Neerparavai-movie

இணையத்தில் கேபிள் சங்கர் போன்றவர்கள் எழுதுவது ரிவ்வியூ வகை விமர்சனங்கள். ஒரு படம் வெளியானவுடன் சுடச்சுட எழுதப்படுபவை. அதன் வாசகர்கள் அதைப் படித்துப் படத்தைப் பார்ப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்கள். பொதுவாக அந்த விமர்சகருக்குப் படம் பிடித்திருந்தால் விமர்சனம் நீளமாகவும், பிடிக்கவில்லையென்றால் சுருக்கமாகவும் இருக்கும். ஆனால் இலக்கியப் பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனம் எழுதும் விமர்சகர்கள், ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் தான் நீளநீளமாக எழுதுகிறார்கள். திட்டுறதுலதான் என்னா ஒரு சந்தோஷம்?

நீர்ப்பறவை: மீனவர் வாழ்வியலில் கட்டமைக்கப்படும் இந்துத்துவ அரசியல்” என்கிற கௌதம சித்தார்த்தனின் விமர்சனக் கட்டுரையை (தீராநதி, ஜனவரி 2013) சமீபத்தில் படித்து ஆச்சர்யப்பட்டேன். ‘கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்’ என்பது உண்மைதான் போல. ஜெயமோகன் வசனம் எழுதியிருப்பதால் அதில் நிச்சயம் இந்துத்துவம் இருக்கும் என்கிற நம்பிக்கையோடு தேடி, அந்தக் கிறிஸ்தவப் பின்னணிகொண்ட கதையில் கூட இந்துத்துவ அரசியலை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார் அவர்.

அந்தப் படத்தில், ஒரு கிறிஸ்தவ மீனவ குடும்பத்தில் வளரும் ஹீரோ குடிக்கு அடிமையாகிவிடுகிறான். அவனைக் குடிநோயிலிருந்து மீட்கும் அமைப்பு இந்து அடையாளங்களோடு இருக்கிறது. இது ஒரு இந்துத்துவ நுண்ணரசியலாம். இந்துக்கள் ஹீரோவை மீட்பதுபோல வரும் காட்சிக்கு அடுத்து, முஸ்லிம் பாய் சமுத்திரக்கனி, ஹீரோவுக்கு படகு கட்டிக்கொடுத்து நமாஸ் ஓதி அதை கடலில் இறக்கிவிடுவதாகவும் காட்சிகள் வருகின்றன. அவற்றில் எதுவும் நுண்ணரசியல் இருப்பதாகத் தெரியவில்லை போலும்.

மதநல்லிணக்கம் என்று எதுவும் இயக்குனர் காட்ட விரும்பினால், ஒரு இந்துக் குடிகாரனை கிறிஸ்தவ அமைப்பு ஒன்று திருத்தி மறுவாழ்வு அளித்தது என்று தான் காட்டவேண்டும் போல. மாற்றிக் காட்டிவிட்டால் அது இந்துத்துவா ஆகிவிடும். மேலும் படம் நெடுகிலும் வரும் அந்த நேர்மையாளனான முஸ்லீம் கதாபாத்திரமும் அவரது உதவியாளர் பாத்திரமும் வெள்ளைக் குல்லாவோடும் மத அடையாளங்களோடும் வருவதைப் பற்றி எந்த விமர்சனமும் சொல்லாத கட்டுரையாளர், கொஞ்சமே வரும் அந்த இந்து டாக்டர் திருநீறு அணிந்திருப்பதைப் பெரும் குறையாக மதத் திணிப்பாகச் சொல்கிறார்.

பட இறுதியில் அந்த மீனவத் தாய், ‘என் புருஷன நான் தான் கடலுக்குப் போகச் சொன்னேன்.. அதனால நான் தான் அவர கொன்னுட்டேன்’ என்று சொல்வதிலும் இந்துத்துவம் இருக்கிறதாம். மீனவர்களைக் கொன்ற இலங்கை ராணுவத்தைக் குறைசொல்லாமல் அவள் தன்னுடைய விதியையும் முன்ஜென்ம வினையையும் நொந்துகொள்வதுபோல் அந்த வசனம் இருக்கிறதாம். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சிங்களர்களையும் அதற்குத் துணைபோகும் இந்திய அரசையும் அவள் நியாயப்படுத்திவிடுகிறாளாம்.

ஆனால் அந்தக் காட்சிக்கு அடுத்ததாகவே, அவள் கோர்ட்டில் நீதிபதியைப் பார்த்து ‘என் புருஷனையும் சேர்த்து எத்தனையோ மீனவர்கள சுட்டுக் கொன்னுருக்காங்களே.. இந்திய அரசாங்கம் எங்கள காப்பாத்த என்ன செஞ்சுச்சு?” என்று கேட்கிறாள். அதில் வெளிப்படையாகவே பேசப்படும் அரசியல் பற்றி இந்தக் கட்டுரையாளர் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. அதுதான் எனக்குப் பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.

கோர்ட்டில் நாயகி, “நாங்க என்ன உங்கள மாதிரி படிச்சவங்களா..? நாங்க உங்களப் பாத்து பயந்தோம்.. மீனவன் இந்த நாட்டுல அநாதை!” என்றும் சொல்கிறாள். இதைப் பற்றியும் கூட கௌதம சித்தார்த்தன் தன் கட்டுரையில் ஒரு வரியும் எழுதவில்லை. சமுத்திரகனியின் கதாபாத்திரம் படத்தில் சில இடங்களில் சமகால அரசியல், மீனவர் பிரச்சனை பற்றிப் பேசுகிறது. இப்படி வெளிப்படையாகப் பேசப்பட்ட அரசியலை எல்லாம் விமர்சகர் முழுக்கத் தவிர்த்துவிட்டு, படத்தில் அடியாழத்தில் இருப்பதாகத் தோண்டியெடுத்து ஒரு அரசியலைக் கொண்டுவந்து காட்டுகிறார். ஏமாளிப் பார்வையாளர்களின் மனதில் விதைப்பதற்காகவே திட்டமிட்டு இவை புதைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டவும் செய்கிறார்.

நீர்ப்பறவை படத்தில் குறைசொல்ல வேறு விஷயங்கள் இருந்தும், அரசியல் பற்றிப் பிரதானமாக எழுதப்படுவது எதனால்? மீனவர்கள் கொல்லப்படுவது ஒரு அரசியல் பிரச்சனையாக இருக்கும் காலக்கட்டத்தில் இந்தப் படம் வந்திருப்பதால் – என்றால், அந்தப் படம் வெளிப்படையாக பிரதானமாக முன்வைக்கும் அரசியல் பற்றியல்லவா விமர்சகர் பேசியிருக்க வேண்டும்? ஆனால் அவற்றை ஒருவரியில் கூட குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டு, தானாக ஒரு அரசியலைத் தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாரே என்பதே எனது ஆச்சர்யத்துக்குக் காரணம். சீனு ராமசாமிக்காகவோ ஜெயமோகனுக்காகவோ வக்காலத்து வாங்குவது என் வேலையல்ல, நீர்ப்பறவை பற்றி எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருப்பதின் நோக்கம், பொதுவாகவே திரைப்பட விமர்சனங்களை எழுதுகிறவர்கள் அதிலிருக்கும் கலையம்சத்தைக் காட்டிலும், அரசியல் உள்நோக்கம் அல்லது ‘நுண்ணரசியல்’ பற்றியே அதிகமும் கவலைப்படுகிறார்களே, அது ஏன் என்கிற என் ஆதங்கத்தை முன்வைப்பதற்காகத்தான்.

கௌதம சித்தார்த்தன் மற்றப் படங்களுக்கு எழுதியிருக்கும் விமர்சனங்களின் தலைப்புகளை மட்டும் படியுங்கள் நான் சொல்லவருவது புரியும்:- “அட்ட கத்தி தான் தலித் வாழ்வியலா” “சுந்தர பாண்டியனின் சாதி அரசியல்” “மாற்றான்: சர்வதேச அரசியலின் பாக்கெட் நாவல்” “துப்பாக்கி: ஸ்லீப்பர் ஸெல் அரசியல்”. அப்படின்னா எல்லாப் படத்துலயும் ஒரு அரசியல் இருக்குது. பாவப்பட்ட மக்களுக்கு தெரியாம அதை இயக்குனர்களும் கதாசிரியர்களும் ஒளிச்சு வச்சிருக்காங்க. விமர்சகர்கள் அதைத் தேடிக் கண்டுபிடிச்சி மக்கள் கிட்ட கொண்டுபோய்ச் சேக்குறாங்க. சரிதான்.

பலகாலமாக அறிவுஜீவி விமர்சகர்கள் இந்த போஸ்ட்மார்ட்டம் வேலையைத்தான் செய்கிறார்கள். அந்த ஒட்டுமொத்தப் போக்கைப் பற்றிய என் ஆதங்கமே இது, அல்லாமல் கௌதம சித்தார்த்தனை முன்வைத்து இதை நான் எழுதுவதால், அவரோடு எனக்கேதும் வாய்க்கால் தகராறு இருக்குமென்று ஒரு ‘அரசியல் உள்நோக்கத்தை’ நீங்களாக கற்பித்து ஏதும் அறிவுஜீவித்தனமாக யோசிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

[மேலும்]