராக மாற, ராஜ் கபூர் தயாரித்து நடித்த ‘ஜிஸ் தேஷ் மே கங்கா ரெஹ்தி ஹே’.

மற்றொன்று, பழமைக்கு எதிரான நேரு யுகத்து இளைஞனாக சுனில் தத் நடித்த ‘ஹம் ஹிந்துஸ்தானி’. அதில் இடம்பெறும் தலைப்புப் பாடல் “நேற்றைய கதையை விடுங்கள்” என்றே அறைகூவல் விடுக்கிறது.

இந்தப் படங்களின் காட்சிகளைப் பாருங்கள், தேசபக்தி ஒரு நல்ல வணிக ஃபார்முலாவாக மெல்ல மாறிவிட்டதை உணரமுடியும்.