stanley kubrick

.

எனக்குப் பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் நான் குறைந்தது பத்து பெயர்களையாவது சொல்வதுண்டு, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணங்களுக்காக மிகவும் பிடிக்கும் என்பேன். ஆனால் அந்தப் பட்டியலில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் பெயர் ஸ்டேன்லி க்யூப்ரிக் (STANLEY KUBRICK).

மிகுந்த ஆழமும் மிகுந்த அழகும் ஒருங்கே கைகோர்க்கும் அதிசயத்தை அவரளவுக்கு திரையில் சாதித்தவர்கள் யாரும் இல்லை. அதற்குக் காரணம் அவர் செவ்வியல் தன்மையைத் தனது திரைப்படங்களுக்குக் கொடுத்ததுதான் என்று நான் நினைக்கிறேன். அவரது ஒவ்வொரு படமும் பலநாட்களுக்கு என்னைத் தூக்கமிழக்கச் செய்திருக்கிறது. மிகக் கச்சிதமான படச்சட்டங்களும் (Composition), சிந்தனையைத் தூண்டும் கதைக் களங்களும், பிரமிப்பூட்டும் கதைச் சூழல்களும், இயக்குனரின் இணையில்லாத படைப்பாற்றலும் அந்தப் படங்களைக் காலத்தைத் தாண்டி நிற்கச் செய்திருக்கின்றன..

Spartacusstanley-kubrick

.

ஸ்டேன்லி கியூபிரிக் தனது 49 வருட திரைவாழ்க்கையில் மொத்தம் 13 திரைப்படங்களும் 3 ஆவணப் படங்களும் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால் வேறெவரும் செய்யாத அளவுக்குப் பல்வேறு வகைப் பிரிவுகளில் (Genres) மைல்கல் படங்களை அவர் உருவாக்கியிருக்கிறார்..

வரலாற்றுப் படங்களில் ‘ஸ்பார்டகஸ்’ (Spartacus), அறிவியல் புனைவில் ‘2001 எ ஸ்பேஸ் ஒடிஸ்ஸி’ (2001: A Space Odyssey) போர்ப் படங்களில் ‘ஃபுல் மெடல் ஜாக்கெட்’ (Full Metal Jacket), உளவியல் வன்முறை பற்றிய படங்களில் ‘ஏ க்ளாக்வொர்க் ஆரஞ்ச்’ (A Clockwork Orange), அரசியல் நையாண்டியில் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ்’ (“Dr. Strangelove or How I Learned To Stop Worrying And Love The Bomb”), பாலியல் படங்களில் ‘லொலிடா’ (Lolita), ‘ஐஸ் வைட் ஷட்’ (Eyes Wide Shut), பேய்ப் படங்களில் ‘தி ஷைனிங்’ (The Shinning) ஆகியவைதான் என்வரையில் அந்தந்த பிரிவுகளில் ஆகச் சிறந்தவை.

– சார்லஸ்

stanley-kubrickkubrick

.

ஸ்டேன்லி க்யூப்ரிக் பேட்டிகளில் சொன்னவற்றிலிருந்து

சில துளிகள்:

  • “ஒன்றை நம்மால் எழுத முடியுமென்றால், அல்லது யோசிக்க முடியுமென்றால், அதைப் படமாக்கவும் முடியும்!”
  • “உங்கள் புரிதலை நான் மறுத்துச் சண்டையிடவோ, வேறு விளக்கங்கள் கொடுக்கவோ போவதில்லை. திரைப்படமே உரையாடட்டுமென்று விட்டுவிடுவதே சிறந்த வழி என்று எனக்குத் தெரியும்.”
  • “ஒரு நல்ல திரைப்படம், இலக்கியத்தைவிட இசையையே அதிகம் ஒத்திருக்க வேண்டும். மனநிலைகள் (moods) மற்றும் உணர்வுகளின் (feelings) வளர்ச்சியும் தொடர்ச்சியுமாகவே அது இருக்க வேண்டும். உட்கருத்து, உணர்ச்சியின் பின்னணி, அர்த்தம் என்பதெல்லாம் அதற்குப் பிறகுதான்.”
  • “எனக்கு என்ன வேண்டும் என்று எல்லா சமயங்களிலும் தெரிந்திருப்பதில்லை. ஆனால் எது வேண்டாம் என்பது தெரியும்.”
  • “ஒரு திரைப் படைப்பாளி, தான் எழுதுவதற்காகப் பேப்பர்களை வாங்குகிறபோது, கிட்டத்தட்ட ஒரு நாவலாசிரியருக்கு உரிய சுதந்திரத்தோடுதான் இருக்கிறான்”.

spartacus

.

  • “பள்ளிகள் குழந்தைகளுக்கு எதையாவது கற்பிக்க முயல்வது, அதற்கு பயத்தையே தூண்டுதலாகப் பயன்படுத்துவது, மிகப்பெரிய பிழை என்று நான் நினைக்கிறேன். மதிப்பெண் குறைந்துவிடும் என்கிற பயம், தேர்வில் தோற்று வகுப்புத்தோழர்களைப் பிரிந்துவிடும் பயம் போன்றவை. விருப்பத்தால் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும் பயத்தால் கற்றுக்கொள்வதற்கும், அணுகுண்டு வெடிப்புக்கும் பட்டாசு வெடிப்புக்குமான வித்தியாசம் இருக்கிறது.”
  • “ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்புப் பெற்ற எவருக்கும் தெரிந்திருக்கும், அது பொழுதுபோக்குப் பூங்காவிலிருக்கும் ‘பம்பெர் காரில்’ உட்கார்ந்தபடி “போரும் அமைதியும்” (‘War and Peace’) எழுதுவதற்குச் சமமென்று. ஆனால் இறுதியில் நீங்கள் அதைச் சரியாகச் செய்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையான தருணங்கள் வாழ்வில் அதிகம் இருக்க முடியாது.”
  • “நான் சொல்வது அபத்தமாகத் தோன்றலாம், ஆனால் ஒரு இளம் இயக்குனர் அவசியம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரு கேமராவையும் கொஞ்சம் படச்சுருளையும் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு வகைப் படத்தை எடுத்துப்பார்ப்பதுதான்.”
  • “ஒருவேளை லியணார்டோ (Leonardo Da Vinci) தனது ‘மோனா லிசா’ ஓவியத்துக்கு அடியில் “இந்தப் பெண்மணி தனது காதலனிடமிருந்து ஒரு ரகசியத்தை மறைப்பதற்காகவே புன்னகைக்கிறாள்” என்று எழுதிவைத்திருந்தால் நமக்கு எப்படி இருந்திருக்கும்? அது பார்வையாளரை நிதர்சனத்தோடு விலங்கிட்டுப் பிணைத்திருக்கும். ‘2001 எ ஸ்பேஸ் ஒடிஸி’ படத்துக்கு அந்த நிலை ஏற்படுவதை நான் விரும்பவில்லை.”.

2001 A Space Odyssey

.

  • “பூமிக் கிரகம் அழிந்தால், அது விண்வெளியின் சமநிலையில் எவ்வித குறிப்பிடத்தகுந்த மாறுதலையும் ஏற்படுத்தாது.”
  • “எழுத்தாளர்கள், ஓவியர்கள், திரைப்படம் எடுப்பவர்கள் எல்லாம் செயலாற்றுவதற்குக் காரணம் அவர்களுக்குச் சொல்வதற்கு ஏதோ குறிப்பாக இருக்கிறது என்பதால்தான் என்று நான் நினைக்கவில்லை. அந்தக் கலை வடிவத்தின்மேல் அவர்களுக்கு உள்ள விருப்பமே காரணமாக இருக்கும். அவர்களுக்கு சொற்கள் பிடித்திருக்கலாம், அல்லது வண்ணக் கலவையின் வாசனை பிடித்திருக்கலாம், அல்லது படக்காட்சிகளோ நடிகர்களுடன் பணியாற்றுவதோ பிடித்திருக்கலாம். எந்த அசலான கலைஞனும் தன்னுடைய தனித்த பார்வைக்காகவே உருவாகி வந்ததாக அவரே நம்பினாலும் நான் நம்பவில்லை.”
  • “மனித மனத்தில் உள்ளிருப்பாகவே சில தவறுகள் உள்ளன. அதன் ஒரு பக்கம் தீயவைகளினால் ஆனது. பேய்க்கதைகள், நமது ஆழ்மனத்தின் மாதிரி வடிவமொன்றைக் கண்முன் கொண்டுவந்து காட்டுகின்றன. இருண்ட பகுதியை அதனோடு நேரடியாக மோதவேண்டிய அவசியம் இல்லாமல் பார்க்கும் வாய்ப்பை நாம் பெறுகிறோம். அதோடு ஆவிக் கதைகள், மனிதர்களுக்கு முடிவில்லாத வாழ்வின் மீதிருக்கும் பேராவலையே தெரிவிக்கின்றன. உங்களுக்கு ஆவி பயம் இருந்தால், நீங்கள் ஆவியின் இருப்பை நம்பியாக வேண்டும். அப்படி ஆவி இருக்கிறதென்றால் இறப்பு ஒரு முடிவல்ல என்றாகிவிடும்.”.

the shiningThe Shining

.

  • “வல்லரசுகள் எப்போதும் தாதாக்களாகவே (Gangsters) நடந்துகொள்கின்றன, சிறிய தேசங்கள் விபச்சாரிகளைப் போல”
  • “எப்போதுமே திரைப்படங்களில் வன்முறை ஒரு அளவுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது எல்லாரையும் எது எரிச்சலூட்டுகிறது என்றால், நான் வன்முறையின் பின்விளைவுகளையும் காட்டுகிறேன் என்பதே.”
  • “எனக்கு எப்போதுமே குற்றவாளிகளின் மீதும் கலைஞர்களின் மீதும் சார்புநிலை உண்டு, எனது பலவீனம் அது. அந்த இருவகையினரும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. எந்த ஒரு துயரக் கதையிலும், உலகியல் நடைமுறையுடனான ஒரு முரண்பாடு இருக்கும்.”.

.

  • “இங்மார் பெர்க்மன், விட்டோரியொ டி சிகா, ஃபெடெரிகோ ஃபெலினி ஆகிய மூவர் மட்டும்தான் உலகிலேயே சந்தர்ப்பவாத திரைக்கலைஞர்கள் அல்ல என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வெறுமனே உட்கார்ந்து, நல்ல கதை கிடைக்கும்வரைக் காத்திருந்துவிட்டு, கிடைத்ததும் படமெடுப்பவர்கள் அல்ல. அவர்களுக்கென்று வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை இருக்கிறது, அதை அவர்கள் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப தங்கள் படங்களின் வழியே வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.”
  • “நான் எப்போதுமே மிகப் பெரிய வெற்றிகளை என் படங்களின் மூலம் அடைந்ததில்லை. என் மீதான நன்மதிப்பு மிக மெதுவாக வளர்ந்த ஒன்று. என்னைப் பலரும் பாராட்டுவதால் நான் ஒரு வெற்றிகரமான இயக்குனர் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் என்னுடைய எந்தவொரு படமும் ஒட்டுமொத்தமாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதே இல்லை, வியாபார ரீதியிலும் பெருவெற்றி பெற்றதில்லை.”.

.

  • “நான் ஆரம்ப நாட்களில் செய்ததைப்போல, நீங்கள் மட்டுமே முழுவேலைகளையும் செய்து தனியாக ஒரு படத்தை எடுத்துவிட நினைத்தால், உங்களுக்கு வேறு எதைப் பற்றி வேண்டுமானாலும் நிறைய விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஒளிப்பதிவைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.”
  • “காட்சி வடிவமைப்பின் சாரம் என்னவென்றால், ஒரு கருத்து வெளிப்படையாக சொல்லப்படாமலே மக்களிடம் சென்று சேரவேண்டும். நீங்கள் ஒன்றை நேரடியாக சொல்லும்போது ஏற்படும் பாதிப்பை விட, மக்கள் தாங்களாகவே கண்டறியும்படி செய்யும்போது அது ஏற்படுத்தும் பாதிப்பு மிகப் பெரியது.”.

.